பிரதமர் அலுவலகம்

கூட்டுறவுத் துறையின் பல்வேறு முக்கிய முன்முயற்சிகளின் அடிக்கல் நாட்டல் மற்றும் துவக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 24 FEB 2024 2:38PM by PIB Chennai

உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. அமித் ஷா அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்கள் திரு அர்ஜுன் முண்டா மற்றும் திரு பியூஷ் கோயல் அவர்களே, தேசிய கூட்டுறவு சங்கக் குழுக்களின் அதிகாரிகளே, இதர பிரமுகர்களே, தாய்மார்களே, அன்பர்களே!

இன்று, 'வளர்ச்சி அடைந்த பாரதத்தின் 'அமிர்த யாத்திரையின்' மற்றொரு குறிப்பிடத்தக்க சாதனைக்கு 'பாரத மண்டபம்' சாட்சியாக மாறியுள்ளது. இன்று, நாடு எடுத்துள்ள கூட்டுறவின் மூலம் வளம் என்ற தீர்மானத்தை நனவாக்கும் திசையில் நாம் முன்னேறி வருகிறோம். விவசாயத்தின் அடித்தளத்தை வலுப்படுத்துவதில் கூட்டுறவு முக்கியப் பங்கு வகிக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு, நாங்கள் கூட்டுறவுக்கென தனி அமைச்சகத்தை உருவாக்கியுள்ளோம். இன்று அதே உத்வேகத்துடன் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இன்று, கிடங்கு திட்டம் என்ற நமது விவசாயிகளுக்கான உலகின் மிகப்பெரிய சேமிப்புத் திட்டத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம். இத்திட்டத்தின் கீழ், நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஆயிரக்கணக்கான கிடங்குகள் கட்டப்படும். இன்று, 18,000 தொடக்க வேளாண் கடன் சங்கங்களை கணினிமயமாக்கும் குறிப்பிடத்தக்க பணியும் நிறைவடைந்துள்ளது. இந்தத் திட்டங்கள் அனைத்தும் நாட்டில் வேளாண் கட்டமைப்பு வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை அளித்து, விவசாயத்தை நவீனத் தொழில்நுட்பத்துடன் இணைக்கும். இந்த முக்கியமான மற்றும் தொலைநோக்கு முயற்சிகளுக்காக உங்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன், உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய ஒரு எளிய ஏற்பாட்டை கூட்டுறவுகளால் ஒரு குறிப்பிடத்தக்க தொழில்துறைத் திறனாக மாற்ற முடியும். பொருளாதாரத்தை, குறிப்பாக நாட்டின் கிராமப்புற மற்றும் விவசாயப் பொருளாதாரத்திற்கு புத்துயிர் அளிக்க இது ஒரு நம்பகமான வழியாகும். தனி அமைச்சகம் மூலம் நாட்டின் இந்தத் திறனை ஒன்றிணைக்கவும், வேளாண் துறையில் சிதறிக் கிடக்கும் வலிமையைப் பயன்படுத்திக் கொள்ளவும் நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு மிக முக்கியமான உதாரணம் நம் முன்னால் உள்ளது. உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் வாயிலாக, கிராமங்களில் உள்ள சிறு விவசாயிகள் கூட இன்று தொழில்முனைவோராக மாறி, தங்கள் உற்பத்திப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்கள். நாட்டில் 10,000 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை உருவாக்க நாங்கள் இலக்கு நிர்ணயித்திருந்தோம். கூட்டுறவு அமைச்சகத்திற்கென தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டதன் விளைவாக, நாட்டில் 8,000 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் ஏற்கனவே உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. பல உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் வெற்றிக் கதைகள் உள்நாட்டில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் விவாதிக்கப்படுகின்றன. இதேபோல், கூட்டுறவுகளின் பயன்கள் இப்போது கால்நடை விவசாயிகள் மற்றும் மீனவர்களையும் சென்றடைகின்றன. தற்போது 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டுறவு அலகுகள் மீன் வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு லட்சம் கூட்டுறவு சங்கங்களை உருவாக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது, இவற்றில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானவை மீன்வளத் துறையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

நண்பர்களே,

குஜராத்தின் முதலமைச்சர் என்ற முறையில், கூட்டுறவுகளின் சக்தியை நான் நேரடியாக அனுபவித்துள்ளேன். குஜராத்தில் உள்ள அமுலின் வெற்றிக் கதை இன்று உலகம் முழுவதும் அறியப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள சந்தைகளில் லிஜ்ஜத் அப்பளத்தின் இருப்பை நாம் அனைவரும் அறிவோம். இந்த இயக்கங்கள் முதன்மையாக நம் நாட்டின் பெண்களால் வழிநடத்தப்படுகின்றன. இன்று, பெண்கள் பால் மற்றும் விவசாயத் துறைகளில் கூட்டுறவுகளிலும் ஈடுபட்டுள்ளனர், அவர்களில் லட்சக்கணக்கானவர்கள் தீவிரமாக பங்கேற்கின்றனர். பெண்களின் திறன்களை அங்கீகரித்து, கூட்டுறவு தொடர்பான கொள்கைகளிலும் அரசு அவர்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. அண்மையில் பல மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இதன் கீழ், பல மாநில கூட்டுறவு சங்கங்களின் வாரியத்தில் பெண் இயக்குநர்கள் இருப்பது இப்போது கட்டாயமாகும்.

நண்பர்களே,

கூட்டுறவுகள் கூட்டு வலிமையைப் பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகளின் தனிப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்கின்றன, மேலும் சேமிப்பு இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. முன்னதாக, சேமிப்பு தொடர்பான உள்கட்டமைப்பு இல்லாததால் விவசாயிகள் குறிப்பிடத்தக்க இழப்புகளைச் சந்தித்தனர். முந்தைய அரசுகள் இந்தத் தேவை குறித்து அதிக கவனம் செலுத்தவில்லை. எவ்வாறாயினும், இன்று இந்தப் பிரச்சினைக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் தீர்வு காணப்படுகிறது. இது ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும். உலகின் மிகப்பெரிய சேமிப்புத் திட்டத்தின் கீழ், அடுத்த 5 ஆண்டுகளில் 700 லட்சம் மெட்ரிக் டன் சேமிப்புத் திறன் உருவாக்கப்படும். இந்த இயக்கத்திற்கு ரூ.1.25 லட்சம் கோடிக்கு மேல் செலவாகும். இந்தத் திட்டம் நிறைவேறிய பிறகு, நமது விவசாயிகளால் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப தங்கள் விளைபொருட்களைச் சேமித்து வைக்க முடியும். வங்கிகளில் கடன் பெறுவதும் எளிதாகும்.

 

நண்பர்களே,

வளர்ச்சி அடைந்த பாரதம்' என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் கூட்டுறவு அமைப்புகளின் பங்கு முக்கியமானது. உங்களது பங்களிப்பு மற்றும் கூட்டுறவு நிறுவனங்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை நான் நன்கு புரிந்துகொள்கிறேன். எனவே, உங்கள் அனைவரிடமிருந்தும் நான் அதிக எதிர்பார்ப்புகளை வைத்திருக்கிறேன். தற்சார்பு பாரதத்தைக் கட்டியெழுப்புவதில் நீங்கள் எவ்வளவு சுறுசுறுப்பாகவும் குறிப்பிடத்தக்க வகையிலும் பங்களிக்கிறீர்களோ, அவ்வளவு விரைவாக நமது இலக்குகளை அடைவோம். 'தற்சார்பு இந்தியா' இல்லாமல், 'வளர்ச்சி அடைந்த இந்தியாவை' உருவாக்க முடியாது. 'வளர்ச்சி அடைந்த பாரதம்' என்ற இலக்கை அடைய, தோளோடு தோள் நின்று, கூட்டுறவின் உண்மையான உணர்வுடன் படிப்படியாக ஒன்றிணைவோம், ஒரே திசையில் ஒன்றாக பயணிப்போம். மிக்க நன்றி.

பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு.  பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

***

(Release ID: 2008584)

PKV/BR/KV



(Release ID: 2015478) Visitor Counter : 56