பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜம்முவில் பல்வேறு திட்டங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 20 FEB 2024 3:53PM by PIB Chennai

பாரத் மாதா கி – ஜே!

பாரத் மாதா கி – ஜே!

பாரத் மாதா கி – ஜே!

 

ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அவர்களே, அமைச்சரவையில் எனது சகா ஜிதேந்திர சிங் அவர்களே, நாடாளுமன்றத்தில் உள்ள எனது தோழர்கள் ஜுகல் கிஷோர் அவர்களே, குலாம் அலி அவர்களே, ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த எனதருமை சகோதர, சகோதரிகளே,

நண்பர்களே,

நான் ஏற்கனவே கூறியது போல், உங்களுடனான எனது தொடர்பு இப்போது 40 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. நான் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். ஜம்முவுக்கு பல முறை  பயணித்துள்ளேன்.

நண்பர்களே,

'வளர்ச்சியடைந்த பாரதம், வளர்ச்சியடைந்த ஜம்மு-காஷ்மீர்' மீது நாம் காணும் உற்சாகம் உண்மையிலேயே முன்னெப்போதும் இல்லாதது. இந்த உற்சாகத்தை 'வளர்ச்சியடைந்த பாரதம் லட்சிய யாத்திரையின்' போது நாம் கண்டோம். மோடியின் வாகனம் ஒவ்வொரு கிராமத்தையும் சென்றடைந்தபோது, நீங்கள் அனைவரும் அதை சிறப்புடன் வரவேற்றீர்கள். ஜம்மு-காஷ்மீர் வரலாற்றில் ஒரு அரசு அவர்களின் வீட்டு வாசலுக்கு வருவது இதுவே முதல் முறையாகும்.

சகோதர சகோதரிகளே,

ஜம்மு-காஷ்மீரில் இருந்து ஏமாற்றத்தின் செய்திகள் மட்டுமே வந்த ஒரு காலம் இருந்தது. வெடிகுண்டுகள், துப்பாக்கிகள், கடத்தல்கள் மற்றும் தனிமைப்படுத்தல் ஆகியவை ஜம்மு-காஷ்மீரின் துரதிர்ஷ்டமாக மாறியிருந்தன. ஆனால் இன்று, ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சியை அடையும் தீர்மானத்துடன் முன்னேறி வருகிறது. இன்று, 32,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன அல்லது அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் கல்வி, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு, சுகாதாரம், தொழில் மற்றும் இணைப்பு தொடர்பானவை. இன்று, நாட்டின் பல்வேறு நகரங்களுக்காக பல திட்டங்கள் இங்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்கள் பல்வேறு மாநிலங்களில் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. இந்த அனைத்து வளர்ச்சித் திட்டங்களுக்காகவும் ஜம்மு-காஷ்மீருக்கும், ஒட்டுமொத்த நாட்டிற்கும், நாட்டின் இளைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். இன்று நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு அரசின் பணி நியமனக் கடிதங்கள் இங்கு வழங்கப்பட்டுள்ளன. நான் அனைத்து இளம் நண்பர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சகோதர சகோதரிகளே,

ஜம்மு-காஷ்மீரை வளர்ச்சியடையச் செய்ய ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் மீது எங்கள் அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது.

நண்பர்களே,

10 ஆண்டுகளுக்கு முன்பு வரை, கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையில் இந்த அளவில் சிந்திப்பது கடினமாக இருந்தது. ஆனால் இது புதிய பாரதமாகும். புதிய பாரதம் தனது தற்போதைய தலைமுறைக்கு நவீனக் கல்வியை வழங்க முடிந்தவரை செலவிடுகிறது. கடந்த 10 ஆண்டுகளில், நாட்டில் சாதனை எண்ணிக்கையிலான பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் கட்டப்பட்டுள்ளன. இங்கு ஜம்மு காஷ்மீரில் மட்டும் சுமார் 50 புதிய பட்டப்படிப்பு கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளன. 45,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர், இவர்கள் முன்பு பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள். இந்தப் பள்ளிகள் மூலம் நமது பெண்கள் அதிக அளவில் பயனடைந்திருக்கிறார்கள் என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இன்று, அவர்கள் தங்கள் வீடுகளுக்கு அருகிலேயே சிறந்த கல்வியைப் பெற முடிகிறது.

சகோதர சகோதரிகளே,

இன்று, ஜம்மு காஷ்மீரில் சுகாதார சேவைகளில் விரைவான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டுக்கு முன்பு ஜம்மு காஷ்மீரில் 4 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன. தற்போது மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 4-ல் இருந்து 12-ஆக உயர்ந்துள்ளது. 2014-ல் 500 எம்பிபிஎஸ் இடங்கள் இருந்த நிலையில், இப்போது 1300-க்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. 2014-ம் ஆண்டுக்கு முன்பு, இங்கு ஒரு மருத்துவ முதுகலை இடம் கூட இல்லை, ஆனால் தற்போது இந்த எண்ணிக்கை 650 க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில், சுமார் 45 புதிய செவிலியர் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் இங்கு தொடங்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான புதிய இருக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரில் தான் 2 எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டப்பட்டு வருகின்றன.  

நண்பர்களே,

இந்திய அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள சமூக நீதி ஜம்மு-காஷ்மீரின் சாமானிய மக்களால் முதல் முறையாக பெறப்பட்டுள்ளது. அகதிக் குடும்பங்கள், வால்மீகி சமூகத்தினர், துப்புரவுப் பணியாளர்கள் ஆகியோருக்கு ஜனநாயக உரிமைகள் கிடைத்துள்ளன. வால்மீகி சமூகத்தின் எஸ்சி பிரிவு சலுகைகள் கோரிக்கை பல ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டுள்ளது. 'படரி பழங்குடியினர்', 'பஹாரி இனக்குழு', 'கடா பிராமணர்' மற்றும் 'கோலி' சமூகங்கள் பட்டியல் பழங்குடியினராக சேர்க்கப்பட்டுள்ளன. சட்டமன்றத்தில் பட்டியல் பழங்குடியினருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பஞ்சாயத்து, மாநகராட்சி, நகராட்சிகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

சகோதர சகோதரிகளே,

எங்கள் அனைவருக்காகவும் உங்கள் ஆசீர்வாதங்களை வேண்டுகிறேன். தற்போது, ஜம்மு-காஷ்மீரின் வரலாற்றில், நமது பஹாரி சகோதர சகோதரிகளுக்காக, நமது குஜ்ஜார் சகோதர சகோதரிகளுக்காக, நமது பண்டிட்களுக்காக, நமது வால்மீகி சகோதரர்களுக்காக, நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்காக வளர்ச்சியின் ஒரு பெரிய கொண்டாட்டம் நடந்திருக்கிறது. ஒவ்வொருவரின் மொபைல் ஃபோனின் டார்ச் லைட் ஒளிரட்டும், ஜம்மு பிரகாசிப்பதையும், ஜம்மு-காஷ்மீரின் ஒளி நாட்டை அடைவதையும் முழு நாடும் பார்த்துக் கொண்டிருக்கிறது. என்னுடன் இணைந்து சொல்லுங்கள் -

பாரத் மாதா கி - ஜே!

பாரத் மாதா கி - ஜே!

பாரத் மாதா கி - ஜே!

மிகவும் நன்றி.

***

(Release ID: 2007384)

PKV/IR/AG/KRS


(Release ID: 2016326) Visitor Counter : 76