ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

இந்துஸ்தான் உரம் & ரசாயன நிறுவனத்தின் சிந்த்ரி உரத் தொழிற்சாலையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்


5 தொழிற்சாலைகள் புதுப்பிக்கப்படுவதன் மூலம் 60 லட்சம் மெட்ரிக் டன் யூரியா உற்பத்தி செய்யப்படும். இது இந்தியாவை இந்த முக்கியமான பகுதியில் தற்சார்பை நோக்கி விரைவாகக் கொண்டு செல்லும்: திரு நரேந்திர மோடி

கடந்த 10 ஆண்டுகளில் யூரியா உற்பத்தி 310 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது: பிரதமர்

இந்துஸ்தான் உரம் மற்றும் ரசாயன நிறுவனத்தின் சிந்த்ரி உர ஆலை ரூ .8900 கோடிக்கும் அதிகமான செலவில் உருவாக்கப்பட்டது


Posted On: 01 MAR 2024 3:04PM by PIB Chennai

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பத்தில் உள்ள சிந்த்ரியில் உள்ள இந்துஸ்தான் உரம் மற்றும் ரசாயன நிறுவனத்தின் சிந்த்ரி உரத் தொழிற்சாலையை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். 2018-ம் ஆண்டு இந்த உரத் தொழிற்சாலைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

தற்சார்பு இந்தியா பயணத்தில் இன்றைய முன்முயற்சியின் முக்கியத்துவத்தை பிரதமர் எடுத்துரைத்தார். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவுக்கு 360 லட்சம் மெட்ரிக் டன் யூரியா தேவைப்படுவதாகவும், 2014-ல் இந்தியா 225 லட்சம் மெட்ரிக் டன் யூரியா மட்டுமே உற்பத்தி செய்து வந்தது என்றும் அவர் கூறினார். பெரும் இடைவெளி காரணமாக பெருமளவில் இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. "எங்கள் அரசின் முயற்சிகள் காரணமாக, கடந்த 10 ஆண்டுகளில், யூரியா உற்பத்தி 310 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது" என்று அவர் கூறினார். இந்த ஆலை தொடங்கப்பட்டதன் மூலம் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான புதிய வழிகள் திறக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். ராமகுண்டம், கோரக்பூர் மற்றும் பரோனி உரத் தொழிற்சாலைகள் புத்துயிர் பெற்றது குறித்தும் பிரதமர் தெரிவித்தார். இந்தப் பட்டியலில் சிந்த்ரியும் சேர்ந்துள்ளது என்றார் அவர். தால்ச்சர் உரத் தொழிற்சாலையும் அடுத்த ஆண்டு தொடங்கப்படும் என்று பிரதமர் தெரிவித்தார். இந்த ஐந்து ஆலைகளும் 60 லட்சம் மெட்ரிக் டன் யூரியாவை உற்பத்தி செய்யும் என்றும், இது இந்தியாவை இந்த முக்கியமான பகுதியில் தற்சார்பை நோக்கி விரைவாக எடுத்துச் செல்லும் என்றும் அவர் கூறினார்.

இந்துஸ்தான் உரம் மற்றும் ரசாயன நிறுவனம், தேசிய அனல் மின் கழகம் (NTPC), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் (IOCL), கோல் இந்தியா நிறுவனம் (CIL) மற்றும் FCIL/HFCL ஆகிய பொதுத்துறை நிறுவனங்களின் கூட்டு நிறுவனமாகும். இது 2016 ஜூன் 15 அன்று தொடங்கப்பட்டது. இது ஆண்டுக்கு 12.7 லட்சம் மெட்ரிக் டன் நிறுவப்பட்ட புதிய அம்மோனியா-யூரியா ஆலையை நிறுவுவதன் மூலம் சிந்த்ரி உர ஆலைக்கு புத்துயிர் அளித்தது. சிந்த்ரி ஆலை 2022 நவம்பர் 05 அன்று யூரியா உற்பத்தியைத் தொடங்கியது. 

சிந்த்ரியில் 2200 டன் அம்மோனியா மற்றும் 3850 டன் வேம்பு பூசப்பட்ட யூரியா திறன் கொண்ட புதிய அம்மோனியா-யூரியா ஆலைகளை ரூ. 8939.25 கோடி முதலீடு மற்றும் என்.டி.பி.சி, ஐ.ஓ.சி.எல் மற்றும் கோல் இந்தியா நிறுவனம் தலா 29.67% மற்றும் எஃப்.சி.ஐ.எல் ஆகியவற்றின் 11% பங்கு பங்களிப்புடன் அமைக்கும் பொறுப்பு இந்துஸ்தான் உரம் மற்றும் ரசாயன நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

யூரியா துறையில் தன்னிறைவை அடைவதற்காக, இந்திய உரக் கழகம் (FCIL) மற்றும் இந்துஸ்தான் உரக் கழகம் (HFCL) ஆகியவற்றின் மூடப்பட்ட யூரியா ஆலைகளுக்கு புத்துயிரூட்ட அரசு மேற்கொண்ட முயற்சிகளின் ஒரு பகுதியாக, அதிநவீன எரிவாயு அடிப்படையிலான சிந்த்ரி ஆலையை அமைப்பதும் அடங்கும். மூடப்பட்ட இந்திய உணவுக் கழகம் மற்றும் இந்துஸ்தான் உரக் கழகம் ஆகியவற்றின் யூரியா கிடைப்பதை அதிகரிப்பதற்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. சிந்த்ரி ஆலை நாட்டில் ஆண்டுக்கு 12.7 லட்சம் மெட்ரிக் டன் உள்நாட்டு யூரியா உற்பத்தியைச் சேர்க்கும். யூரியா துறையில் இந்தியாவை " தன்னிறைவு கொண்டதாக மாற்றுவதற்கான பிரதமரின்  தொலைநோக்குப் பார்வையை உணர உதவும்.

ஜார்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் உள்ள விவசாயிகளுக்கு போதுமான யூரியா விநியோகத்தை உறுதி செய்வதை இந்த ஆலை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஆலை உரம் கிடைப்பதை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சாலைகள், ரயில்வே, துணைத் தொழில் போன்ற உள்கட்டமைப்பு மேம்பாடு உட்பட பிராந்தியத்தில் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியையும் ஊக்குவிக்கும்.  இந்த ஆலை இப்பகுதியில் 450 நேரடி மற்றும் 1௦௦௦ மறைமுக வேலை வாய்ப்புகளை வழங்கும். இது தவிர, தொழிற்சாலைக்கு பல்வேறு பொருட்களை வழங்குவதற்காக எம்.எஸ்.எம்.இ விற்பனையாளர்களை மேம்படுத்துவதன் மூலம் இப்பகுதி பயனடையும்.

"தற்சார்பு இந்தியா" முன்முயற்சிகளை முன்னெடுத்துச் செல்ல இந்தியா தயாராகி வரும் நிலையில், இன்று, எச். யு.ஆர்.எல் இன் 'பாரத் யூரியா' பொருளாதாரத்திற்கு பெரும் ஊக்குவிப்பதாக அமையும். இறக்குமதியைக் குறைப்பதுடன் மட்டுமல்லாமல், உள்ளூர் விவசாயிகளுக்கு உரங்களை சரியான நேரத்தில் வழங்குவதற்கும், விரிவாக்க சேவைகளுக்கும் இது பயன்படும்.

------------------

PKV/RS/KV



(Release ID: 2010595) Visitor Counter : 140