தேர்தல் ஆணையம்
நியாயமான முறையில் தேர்தலை நடத்தும் வகையில் தேவையான எந்திரங்கள், பாதுகாப்புப் படையினர், பணியாளர்கள் ஆகியோரை உறுதி செய்யுமாறு 2100 பார்வையாளர்களுக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார் அறிவுறுத்தல்
Posted On:
11 MAR 2024 4:39PM by PIB Chennai
நியாயமான முறையில் தேர்தலை நடத்தும் வகையில் தேவையான எந்திரங்கள், பாதுகாப்புப் படையினர், பணியாளர்கள் ஆகியோரை உறுதி செய்யுமாறு 2100 பார்வையாளர்களுக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார் அறிவுறுத்தியுள்ளார்.
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கான பொதுத் தேர்தல்களை முன்னிட்டு, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவதற்கான விளக்கக் கூட்டத்தை இந்திய தேர்தல் ஆணையம் இன்று ஏற்பாடு செய்திருந்தது.
புதுதில்லி விஞ்ஞான் பவனில் இந்த விளக்கக் கூட்டத்தில் இந்தியக் குடிமைப்பணி, இந்தியக் காவல் பணி அதிகாரிகள், இந்திய வருவாய் சேவை மற்றும் சில மத்திய சேவைகளைச் சேர்ந்த அதிகாரிகள் என 2150-க்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அந்தந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரிகள் அலுவலகத்தில் இருந்து சில அதிகாரிகள் மெய்நிகர் முறையில் கூட்டத்தில் கலந்துகொண்டனர். எதிர்வரும் தேர்தல்களில் சுமார் 900 பொது பார்வையாளர்கள், 450 காவல் பார்வையாளர்கள் மற்றும் 800 செலவின பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பார்வையாளர்களின் முக்கிய பங்கை நினைவூட்டிய தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார், சுதந்திரமான, நியாயமான, மிரட்டல் மற்றும் தூண்டுதல் இல்லாத தேர்தல்களுக்கு சமமான வாய்ப்பை உறுதி செய்யுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தினார். ஆணையத்தின் பிரதிநிதிகள் என்ற முறையில் பார்வையாளர்கள் வேட்பாளர்கள் உட்பட அனைத்துத் தொடர்புடையவர்களும் அணுகக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் வலியுறுத்தினார். பார்வையாளர்கள் கடுமையாகவும், அதே நேரத்தில் கண்ணியமாக இருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
இந்த மத்திய பார்வையாளர்கள், சுதந்திரமான, நியாயமான, வெளிப்படையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தேர்தல்களை நடத்துவதற்கான அரசியலமைப்பு கடமையை நிறைவேற்றுவதில் ஆணையத்திற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் தேர்தலில் பங்கேற்பை மேம்படுத்தவும் உதவுகிறார்கள்.
***
AD/IR/RS/KRS
(Release ID: 2013484)
Visitor Counter : 165