குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

உலக ஹோமியோபதி தினத்தை முன்னிட்டு ஹோமியோபதி கருத்தரங்கை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்

Posted On: 10 APR 2024 12:56PM by PIB Chennai

உலக ஹோமியோபதி தினத்தை முன்னிட்டு இன்று (ஏப்ரல் 10, 2024) புதுதில்லியில் ஹோமியோபதி ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த இரண்டு நாள் ஹோமியோபதி கருத்தரங்கை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் , எளிமையான மற்றும் எளிதில் அணுகக்கூடிய சிகிச்சை முறையாக ஹோமியோபதி முறை பல நாடுகளில் பின்பற்றப்பட்டு வருகிறது என்றார். உலகம் முழுவதும், சர்வதேச, தேசிய மற்றும் உள்ளூர் மட்டங்களில் பல நிறுவனங்கள் ஹோமியோபதியை ஊக்குவித்து வருவதாகக் கூறிய அவர், இந்தியாவில் ஹோமியோபதி மருத்துவத்தை ஊக்குவிப்பதில் ஆயுஷ் அமைச்சகம், மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சி கவுன்சில், தேசிய ஹோமியோபதி ஆணையம், தேசிய ஹோமியோபதி நிறுவனம் மற்றும் மத்திய அரசின் அனைத்து நிறுவனங்களையும் பாராட்டினார்.

21 ஆம் நூற்றாண்டில் ஆராய்ச்சியின் முக்கியத்துவம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக குடியரசுத் தலைவர் தெரிவித்தார். எனவே, இந்த கருத்தரங்கின் கருப்பொருளான 'ஆராய்ச்சியை மேம்படுத்துதல், தேர்ச்சியை மேம்படுத்துதல்' என்பது மிகவும் பொருத்தமானது. ஹோமியோபதி மருத்துவத்தைப் பின்பற்றுவதுடன், அதனை மேலும் பிரபலத்துவதில், ஆராய்ச்சி மற்றும் தேர்ச்சி முக்கியப் பங்கு வகிக்கும் என்று அவர் கூறினார்.

ஹோமியோபதி மருத்துவத்தின் மகிமையால் பயனடைந்தவர்கள், பல்வேறு முறைகளில் சிகிச்சை பெற்று ஏமாற்றமடைந்தவர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்று குடியரசுத் தலைவர் கூறினார். ஆனால், அத்தகைய அனுபவங்களை அறிவியல் சமூகத்தில் உண்மைகள் மற்றும் பகுப்பாய்வுகளுடன் முன்வைக்கும்போது மட்டுமே அங்கீகரிக்க முடியும். பெரிய அளவில் செய்யப்படும் இத்தகைய உண்மை பகுப்பாய்வு உண்மையான மருத்துவ ஆராய்ச்சி என்று அழைக்கப்படுகிறது. விஞ்ஞான ரீதியாக இந்த மருத்துவ முறையின் மீதான மக்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்க செய்வது அவசியமாகும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஆரோக்கியமான மக்களால் மட்டுமே ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று கூறிய குடியரசுத் தலைவர், ஆரோக்கியமான தேசம் என்பது ஆரோக்கியமான சமுதாயத்தின் அடித்தளத்தின் மீதுதான் கட்டமைக்கப்படுகிறது என்றார். ஆரோக்கியமான, வளமான மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் அனைத்து சுகாதார வல்லுநர்களும் தங்களது மதிப்புமிக்க பங்களிப்பை வழங்குவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார் .

***

PKV/RR/KV

 

 

 

 


(Release ID: 2017585) Visitor Counter : 108