பிரதமர் அலுவலகம்
மொரீஷியஸ் நாட்டில் உள்ள அகலேகா தீவில் புதிய விமான ஓடுதளம், படகுத்துறையைப் பிரதமரும், மொரீஷியஸ் பிரதமரும் இணைந்து தொடங்கி வைத்தனர்
அகலேகா தீவில் ஆறு சமூக வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார்
"மொரீஷியஸ் இந்தியாவின் மதிப்புமிக்க நண்பர். இன்று தொடங்கி வைக்கப்படும் திட்டங்கள் நமது நாடுகளுக்கு இடையேயான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும்"
"எங்களுடைய அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையின் முக்கிய கூட்டாளியாக மொரீஷியஸ் திகழ்கிறது"
"இந்தியா எப்போதும் தனது நட்பு நாடான மொரீஷியஸுக்கு முதலில் முக்கியத்துவம் அளிக்கும்"
"கடல்சார் பாதுகாப்புத் துறையில் இந்தியாவும், மொரீஷியஸும் இயற்கையான கூட்டாளிகள்"
"எங்களுடைய மக்கள் மருந்தகம் முயற்சியில் சேரும் முதல் நாடாக மொரீஷியஸ் இருக்கும். இதன் மூலம், மொரீஷியஸ் மக்கள் சிறந்த, தரமான இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொதுவான மருந்துகளின் பலனைப் பெறுவார்கள்".
Posted On:
29 FEB 2024 2:13PM by PIB Chennai
மொரீஷியஸில் உள்ள அகலேகா தீவில் புதிய விமான ஓடுதளம், செயின்ட் ஜேம்ஸ் படகுத்துறை, ஆறு சமூக மேம்பாட்டுத் திட்டங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி, மொரீஷியஸ் பிரதமர் திரு பிரவிந்த் ஜூக்நாத் ஆகியோர் இன்று காணொலி மூலம் கூட்டாகத் தொடங்கி வைத்தனர். இது மொரீஷியஸ் மற்றும் அகலேகா இடையேயான சிறந்த போக்குவரத்துக்கான தேவையை நிறைவேற்றுவதாகவும், கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவதாகவும், சமூக-பொருளாதார வளர்ச்சியை வளர்ப்பதாகவும் அமையும். 2024 பிப்ரவரி 12 அன்று இரு தலைவர்களும் மொரீஷியஸில் யுபிஐ, ரூபே அட்டை சேவைகளை தொடங்கியதைத் தொடர்ந்து இந்தத் திட்டங்களின் தொடக்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மொரீஷியஸில் உள்ள அகலேகா தீவில் ஆறு சமூக மேம்பாட்டுத் திட்டங்களுடன் புதிய விமான ஓடுபாதை செயின்ட் ஜேம்ஸ் படகுத்துறை ஆகியவற்றை கூட்டாக திறந்து வைத்ததன் மூலம் இந்தியாவும், மொரீஷியஸும் இன்று வரலாறு படைத்துள்ளன என்று மொரீஷியஸ் பிரதமர் திரு பிரவிந்த் கூறினார். இந்த நிகழ்ச்சி இரு நாடுகளுக்கும் இடையேயான முன்மாதிரியான கூட்டாண்மையின் அடையாளம் என்று குறிப்பிட்ட பிரதமர் ஜுக்நாத், மொரீஷியஸ் – இந்தியா இடையேயான உறவுக்கு புதிய பரிமாணத்தை அளித்ததற்காக பிரதமர் திரு மோடிக்கு நன்றி கூறியதுடன், இன்றைய நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கு நன்றி தெரிவித்தார். "அகலேகாவில் புதிய விமான ஓடுபாதை, படகுத்துறை வசதியை அமைப்பது மொரீஷியஸின் மற்றொரு கனவை நிறைவேற்றுவதாகும்" என்று கூறிய பிரதமர் திரு ஜுக்நாத், இந்தத் திட்டத்திற்கு முழுமையாக நிதியுதவி செய்வதில் இந்தியாவின் பங்களிப்பைப் பாராட்டினார். இந்தியாவில் பிரதமராக பதவியேற்றது முதல் இலங்கைக்கு சிறப்பு கவனம் செலுத்தி வரும் மொரீஷியஸ் அரசு மற்றும் மக்களின் சார்பில் பிரதமர் திரு மோடிக்கு அவர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். மேலும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் மதிப்புகள், அறிவு, வெற்றி ஆகியவற்றின் உலகளாவிய சக்தியாக தங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ளனர் என்பதை சுட்டிக் காட்டினார். இந்திய மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் பணியகத்திலிருந்து சுமார் 250 உயர்தர மருந்துகளை கொள்முதல் செய்ய அனுமதிக்கும் மக்கள் மருந்தகத் திட்டத்தை ஏற்றுக்கொண்ட முதல் நாடு மொரீஷியஸ் என்றும், இதன் மூலம் மொரீஷியஸ் மக்கள் பெருமளவில் பயனடைவார்கள் என்றும், இரு நாடுகளுக்கும் இடையேயான கூட்டாண்மைக்கு மேலும் உத்வேகம் அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். வளர்ச்சி நோக்கங்களை நிறைவேற்றும் அதே வேளையில், கடல்சார் கண்காணிப்பு, பாதுகாப்பு திறன்களை குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தும் இதுபோன்ற பெரிய மாற்றத்துக்கான திட்டங்களை மொரீஷியஸ் நிறைவேற்ற உதவியதற்காக பிரதமர் திரு மோடிக்கு நன்றி தெரிவித்து பிரதமர் ஜூக்நாத் தமது உரையை நிறைவு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், கடந்த 6 மாதங்களில் மொரீஷியஸ் பிரதமர் திரு. பிரவிந்த் ஜூக்நாத்துடன் தாம் நடத்திய ஐந்தாவது சந்திப்பு இது என்றும், இந்தியா, மொரீஷியஸ் இடையேயான திறன்மிக்க, வலுவான மற்றும் தனித்துவமான கூட்டாண்மைக்கு இது சான்றாகும் என்றும் கூறினார். இந்தியாவின் 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' கொள்கையில் மொரீஷியஸ் முக்கிய கூட்டாளியாக இருப்பதாகவும், சாகர் தொலைநோக்குத் திட்டத்தின் கீழ் சிறப்பு கூட்டாளியாக இருப்பதாகவும் அவர் கூறினார். "உலகளாவிய தெற்கின் உறுப்பினர்கள் என்ற முறையில், நமக்கு பொதுவான முன்னுரிமைகள் உள்ளன, கடந்த 10 ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் முன்னெப்போதும் இல்லாத விரைவைக் கண்டுள்ளது மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பின் புதிய உயரங்களை எட்டியுள்ளது" என்று பிரதமர் கூறினார். பழைய மொழி, கலாச்சார உறவுகள் குறித்து குறிப்பிட்ட பிரதமர், யுபிஐ மற்றும் ரூபே அட்டைகள் இந்த உறவுக்கு நவீன டிஜிட்டல் இணைப்பை வழங்கியதை நினைவு கூர்ந்தார்.
இரு நாடுகளுக்கும் இடையேயான அரசியல் கூட்டாண்மைகளின் அடித்தளத் தூண்களாக வளர்ச்சி கூட்டாண்மை திகழ்கிறது என்பதை குறிப்பிட்ட பிரதமர், சிறப்பு பொருளாதார மண்டலத்தின் பாதுகாப்பு அல்லது சுகாதாரப் பாதுகாப்பு என எதுவாக இருந்தாலும், மொரீஷியஸின் முன்னுரிமைகளின் அடிப்படையில் இந்தியாவின் வளர்ச்சிப் பங்களிப்புகள் உள்ளன என்றார். இந்தியா எப்போதும் மொரீஷியஸின் தேவைகளை மதித்து முதல் முக்கியத்துவம் அளிக்கிறது என்று கூறிய பிரதமர், கோவிட் தொற்றுநோய் அல்லது எண்ணெய் கசிவு எதுவாக இருந்தாலும், மொரீஷியஸூக்கு இந்தியாவின் நீண்டகால ஆதரவை எடுத்துரைத்தார். மொரீஷியஸ் மக்களுக்கு சாதகமான மாற்றத்தை ஏற்படுத்துவதே இந்தியாவின் முதன்மையான நோக்கம் என்று அவர் கூறினார். கடந்த 10 ஆண்டுகளில், மொரீஷியஸ் மக்களுக்கு 400 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான உதவியுடன் 1,000 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வசதியை இந்தியா வழங்கியுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். மொரீஷியஸில் மெட்ரோ ரயில் பாதைகள், சமூக மேம்பாட்டுத் திட்டங்கள், சமூக வீட்டுவசதி, காது, மூக்கு, தொண்டை மருத்துவமனை, குடிமைப்பணிக் கல்லூரி, விளையாட்டு வளாகங்கள் உள்கட்டமைப்பு ஆகியவற்றின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் அதிர்ஷ்டம் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
2015-ம் ஆண்டு அகலேகா மக்களுக்கு அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். "இந்த நாட்களில், இது இந்தியாவில் மோடியின் உத்தரவாதம் என்று அழைக்கப்படுகிறது. இன்று கூட்டாக தொடங்கி வைக்கப்பட்ட இந்த வசதிகள் வாழ்க்கையை எளிதாக்குவதை மேம்படுத்தும்" என்று பிரதமர் கூறியுள்ளார். இது மொரீஷியஸின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளுக்கு இடையேயான தொடர்பை மேம்படுத்துவதோடு, பிரதான நிலப்பகுதியுடனான நிர்வாக தொடர்பையும் மேம்படுத்தும். பள்ளி குழந்தைகளின் போக்குவரத்து வளர்ச்சியடையும் என்று அவர் கூறினார்.
இரண்டு பொருளாதாரங்களையும் பாதிக்கும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள கலாச்சாரம், பாரம்பரியம் அல்லாத சவால்களை குறிப்பிட்ட பிரதமர் திரு மோடி, இந்தச் சவால்களை எதிர்கொள்ள கடல்சார் பாதுகாப்பில் இந்தியாவும், மொரீஷியஸும் இயற்கையான கூட்டாளிகள் என்று கூறினார். "இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பு, செழிப்பு, ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த நாங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம். பிரத்யேக பொருளாதார மண்டல கண்காணிப்பு, கூட்டு ரோந்து, மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரணம் போன்ற அனைத்து துறைகளிலும் நாங்கள் ஒத்துழைத்து வருகிறோம்" என்று பிரதமர் மேலும் கூறினார். அகலேகாவில் இன்று தொடங்கப்பட்டுள்ள விமான ஓடுபாதை, படகுத்துறை தொடங்கி வைப்பது, இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தும் என்றும், மொரீஷியஸின் கடல்சார் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மொரீஷியஸில் மக்கள் மருந்தக மையங்களை அமைக்க பிரதமர் திரு ஜுக்நாத் மேற்கொண்ட முடிவைப் பாராட்டிய பிரதமர், இதன் மூலம் இந்தியாவின் மக்கள் மருந்தக முன்முயற்சியில் இணைந்த முதல் நாடு மொரீஷியஸ் ஆகியுள்ளது என்றும், இது சிறந்த தரமான இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொதுவான மருந்துகளை வழங்குவதன் மூலம் மொரீஷியஸ் மக்களுக்கு பயனளிக்கும் என்றும் கூறினார்.
மொரீஷியஸ் பிரதமரின் தொலைநோக்குப் பார்வை, ஆற்றல்மிக்க தலைமைப் பண்புக்காக அவரைப் பாராட்டினார். எதிர்காலங்களில் இந்தியா மற்றும் மொரீஷியஸ் உறவுகள் புதிய உச்சங்களை அடையும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்து தமது உரையை நிறைவு செய்தார்.
********
(Release ID: 2010092)
PKV/IR/AG/KRS
(Release ID: 2010113)
Visitor Counter : 105
Read this release in:
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam