பிரதமர் அலுவலகம்
புதுதில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற முதலாவது தேசிய படைப்பாளிகள் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
Posted On:
08 MAR 2024 6:56PM by PIB Chennai
வணக்கம்,
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள எனது அமைச்சரவை சகா திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, நடுவர் குழு உறுப்பினர்கள் பிரசூன் ஜோஷி அவர்களே, ரூபாலி கங்குலி அவர்களே, நாட்டின் பல பகுதிகளில் இருந்து எங்களுடன் இணைந்துள்ள அனைத்து உள்ளடக்க படைப்பாளர்களே, இந்த நிகழ்வை பல இடங்களில் இருந்தும் பார்க்கும் எனது இளம் நண்பர்கள் மற்றும் பிற பிரமுகர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! நீங்கள் இங்கே உங்களுக்கான இடத்தைப் பெற்றுள்ளீர்கள். இந்த பாரத் மண்டபத்தில் உலகிற்கான முன்னேற்றப் பாதை குறித்து விவாதிக்க ஜி -20 தலைவர்கள் முன்பு கூடினர். இன்று, பாரதத்தின் எதிர்காலத்தைப் பற்றி விவாதிப்பதற்காக நீங்கள் இங்கே கூடியுள்ளீர்கள்.
நண்பர்களே,
காலம் மாறி, ஒரு புதிய சகாப்தம் உதயமாகும் போது, அதற்கு ஈடுகொடுக்க வேண்டியது தேசத்தின் கடமையாகும். இன்று இங்கே பாரத மண்டபத்தில் இந்தப் பொறுப்பை நாடு நிறைவேற்றி வருகிறது. முதல் தேசிய படைப்பாளிகள் விருது, வளர்ந்து வரும் திறமையாளர்களை அங்கீகரிப்பதைக் குறிக்கிறது. இந்த விருது வரும் நாட்களில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடிக்கும். இந்த புதிய சகாப்தத்தை இயக்கும் இளைஞர்களை கௌரவிப்பதற்கும், படைப்பாற்றலைக் கொண்டாடுவதற்கும், படைப்பாளிகள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை அங்கீகரிப்பதற்கும் இது ஒரு வாய்ப்பு. இந்த விருது உள்ளடக்க படைப்பாளர்களுக்கு சிறந்த ஆதாரமாக செயல்படும். அவர்களுக்கு அங்கீகாரத்தை வழங்கும். இன்று நான் தேசிய படைப்பாளிகள் விருது பெற்றவர்களுக்கு மட்டுமல்லாமல் அதில் முழு மனதுடன் பங்கேற்றவர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுக்கு மிகக் குறைந்த நேரமே இருந்தது. அதனால், இந்த நிகழ்வை எங்களால் அதிகம் பிரபலப்படுத்த முடியவில்லை. குறைந்த நேர கால அளவிலும்கூட, சுமார் 1.5 லட்சம் முதல் 2 லட்சம் படைப்பாளிகளை இதில் ஈடுபடுத்த முடிந்தது.
நண்பர்களே,
இன்று மற்றொரு புனிதமான நிகழ்வு தற்செயலாக அமைந்துள்ளது. மஹாசிவராத்திரியான இன்று இந்த முதல் தேசிய படைப்பாற்றல் விருது வழங்கப்படுகிறது. சிவபெருமானின் அருள் இல்லாமல் எதுவும் நடக்காது. சிவபெருமான், மொழி, கலை மற்றும் படைப்பாற்றலின் காவலராக மதிக்கப்படுகிறார். நமது சிவன் பிரபஞ்ச நடனக் கலைஞரான நடராஜராகவும் அறியப்படுகிறார். இந்த நிகழ்வு மஹாசிவராத்திரி நாளில் நடைபெறும் மகிழ்ச்சிகரமான தற்செயல் நிகழ்வாகும். உங்களுக்கும், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மஹாசிவராத்திரி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
இன்று சர்வதேச மகளிர் தினமும் கொண்டாடப்படுகிறது. இன்று விருது பெற்றவர்களில் பல மகள்களும் உள்ளனர். நான் அவர்களுக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசத்தின் புதல்விகள் பல்வேறு துறைகளில் முத்திரை பதித்திருப்பதைப் பார்க்கிறேன். உங்கள் அனைவரையும் பார்ப்பது எனக்கு மிகுந்த பெருமையை அளிக்கிறது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நாட்டின் அனைத்து பெண்கள், சகோதரிகள் மற்றும் புதல்விகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று, நீங்கள் அனைவரும் இங்கு கூடியிருக்கும் வேளையில், எரிவாயு சிலிண்டர் விலை ரூ . 100 குறைப்பை நான் அறிவித்துள்ளேன்.
நண்பர்களே,
ஒரு ஒற்றை கொள்கை முடிவு அல்லது இயக்கம் ஒரு நாட்டின் பயணத்தில் எவ்வாறு பன்மடங்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நீங்கள் காணலாம். கடந்த பத்தாண்டுகளில் தகவல் புரட்சி முதல் மலிவு விலையில் மொபைல் போன்கள் கிடைப்பது வரை, டிஜிட்டல் இந்தியா இயக்கம் ஒரு வகையில் உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களுக்கு ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தித் தந்துள்ளது. எந்தவொரு துறையிலும் இளைஞர்களின் சக்தி முக்கியமானது. நீங்கள் ஆழ்ந்த பாராட்டுக்கும் கைதட்டலுக்கும் தகுதியானவர்கள். இன்றைய விருது வழங்கும் விழாவில் பாராட்டப்பட வேண்டியவர்கள், இளம் மனங்கள் மற்றும் பாரதத்தின் ஒவ்வொரு டிஜிட்டல் உள்ளடக்க படைப்பாளர்கள்தான்.
நண்பர்களே,
பாரதத்தில் உள்ள ஒவ்வொரு உள்ளடக்க படைப்பாளியும் சிறந்த விஷயங்களை அடையாளப்படுத்துகிறார்கள். நமது இளைஞர்கள் சரியான திசையில் வழிநடத்தப்படுவதால், அவர்கள் எந்த உயரத்தையும் எட்டுவார்கள். உங்களில் பலர் உள்ளடக்க உருவாக்கத்தில் முறையான பயிற்சி பெறவில்லை. அப்படித்தானோ? படிக்கும் போது, ஒரு தொழிலைத் தேர்ந்தெடுக்கும்போது, உங்களில் பெரும்பாலோர் உள்ளடக்க படைப்பாளர்களாக மாறுவதை நீங்கள் ஒருபோதும் கற்பனை செய்திருக்க மாட்டீர்கள். ஆயினும்கூட, உங்களில் பலர் இதில் ஆர்வத்துடன் ஒரு நபர் ராணுவத்தைப் போல வேலை செய்யத் தொடங்கினீர்கள். உங்கள் படைப்புகளில், நீங்கள் எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் தொகுப்பாளர் என நீங்கள் அனைத்தையும் செய்கிறீர்கள். இதன் பொருள் என்னவென்றால், ஏராளமான திறமைகள் ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கப்படுகின்றன. நீங்கள் யோசனைகளை உருவாக்குகிறீர்கள், புதுமைப்படுத்துகிறீர்கள், அவற்றை திரையில் உயிர்ப்பிக்கிறீர்கள். நீங்கள் உங்களது சொந்த திறனை உலகிற்கு வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், பல்வேறு சிந்தனைகளை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளீர்கள். நீங்கள் காட்டிய தைரியம் காரணமாகவே நீங்கள் அனைவரும் இன்று இந்த நிலைக்கு வந்துள்ளீர்கள். தேசம் உங்களை மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்க்கிறது. உங்கள் உள்ளடக்கம் இந்தியா முழுவதும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உங்கள் அறிவைப் பயன்படுத்துங்கள், உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்துங்கள்.
நண்பர்களே,
உள்ளடக்கமும் படைப்பாற்றலும் சிறப்பாக ஒன்றிணையும்போது, அந்த படைப்பு செழிக்கிறது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். உள்ளடக்கம் டிஜிட்டலுடன் ஒன்றிணையும்போது, மாற்றம் நடைபெறுகிறது. உள்ளடக்கம் நோக்கத்துடன் ஒன்றிணையும்போது, அது தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
நண்பர்களே,
ஒரு காலத்தில், மிகச்சிறிய கடைகள் கூட "இங்கே சுவையான உணவு கிடைக்கிறது" என்று பெருமையுடன் அறிவிப்பு பலகைகளை காட்சிப்படுத்தும், இல்லையா? அங்கு ஏன் சாப்பிட வேண்டும் என்று யாராவது கேட்டால், "உணவு சுவையாக இருக்கிறது" என்பதே பதிலாக இருக்கும். ஆனால் இன்று, "ஆரோக்கியமான உணவு இங்கே கிடைக்கிறது" என்று கடைக்காரர்கள் விளம்பரப்படுத்தும் ஒரு மாற்றத்தை நாம் காண்கிறோம். இப்போதெல்லாம் சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், ஆரோக்கியத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஏன் இந்த மாற்றம்? இது ஒரு சமூக மாற்றத்தை பிரதிபலிக்கிறது. எனவே, உள்ளடக்கம் மக்களிடையே கடமை உணர்வைத் தூண்டுவதையும், நாட்டிற்கான அவர்களின் பொறுப்புகளை நோக்கி அவர்களை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். இது உங்கள் உள்ளடக்கத்தின் நேரடி செய்தியாக இருக்க வேண்டிய அவசியமில்லை; மாறாக, உள்ளடக்க உருவாக்கத்தின் போது இதை மனதில் வைத்திருப்பது இயல்பாகவே அத்தகைய மதிப்புகளை ஈர்க்கும். பெற்றோர்கள் தங்கள் மகள் தாமதமாக வீடு திரும்பும்போது அவள் எங்கிருக்கிறாள் என்று விசாரிக்கிறார்கள். ஆனால் அரிதாகவே தங்கள் மகன்களுக்கு இதைச் செய்கிறார்கள் என்று நான் ஏற்கெனவே கூறி இருக்கிறேன். உள்ளடக்க படைப்பாளிகள் இதை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். சமமான பொறுப்புள்ள சூழலை வளர்க்க வேண்டும். ஒரு மகள் தாமதமாக வீட்டிற்கு வந்தால், அது ஒரு பேரழிவாக பார்க்கப்படுகிறது. ஆனால் ஒரு மகன் அவ்வாறு செய்தால், அது புறக்கணிக்கப்படுகிறது. விஷயம் என்னவென்றால், நண்பர்களே, நாம் சமூகத்துடன் இணைய வேண்டும். சமூக உணர்வை ஒவ்வொரு வீட்டிற்கும் பரப்புவதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்கள். இன்று, மகளிர் தினத்தில், இந்த உறுதிப்பாட்டை நீங்கள் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.
நம் நாட்டில் மகளிர் சக்தியின் மகத்தான ஆற்றலும் உங்கள் உள்ளடக்கத்தின் குறிப்பிடத்தக்க பகுதியாக இருக்க வேண்டும். படைப்பாற்றல் கொண்ட உங்களில் எவரும், ஒரு தாய் காலை முதல் மாலை வரை மேற்கொள்ளும் எண்ணற்ற பணிகளைப் புரிந்துகொள்வீர்கள் என்று என்னால் உறுதியாகக் கூற முடியும். ஒரு தாய் ஒரே நேரத்தில் எவ்வளவு சாதிக்கிறாள் என்று பார்க்கும் குழந்தைகள் ஆச்சரியப்படுவார்கள். அவள் தடையின்றி பல பணிகளை செய்கிறாள். இதேபோல், கிராமப்புற வாழ்க்கை முறையை கருத்தில் கொள்ளுங்கள். அங்கு பெண்கள் பொருளாதார நடவடிக்கைகளில் அதிக அளவில் ஈடுபடுகிறார்கள். பாரதத்தில் வேலைக்குச் செல்லும் பெண்களே இல்லை என்பது சில மேலை நாட்டினரின் தவறான கருத்து. ஆனால், நண்பர்களே, உண்மை அதற்கு நேர்மாறானது. பாரதத்தில் பெண்கள் இருப்பதால்தான் குடும்பமும் பொருளாதாரமும் செயல்படுகின்றன. நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் கிராமங்களில் குறிப்பிடத்தக்க பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். பழங்குடியினர் பகுதிகள் அல்லது மலைப்பகுதிகளில், பெரும்பாலான பொருளாதார நடவடிக்கைகள் நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளால் மேற்கொள்ளப்படுவதை நீங்கள் காண்பீர்கள். எனவே, படைப்பாற்றலின் வாயிலாக, உண்மைத் தகவல்களை வழங்குவதன் மூலம் இந்த தவறான கருத்துக்களை எளிதில் அகற்ற முடியும். இந்தப் பணியை நாம் மேற்கொள்ள வேண்டும்.
நண்பர்களே,
தூய்மை இந்தியா இயக்கத்தின் வெற்றியை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அதற்காக நீங்களும் பங்களித்துள்ளீர்கள். ஆனால், இது தொடர்ந்து நடைபெற்று வரும் மக்கள் இயக்கம். தூய்மை குறித்து ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்ய வேண்டும். சமீபத்தில் ஒரு புலி நீர் நிலையில் தண்ணீர் குடிக்கத் தயாரானபோது, அதில் ஒரு பிளாஸ்டிக் பாட்டிலைக் கண்டதாகவும் உடனே, அந்தப் புலி தனது வாயால் பாட்டிலை வெளியில் எடுத்துப் போட்டதாகவும் ஒரு வீடியோ பரவியது. இதுபோன்ற தகவல்களை படைப்பாற்றல் மூலம் கொண்டு சென்று நீங்கள் மக்களை அடையலாம். படைப்பாற்றல் மனம் கொண்டவர்களுடன், என்னால் வெளிப்படையாகப் பேச முடியும் என்று நான் நம்புகிறேன். எனது நாட்டின் இளைஞர்களின் திறமை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. குறிப்பாக உள்ளூர் மொழிகளில் படைப்பாளிகள் அதிகம் படைப்புகளை உருவாக்க வேண்டும்.
முக்கியமான பிரச்சினை குழந்தைகள் எதிர்கொள்ளும் மன அழுத்தமாகும். இது பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகிறது. கடந்த காலங்களில், தாத்தா, பாட்டி, அத்தை போன்ற பல்வேறு குடும்ப உறுப்பினர்களிடமிருந்து குழந்தைகள் பராமரிப்பைப் பெற்றனர். இப்போது, தனி குடும்பங்களில், பெற்றோர் இருவரும் வேலையில் இருப்பதால், குழந்தைகள் பெரும்பாலும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர், குறிப்பாக தேர்வு நேரங்களில். அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. சில நேரங்களில், குழந்தைகள் தற்கொலை போன்ற மோசமான முடிகளைப் பற்றி சிந்திக்கலாம். எனவே, எந்த ஒரு தவறான முடிவையும் எடுப்பதற்கு முன், சிறந்த வாழ்க்கையை வாழ்வது எளிது என்பதை உணர்த்த வேண்டும். தேர்வுகள் குறித்த உரையாடல் வாயிலாக தேர்வுகள் குறித்த விவாதங்களில் நான் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். குழந்தைகளுடன் தேர்வு பற்றி நாட்டின் பிரதமர் விவாதிப்பது குறித்து சிலர் கேலி செய்யலாம். அரசின் சுற்றறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் மட்டுமே குழந்தைகளின் வாழ்க்கையை மேம்படுத்த முடியாது என்பதை நான் அறிவேன்; நான் அவர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும், அவர்களின் போராட்டங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். உண்மையான ஆதரவை வழங்க வேண்டும். தேர்வுக் காலங்களில் இந்த இணைப்பு மிகவும் முக்கியமானது. அதனால்தான் நான் ஆண்டுதோறும் இந்த தேர்வு தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்துகிறேன். அவர்களின் கவலைகளை வெளிப்படையாக உணர்வதன் மூலம், அவர்களது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நான் நம்புகிறேன். இந்தக் குழந்தைகளைச் சென்றடைவது, அவர்களின் இதயங்களைத் தொடுவது, அவர்களுக்கு ஆதரவளிப்பது, அவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் உரையாடி அவர்களுக்கு ஆதரவு அளிப்பது இதன் முக்கிய குறிக்கோள்.
நண்பர்களே,
போதைப்பொருள்களின் தீய விளைவுகள் குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் உள்ளடக்கத்தை நீங்கள் அதிக அளவில் உருவாக்கலாம். போதைப்பொருள் கேடானது என்ற செய்தியை நாம் ஆக்கப்பூர்வமாக தெரிவிக்க முடியும்.
நண்பர்கள,
நீங்கள் அனைவரும் இதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறீர்கள். ஏனென்றால் நீங்கள் அவர்களுடன் இணைந்து அவர்களின் மொழியில் தொடர்பு கொள்ளலாம்.
நண்பர்களே,
மக்களவைத் தேர்தல் அடுத்த சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. தயவு செய்து இன்றைய நிகழ்வை அந்த சூழலில் பார்க்காதீர்கள். அநேகமாக அடுத்த மஹாசிவராத்திரியின் போது, மீண்டும் இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியை நானே ஏற்பாடு செய்வேன் என்பதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன்.
நண்பர்களே,
மக்களவைத் தேர்தல் பற்றிக் குறிப்பிட்டேன். இதிலும் படைப்புத் துறையில் உள்ள தனிநபர்கள் கணிசமான பங்களிப்பை வழங்க முடியும். நமது இளைஞர்களிடையே, குறிப்பாக முதல் முறை வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த நாம் ஏதாவது செய்ய முடியுமா என்று யோசியுங்கள். வாக்களிப்பது என்பது வெற்றி அல்லது தோல்வியைப் பற்றியது அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இது நமது பரந்த தேசத்தின் செயல்பாட்டில் பங்கேற்பதாகும். நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் வாக்களிப்பவர்கள் முக்கியமான பங்குதாரர்கள். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று ஒருபோதும் கட்டளையிடாதீர்கள். ஆனால் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துங்கள். யாரை ஆதரிக்க வேண்டும் என்பதை அவர்கள் தீர்மானிக்கட்டும். ஆனால் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். 100 சதவீதம் ஜனநாயகத்தை நிலைநிறுத்தி, உலகிற்கே முன்னுதாரணமாகத் திகழ்ந்து, வளர்ந்த நாடாக மாற பாரதம் முயற்சிக்கிறது. இது உலக அளவில் ஒரு குறிப்பிடத்தக்க முன்மாதிரியாக அமையும். இதில், நமது நாட்டின் இளைஞர்கள், குறிப்பாக 18 முதல் 21 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தீவிரமாக பங்கேற்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
நண்பர்களே,
மாற்றுத் திறனாளிகளிடம் அபரிமிதமான திறமை இருப்பதை நாம் காண்கிறோம். படைப்பாற்றல் கொண்ட நீங்கள் அவர்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க தளமாக பணியாற்றி ஆதரவு வழங்கலாம். நமது சிறப்பு திறன் கொண்ட மக்களின் உள்ளார்ந்த பலத்தை முன்னிலைப்படுத்துவதும், அவர்களின் குரல்களைப் வலுப்படுத்த சமூக ஊடகங்களின் சக்தியைப் பயன்படுத்துவதும் முக்கியம்.
நண்பர்களே,
கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு அம்சம் எல்லைகளுக்கு அப்பால் இந்தியாவின் செல்வாக்கை மேம்படுத்துவதாகும். தற்போதைய உலகச் சூழலை அறிந்த உங்களில் சிலர், இந்திய மூவர்ணக் கொடி மற்றும் கடவுச்சீட்டுடன் தொடர்புடைய அம்சங்களைப் பெருமைப்படுத்த முடியும். மாணவர்கள் உக்ரைனை விட்டு வெளியேற முயற்சித்தபோது, அவர்கள் இந்தியக் கொடியைக் காண்பித்தார்கள். அது அவர்களுக்கு பலன் அளித்ததை நீங்கள் பார்த்திருக்கலாம். நண்பர்களே, இந்த சக்தி சாதாரணமானது அல்ல; இது சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்ட அர்ப்பணிப்பு முயற்சிகளின் விளைவாகும்.
நண்பர்களே,
பாரதத்தின் டிஜிட்டல் தூதர்களாக இருக்கும் நீங்கள், உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை சில நொடிகளிலேயே சென்றடையும் திறனைப் பெற்றுள்ளீர்கள். இது ஒரு பெரிய பலம் என்று நான் நம்புகிறேன். ஸ்ரீநகரில் நான் சந்தித்த இளம் தேனீ வளர்ப்புத் தொழில் முனைவோர் போன்ற தனிநபர்கள் தங்கள் தயாரிப்பை டிஜிட்டல் தளங்கள் மூலம் மட்டுமே உலக அளவில் எடுத்துச் சென்றுள்ளனர். இதைப் பலப்படுத்தும் வகையில் "உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்" என்ற முன்முயற்சியின் தூதர்களாக நீங்கள் பணியாற்றுகிறீர்கள்.
நண்பர்களே,
நாம் அனைவரும் ஒன்றிணைந்து சிறந்த இந்தியாவை உருவாக்கும் இயக்கத்தைத் தொடங்குவோம். உங்கள் அனைவர் மீதும் நான் பெரும் பொறுப்பை சுமத்துகிறேன். சிறந்த இந்தியாவை உருவாக்கும் இயக்கத்தைத் தொடங்குவோம். பாரதத்தின் கலாச்சாரம், பாரம்பரியம் பற்றிய தகவல்களை நாம் உலகளாவிய சமூகத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். பாரதத்தைப் பற்றிய நமது தகவல்களை அனைவருக்கும் கூறுவோம். உங்கள் உள்ளடக்கம் விருப்பங்களைப் பெற வேண்டும். இதை அடைய, நாம் உலகளாவிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்களுடனும், உலக அளவில் உள்ள இளைஞர்களுடனும் நாம் தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும். இப்போதெல்லாம் உலகெங்கிலும் உள்ள மக்கள் பாரதத்தைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர். உங்களில் பலர் வெளிநாட்டு மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்கள். அப்படி இல்லாதவர்கள் செயற்கை நுண்ணறிவின் உதவியைப் பயன்படுத்தலாம். ஜெர்மன், பிரெஞ்சு மற்றும் ஸ்பானிஷ் போன்ற பல்வேறு மொழிகளில் உள்ளடக்கத்தை உருவாக்குவதன் மூலம், நமது தளத்தை விரிவுபடுத்த முடியும்.
சில நாட்களுக்கு முன்பு பில் கேட்ஸுடன் செயற்கை நுண்ணறிவு போன்ற தலைப்புகளில் விவாதித்தேன். நீங்கள் விரைவில் அதைப் பற்றி அறிந்து கொள்வீர்கள். செயற்கை நுண்ணறிவு திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடிவு செய்துள்ளோம். பாரதத்தின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியை உலகம் கவனித்து வருகிறது. இந்தத் துறையில் பாரதம் முன்னிலை வகிக்கும். இதை நான் உங்கள் திறன்கள் மீது நம்பிக்கை வைத்துக் கூறுகிறேன். குறைக்கடத்திகள் எனப்படும் செமிகண்டக்டர் துறையில் நாம் எவ்வாறு முன்னேறியுள்ளோம் என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். 2ஜி, 4ஜியில் நாம் முன்பு பின்தங்கியிருந்தாலும், 5ஜியில் தற்போது முன்னிலை வகித்து வருகிறோம். அதேபோல், செமிகண்டக்டர் துறையில் தனி இடத்தை விரைவாக உருவாக்குவோம். இதற்கு மோடி காரணம் அல்ல. நமது இளைஞர்களின் திறமைதான் காரணம். மோடி வாய்ப்புகளை வழங்குகிறார். உங்கள் பாதையில் இருந்து தடைகளை அகற்றுகிறார். இதனால் நமது இளைஞர்கள் விரைவாக முன்னேற முடிகிறது.
நாம் நமது எல்லைகளை விரிவுபடுத்தி, நமது தாக்கத்தை உணரச் செய்ய வேண்டும். படைப்புலகம் இந்த விஷயத்தில் அளப்பரிய ஆற்றலைக் கொண்டுள்ளது. செயற்கை நுண்ணறிவின் சக்தியை நீங்கள் அறிவீர்கள். சில நிமிடங்களில், எனது பேச்சுகள் மற்றும் உரைகள் 8 முதல் 10 இந்திய மொழிகளில் கிடைக்கும். இதற்காக செயற்கை நுண்ணறிவிற்கு நன்றி சொல்ல வேண்டும். பாரதத்தின் திறனை விரிவுபடுத்துவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். நமது படைப்பாற்றல் மூலம், தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பாரதத்தின் பெருமையை உயர்த்த முடியும். ஒரு உணவு படைப்பாளர் மும்பையின் புகழ்பெற்ற வடா பாவ் கடைக்கு ஒருவருக்கு வழிகாட்ட முடியும். ஒரு ஆடை வடிவமைப்பாளர் இந்திய கைவினைஞர்களின் திறமையை உலகிற்கு வெளிப்படுத்த முடியும். ஒரு தொழில்நுட்ப படைப்பாளர் 'மேக் இன் இந்தியா' முன்முயற்சியின் மூலம் இந்தியாவின் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்த முடியும். ஒரு தொலைதூர கிராமத்திலிருந்து ஒரு பயண பதிவர் கூட வெளிநாட்டில் உள்ள ஒருவரை தங்கள் வீடியோக்கள் மூலம் பாரதத்திற்கு வருகை தர ஊக்குவிக்க முடியும். பாரதம் எண்ணற்ற திருவிழாக்களை கொண்ட நாடாகும். இந்த திருவிழா ஒவ்வொன்றையும் அதன் தனித்துவமான அம்சத்துடன் ஆராய உலகம் ஆர்வமாக உள்ளது. பாரதம் மற்றும் அதன் ஒவ்வொரு மூலை முடுக்கையும் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பவர்களுக்கு நீங்கள் சிறந்த முறையில் உதவலாம்.
நண்பர்களே,
இந்த அனைத்து முயற்சிகளிலும், ஒருவர் யதார்த்தத்தையும் கருப்பொருளையும் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளக்கூடாது. உங்கள் மொழிநடை, விளக்கம், தயாரிப்பு மற்றும் உண்மைகள் அப்படியே இருக்க வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பணியில் ஒரு தனித்துவமான திறமையைக் கொண்டுள்ளீர்கள். நமது தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் குறிப்பிடத்தக்க ஊக்கசக்தியாக படைப்பாற்றல் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த நோக்கத்துடனேயே நான் இன்று உங்கள் அனைவரையும் சந்தித்து, உங்கள் வருகையையும் பங்களிப்புகளையும் பாராட்டுகிறேன். 1.5 முதல் 1.75 லட்சம் பங்கேற்பாளர்களின் படைப்புகளை உன்னிப்பாக மதிப்பீடு செய்வது எளிதான சாதனை அல்ல என்பதால் நடுவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் ஒருமுறை நான் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக்க நன்றி.
பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் உரையின் உத்தேசமான மொழி பெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.
***
AD/PLM/KV
(Release ID: 2014143)
Visitor Counter : 97
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam