பிரதமர் அலுவலகம்

மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 19 JAN 2024 3:18PM by PIB Chennai

மகாராஷ்டிர ஆளுநர் திரு ரமேஷ் பெய்ன்ஸ் அவர்களே, முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே அவர்களே, துணை முதலமைச்சர்கள் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ் அவர்களே, திரு அஜித் தாதா பவார் அவர்களே, மகாராஷ்டிர அரசின் இதர அமைச்சர்களே, மக்கள் பிரதிநிதிகள் திரு நரசய்யா ஆதம் அவர்களே, சோலாப்பூரின் சகோதர, சகோதரிகளே, வணக்கம்.

பண்டரிபுரத்தின்  பகவான் விட்டல் மற்றும் சித்தேஷ்வர் மகராஜை நான் தலை வணங்குகிறேன். இந்தக் காலகட்டம் நம் அனைவருக்கும் பக்தி நிறைந்தது. ஜனவரி 22-ம் தேதி நமது பகவான் ராமர் தனது அற்புதமான கோவிலில் வெளிப்படவிருக்கும் ஒரு வரலாற்று தருணம் நெருங்கி வருகிறது. ஒரு கூடாரத்தில் எங்கள் வணக்கத்திற்குரிய தெய்வத்தை தரிசிக்கும் பல தசாப்த கால காத்திரிப்பு இப்போது முடிவுக்கு வருகிறது. ராமர் கோயிலில் கும்பாபிஷேக விழாவிற்கு முன்னதாக எனது சபதங்களை கண்டிப்பாகக் கடைப்பிடிக்கிறேன். இந்த 11 நாட்களும் உங்கள் ஆசியுடன் இந்த ஆன்மீகப் பயிற்சியை வெற்றிகரமாக மேற்கொள்வேன் என்று நம்புகிறேன்.

நண்பர்களே,

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள பஞ்சவடி பூமியிலிருந்து எனது விரதம் தொடங்கியது என்பது, ஒரு தற்செயல் நிகழ்வுதான். மகாராஷ்டிராவில் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பங்கள் ஜனவரி 22 அன்று தங்கள் வீடுகளில் ராமர் ஜோதியை (விளக்கு) ஏற்றுவார்கள் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

இப்போது, கடவுள் ராமரின் பெயரில் உங்கள் செல்பேசிகளின் டார்ச் லைட்டை இயக்கி, ராமர் ஜோதியை ஏற்ற உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள். இன்று, மகாராஷ்டிராவின் பல்வேறு நகரங்களில் 2000 கோடி ரூபாய் மதிப்பிலான ஏழு அமிர்தத் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. சோலாப்பூர் மக்களுக்கும், மகாராஷ்டிராவில் வசிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் மாண்புமிகு முதலமைச்சர் கூறியதை கேட்டுக் கொண்டிருந்தேன், பிரதமர் மோடியால் மகாராஷ்டிராவின் பெருமை கணிசமாக அதிகரித்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார். திரு. ஷிண்டே அவர்களே, இதைக் கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது, குறிப்பாக அரசியல்வாதிகள் இத்தகைய அறிக்கைகளைப் பாராட்டுகிறார்கள். இருப்பினும், உண்மை என்னவென்றால், மகாராஷ்டிரா மக்களின் கடின உழைப்பு மற்றும் உங்களைப் போன்ற முற்போக்கான அரசின் காரணமாக மகாராஷ்டிராவின் பெயர் பிரகாசிக்கிறது. எனவே, ஒட்டுமொத்த மகாராஷ்டிராவும் பாராட்டுக்குரியது.

நண்பர்களே,

நமது வாக்குறுதிகளின் கொள்கைகளை நிலைநிறுத்த ராமர் எப்போதும் நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளார். சோலாப்பூரில் ஆயிரக்கணக்கான ஏழை மக்களுக்காகவும், ஆயிரக்கணக்கான சக தொழிலாளர்களுக்காகவும் நாங்கள் அளித்த வாக்குறுதி தற்போது நிறைவேறியுள்ளது, எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று, பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட நாட்டின் மிகப்பெரிய அமைப்பின் திறப்பு விழா நடைபெற்றது.  இவற்றைப் பார்க்கும்போது உள்ளத்துக்கு அவ்வளவு திருப்தி ஏற்படுகிறது. ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கனவுகள் நனவாகும்போது, அவர்களின் ஆசீர்வாதங்கள் எனது மிகப்பெரிய சொத்து. இந்தத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட நான் வந்தபோது, உங்கள் வீடுகளின் சாவியை வழங்க நானே நேரில் வருவேன் என்று உறுதியளித்தேன். அந்த வாக்குறுதியை இன்று மோடி நிறைவேற்றியுள்ளார். மோடியின் உத்தரவாதம் நிறைவேறுவதற்கான உத்தரவாதம் என்பது உங்களுக்குத் தெரியும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மோடியின் உத்தரவாதம் என்பது நிறைவேற்றத்திற்கான முழுமையான உத்தரவாதம் என்பதாகும்.

என் குடும்ப உறுப்பினர்களே,

நாட்டில் நல்லாட்சியை நிறுவவும், கடவுள் ராமரின் கொள்கைகளைப் பின்பற்றி நேர்மையின் ஆட்சியை நிறுவவும் எங்கள் அரசு முதல் நாளிலிருந்தே முயற்சித்து வருகிறது.  2014-ல் எங்கள் அரசு ஆட்சிக்கு வந்தபோது, ஏழைகளின் நலனுக்காக எனது அரசு அர்ப்பணிப்புடன் உள்ளது என்று கூறினேன். எனவே, ஏழைகளின் கஷ்டங்களைக் குறைத்து, அவர்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்காக திட்டங்களை ஒன்றன்பின் ஒன்றாக நாங்கள் செயல்படுத்தினோம்.

வீடுகள் மற்றும் கழிப்பறைகள் இல்லாததால், ஏழைகள் ஒவ்வொரு நிலையிலும் அவமானங்களை எதிர்கொண்டனர். இது, குறிப்பாக நமது தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு கடுமையான சோதனையாக இருந்தது. எனவே, எங்களது முதல் கவனம் ஏழைகளுக்கு வீடுகள் மற்றும் கழிப்பறைகள் கட்டுவதில் இருந்தது. 10 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகளைக் கட்டி ஏழைகளுக்கு வழங்கியுள்ளோம்.

 

எங்கள் அரசு ஏழைகளின் நலனுக்கு முன்னுரிமை அளித்து, அவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களைத் தொடங்கியபோது, அதன் பலன்கள் கண்கூடாகத் தெரிகின்றன. எங்கள் அரசின் ஒன்பது ஆண்டுகளில், 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து உயர்த்தப்பட்டுள்ளனர். இது சிறிய எண்ணிக்கை அல்ல; இது பத்து வருட அர்ப்பணிப்பின் விளைவாகும். இது ஏழைகளின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் என்ற உறுதியின் விளைவாகும். நீங்கள் உண்மையான நோக்கம், அர்ப்பணிப்பு மற்றும் ஒருமைப்பாட்டுடன் பணிபுரியும்போது, முடிவுகள் உங்கள் கண்களுக்கு முன்னால் தெரியும். இது நமது சக குடிமக்களிடமும் வறுமையை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மிக்க நன்றி.

***

PKV/BR/KV

 



(Release ID: 2016362) Visitor Counter : 28