குடியரசுத் தலைவர் செயலகம்
புற்றுநோய்க்கான உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதலாவது மரபணு சிகிச்சையை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்
Posted On:
04 APR 2024 2:03PM by PIB Chennai
புற்றுநோய்க்கான உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதலாவது மரபணு சிகிச்சையை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு மும்பை ஐஐடியில் இன்று (2024 ஏப்ரல் 04) தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், இந்தியாவில் இந்த வகையிலான மரபணு சிகிச்சை தொடங்கப்பட்டிருப்பது, புற்றுநோய்க்கு எதிரான நமது போராட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனை என்று கூறினார். சிஏஆர்-டி செல் சிகிச்சை" என்று பெயரிடப்பட்ட இந்த சிகிச்சை முறையை எளிதாக குறைந்த கட்டணத்தில் மேற்கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்தார். இது முழு மனிதசமுதாயத்திற்கும் புதிய நம்பிக்கையை அளிப்பதாக அவர் குறிப்பிட்டார். எண்ணற்ற நோயாளிகளுக்கு புதிய வாழ்க்கையை அளிப்பதில் இது வெற்றிகரமாக அமையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சிஏஆர்-டி செல் சிகிச்சை மருத்துவ அறிவியலில் மிகவும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களில் ஒன்றாக கருதப்படுகிறது என்று குடியரசுத் தலைவர் கூறினார். இந்த சிகிச்சை சில காலமாக வளர்ந்த நாடுகளில் கிடைக்கிறது என்றும், ஆனால் இதற்கான கட்டணம் அதிகம் என்பதால் உலகில் பெரும்பாலான நோயாளிகளுக்கு கிடைப்பதில்லை என்றும் அவர் தெரிவித்தார். இன்று தொடங்கப்பட்டுள்ள சிஏஆர்-டி செல் சிகிச்சைக்கான கட்டணம் உலகிலேயே குறைவானது என்பதை அவர் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். 'மேக் இன் இந்தியா' முயற்சிக்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்றும், தற்சார்பு பாரதத்தின் ஒளிரும் உதாரணமாகத் திகழ்கிறது என்றும் குடியரசுத் தலைவர் கூறினார்.
***
SM/IR/AG/KV/DL
(Release ID: 2017185)
Visitor Counter : 240