பிரதமர் அலுவலகம்

பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான நிதியுதவித் திட்டத்தின் பயனாளிகளுடன் பிரதமர் தில்லியில் மார்ச் 14 அன்று உரையாட உள்ளார்

1 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் பிரதமர் கடன் வழங்க உள்ளார்

தில்லி மெட்ரோவின் 4-ம் கட்டப் பணிகளில் கூடுதலாக இரண்டு வழித்தடங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்

இந்த வழித்தடங்கள் லஜ்பத் நகர் முதல் சாகேத்-ஜி பிளாக் வரையும், இந்தர்லோக் முதல் இந்திரபிரஸ்தா வரையும் அமைக்கப்பட உள்ளன

Posted On: 13 MAR 2024 7:10PM by PIB Chennai

தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் மார்ச் 14 அன்று மாலை 5 மணிக்கு பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான நிதியுதவித் திட்டத்தின் பயனாளிகளிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியின் போது, தில்லியைச் சேர்ந்த 5,000 சாலையோர வியாபாரிகள் உட்பட 1 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் கடன்களை ழங்கவுள்ளார். இந்நிகழ்ச்சியின் போது தில்லி மெட்ரோவின் 4-ம் கட்டப் பணிகளில்  கூடுதலாக இரண்டு வழித்தடங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார்.

பொருளாதாரத்தில் விளிம்புநிலை பிரிவினருக்கு பொருளாதார ஆதரவை வழங்குவதற்கான பிரதமரின் தொலைநோக்கு பார்வையால் வழிநடத்தப்பட்டு, தொற்றுநோயால் ஏற்பட்ட உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கிடையே 2020-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான நிதியுதவித் திட்டம் தொடங்கப்பட்டது. இது சாலையோர வியாபாரிகளில் விளிம்புநிலை சமூகத்தினருக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுவரை, நாடு முழுவதும் 62 லட்சத்துக்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10,978 கோடி மதிப்பிலான 82 லட்சத்துக்கும் அதிகமான கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. தில்லியில் மட்டும் சுமார் 2 லட்சம் கடன்கள் ரூ.232 கோடி அளவுக்கு வழங்கப்பட்டுள்ளன. இது அவர்களுக்கு நிதி உள்ளடக்கம் மற்றும் முழுமையான நலனுக்கான சிறந்த திட்டமாகத் தொடர்ந்து செயல்படுத்தப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியின் போது, தில்லி மெட்ரோவின் இரண்டு கூடுதல் வழித்தடங்களான லஜ்பத் நகர் சாகேத்-ஜி பிளாக் மற்றும் இந்தர்லோக் இந்திரபிரஸ்தா ஆகியவற்றுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இந்த வழித்தடங்கள் 20 கிலோ மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்டதாக அமையும். இவை போக்குவரத்தை மேம்படுத்தவும், நெரிசலை மேலும் குறைக்கவும் உதவும்.

லஜ்பத் நகர் முதல் சாகேத் ஜி-பிளாக் வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்கள்: லஜ்பத் நகர், ஆண்ட்ரூஸ் கஞ்ச், கிரேட்டர் கைலாஷ் - 1, சிராக் தில்லி, புஷ்பா பவன், சாகேத் மாவட்ட மையம், புஷ்ப் விஹார், சாகேத் ஜி - பிளாக்.

இந்தர்லோக் - இந்திரபிரஸ்தா வழித்தடத்தில் உள்ள  ரயில் நிலையங்கள்: இந்தர்லோக், தயா பஸ்தி, சராய் ரோஹில்லா, அஜ்மல் கான் பார்க், நபி கரீம், புதுதில்லி, எல்என்ஜேபி மருத்துவமனை, தில்லி கேட், தில்லி சச்சிவலயா, இந்திரபிரஸ்தா.

----

( Release ID: 2014323)

ANU/AD/IR/KPG/KRS



(Release ID: 2014359) Visitor Counter : 78