பிரதமர் அலுவலகம்

புதுதில்லியில் பாரத் டெக்ஸ் 2024-ஐ பிரதமர் தொடங்கி வைத்தார்

"பாரத் டெக்ஸ் 2024 ஜவுளித் துறையில் இந்தியாவின் அபாரமான திறன்களை முன்னிலைப்படுத்த ஒரு சிறந்த தளமாகும்"

"பாரத் டெக்ஸின் இழை இந்தியப் பாரம்பரியத்தின் புகழ்பெற்ற வரலாற்றை இன்றைய திறமைகளுடன், பாரம்பரியங்களுடன் கூடிய தொழில்நுட்பத்துடன் இணைக்கிறது. பொலிவு, நீடித்த தன்மை, அளவு, திறன் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு இழையாக உள்ளது"

"நாங்கள் பாரம்பரியம், தொழில்நுட்பம், திறமை, பயிற்சி ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறோம்"

"வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் ஜவுளித் துறையின் பங்களிப்பை மேலும் அதிகரிக்க நாங்கள் மிகவும் விரிவான வகையில் பணியாற்றி வருகிறோம்"

"இந்தியப் பெண்களுக்கு ஜவுளி, காதித்துறை அதிகாரம் அளித்துள்ளது"

"தொழில்நுட்பமும் நவீனமயமாக்கலும் தற்போது தனித்துவத்துடனும், நம்பகத்தன்மையுடனும் இணைந்து இருக்க முடியும்"

"இந்தியாவின் சுய அடையாளத்தை உருவாக்குவதில் கஸ்தூரி பருத்தி ஒரு பெரிய நடவடிக்கையாக இருக்கும்"

"பிரதமர் மித்ரா பூங்காக்களில், பிளக், ப்ளே வசதிகளுடன் கூடிய நவீன உள்கட்டமைப்பை ஒரே இடத்தில் முழு மதிப்

Posted On: 26 FEB 2024 12:57PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மிகப்பெரிய உலகளாவிய ஜவுளி நிகழ்வுகளில் ஒன்றான பாரத் டெக்ஸ் 2024-ஐ தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியையும் பிரதமர் பார்வையிட்டார்.

அப்போது உரையாற்றிய பிரதமர், பாரத் டெக்ஸ் 2024 க்கு அனைவரையும் வரவேற்பதாக கூறினார். மேலும் இன்றைய நிகழ்வு சிறப்பு வாய்ந்தது என்றும், ஏனெனில் இந்த நிகழ்வு இந்தியாவின் இரண்டு பெரிய கண்காட்சி மையங்களான பாரத் மண்டபம், யஷோ பூமியில் நடைபெறுகிறது என்றும் தெரிவித்தார். சுமார் 100 நாடுகளைச் சேர்ந்த 3000-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் சுமார் 40,000 பார்வையாளர்கள் இடம்பெறுவது  குறித்து தெரிவித்த பிரதமர், அவர்கள் அனைவருக்கும் பாரத் டெக்ஸ் ஒரு தளத்தை வழங்குகிறது என்று தெரிவித்தார்.

இன்றைய நிகழ்ச்சி பல பரிமாணங்களை உள்ளடக்கியது என்று குறிப்பிட்ட பிரதமர், "பாரத் டெக்ஸின் இழை இந்தியப் பாரம்பரியத்தின் புகழ்பெற்ற வரலாற்றை இன்றைய திறமைகளுடன் இணைக்கிறது என்றும், பாரம்பரியங்களுடன் கூடிய தொழில்நுட்பம், பொலிவு, நீடித்த தன்மை, அளவு, திறன் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் என்றும் அவர் கூறினார். இந்தியா முழுவதிலுமிருந்து வரும் எண்ணற்ற ஜவுளி பாரம்பரியங்களை உள்ளடக்கிய ஒரே பாரதம், உன்னத பாரதம் என்பதற்கான சிறந்த உதாரணமாக இந்த நிகழ்வைத் தாம்  காண்பதாக அவர் தெரிவித்தார். இந்தியாவின் ஜவுளி பாரம்பரியத்தின் வலிமை, நீடித்த தன்மை, திறன் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் இந்தக் கண்காட்சி நடத்தப்பட்டதற்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

ஜவுளித்துறையில் பல்வேறு தரப்பினர் இருப்பதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், இந்தியாவின் ஜவுளித் துறையைப் புரிந்துகொள்வதிலும், சவால்கள், விருப்பங்களை அறிந்துகொள்வதிலும் அவர்களின் அறிவாற்றலை எடுத்துரைத்தார். நெசவாளர்களின் தலைமுறை அனுபவம் குறித்து அவர் குறிப்பிட்டார். வளர்ச்சியடைந்த பாரதம், அதன் நான்கு முக்கிய தூண்களின் தீர்மானத்தை சுட்டிக்காட்டியதுடன், இந்தியாவின் ஜவுளித் துறை ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள் ஆகிய அனைவருடனும் தொடர்புடையது என்பதை எடுத்துரைத்தார். எனவே, பாரத் டெக்ஸ் 2024 போன்ற ஒரு நிகழ்வின் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கிறது என்று பிரதமர் கூறினார்.

வளர்ச்சியடைந்த பாரதம் பயணத்தில் ஜவுளித் துறையின் பங்களிப்பை விரிவுபடுத்த அரசு பணியாற்றி வருவதைப் பிரதமர் விரிவாக எடுத்துரைத்தார். "நாங்கள் பாரம்பரியம், தொழில்நுட்பம், திறமை, பயிற்சி ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறோம்" என்று அவர் கூறினார். சமகால உலகின் தேவைகளுக்கு பாரம்பரிய வடிவமைப்புகளைப் புதுப்பிப்பதில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார். பண்ணை முதல் இழை வரை, ஃபைபர் முதல் தொழிற்சாலை, தொழிற்சாலை முதல் அலங்காரம், அலங்காரம் முதல் வெளிநாட்டு நிதி என்ற ஐந்து கருத்துகளை அவர் குறிப்பிட்டார். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறைக்கு உதவும் வகையில், குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் என்பதற்கான வரையறையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதைப் பிரதமர் குறிப்பிட்டார். நேரடி விற்பனை, கண்காட்சிகள், ஆன்லைன் தளங்கள் ஆகியவை கைவினைஞர்களுக்கும், சந்தைக்கும் இடையிலான தூரத்தைக் குறைத்துள்ளன என்றும் அவர் பேசினார்.

பல்வேறு மாநிலங்களில் ஏழு பிரதமர் மித்ரா பூங்காக்களை உருவாக்கும் அரசின் விரிவான திட்டங்களைச் சுட்டிக்காட்டிய பிரதமர், ஒட்டுமொத்த ஜவுளித் துறைக்கும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டினார். "முழு மதிப்புச் சூழல் அமைப்பையும் ஒரே இடத்தில் நிறுவ அரசு பாடுபடுகிறது, அங்கு நவீன உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன" என்று பிரதமர் குறிப்பிட்டார். இது அளவு மற்றும் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தளவாடச் செலவுகளையும் குறைக்கும் என்று அவர் கூறினார்.

வேலைவாய்ப்பு திறன், ஜவுளித் துறைகளில் கிராமப்புற மக்கள், பெண்களின் பங்கேற்பு பற்றி குறிப்பிட்ட பிரதமர், ஆடை உற்பத்தியாளர்களில் 10 பேரில் 7 பேர் பெண்கள் என்றும், கைத்தறித் துறையில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக உள்ளது என்றும் கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், காதியை வளர்ச்சி, வேலைவாய்ப்புக்கான வலுவான ஊடகமாக மாற்றியுள்ளது என்று அவர் கூறினார். அதேபோல், கடந்த பத்தாண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நலத்திட்டங்கள், உள்கட்டமைப்பு உந்துதல்களும் ஜவுளித் துறைக்கு பயனளித்துள்ளன என்று அவர் கூறினார்.

பருத்தி, சணல் மற்றும் பட்டு உற்பத்தியாளராக இந்தியாவின் வளர்ந்து வரும் துறை குறித்துப் பேசிய பிரதமர் மோடி, பருத்தி விவசாயிகளுக்கு அரசு ஆதரவளிப்பதாகவும், அவர்களிடமிருந்து பருத்தியை வாங்குவதாகவும் கூறினார். அரசால் தொடங்கப்பட்ட கஸ்தூரி பருத்தி, உலகளவில் இந்தியாவின் வர்த்தக மதிப்பை உருவாக்குவதில் ஒரு பெரிய நடவடிக்கையாக இருக்கும் என்று அவர் கூறினார். சணல், பட்டுத் துறைக்கான நடவடிக்கைகளையும் பிரதமர் குறிப்பிட்டார். தொழில்நுட்ப ஜவுளி போன்ற புதிய துறைகள் குறித்தும் பேசிய அவர், தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கம் மற்றும் இப்பகுதியில் புத்தொழில்களுக்கான வாய்ப்புகள் குறித்தும் தெரிவித்தார்.

ஒருபுறம் தொழில்நுட்பம், இயந்திரமயமாக்கலின் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், மறுபுறம் தனித்துவம், நம்பகத்தன்மையை வலியுறுத்தினார். இந்த இரண்டும் இணைந்து செயல்படக்கூடிய இடமாக இந்தியா உள்ளது என்று அவர் தெரிவித்தார். இந்தியாவின் கைவினைஞர்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் எப்போதும் ஒரு தனித்துவமான அம்சத்தைக் கொண்டுள்ளன என்று குறிப்பிட்ட பிரதமர், தனித்துவமான அலங்காரத்திற்கான தேவை இருப்பதால் இதுபோன்ற திறமைசாலிகளுக்கான தேவை அதிகரிக்கிறது என்று கூறினார். எனவே, நாட்டில் உள்ள தேசிய ஆடை அலங்கார தொழில்நுட்ப நிறுவனங்களின் எண்ணிக்கையை 19 ஆக உயர்த்துவதன் மூலம் திறன் மற்றும் அளவில் அரசு கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் கூறினார். புதிய தொழில்நுட்பம் குறித்த சிறப்புப் பயிற்சித் திட்டங்களை ஏற்பாடு செய்வதன் மூலம் உள்ளூர் நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களும் தேசிய ஆடை அலங்கார தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைக்கப்படுகிறார்கள் என்று அவர் கூறினார். இதுவரை 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் திறன் மேம்பாடு பயிற்சிகளைப் பெற்ற சமர்த் திட்டம் பற்றியும் பிரதமர் குறிப்பிட்டார். இந்தத் திட்டத்தில் பெரும்பான்மையான பெண்கள் பங்கேற்றுள்ளதாகவும், சுமார் 1.75 லட்சம் பேர் ஏற்கனவே தொழில்துறையில் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஆதரவு என்பதன் பரிமாணம் குறித்தும் பிரதமர் பேசினார். "தற்போது 'உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஆதரவு, உள்ளூர் தரத்திலிருந்து சர்வதேச தரம்' என்ற மக்கள் இயக்கம் நாட்டில் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார். சிறு கைவினைஞர்களுக்காக கண்காட்சிகள், வணிக வளாகங்கள் போன்ற அமைப்புகளை அரசு உருவாக்கி வருவதாக அவர் கூறினார்.

நேர்மறையான, நிலையான, தொலைநோக்கு அரசு கொள்கைகளின் தாக்கம் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் திரு மோடி, இந்திய ஜவுளி சந்தையின் மதிப்பு 2014-ம் ஆண்டில் 7 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 12 லட்சம் கோடி ரூபாயைத் கடந்துள்ளது என்று கூறினார். நூல், துணி மற்றும் ஆடை உற்பத்தியில் 25 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 380 புதிய பிஐஎஸ் தரநிலைகள் இத்துறையில் தரக் கட்டுப்பாட்டை உறுதி செய்கின்றன என்றும், இது கடந்த 10 ஆண்டுகளில் இத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டை இரட்டிப்பாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் ஜவுளித் துறையின் அதிக எதிர்பார்ப்புகளை எடுத்துரைத்த பிரதமர் திரு மோடி, கொவிட் தொற்றுநோயின் போது மருத்துவ உபகரணங்கள் மற்றும் முகக் கவசங்களை தயாரிப்பதற்காக தொழில்துறையின் முயற்சிகளை நினைவு கூர்ந்தார். ஜவுளித் துறையுடன் அரசு விநியோக அமைப்பை நெறிப்படுத்தி, அனைத்து நாடுகளுக்கும் போதுமான எண்ணிக்கையிலான மருத்துவ உபகரணங்கள் மற்றும் முகக் கவசங்களை வழங்கியதை அவர் சுட்டிக்காட்டினார்.  எதிர்காலத்தில் இந்தியா உலக ஏற்றுமதி மையமாக மாறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். "உங்களின் ஒவ்வொரு தேவைக்கும் அரசு உறுதுணையாக இருக்கும்" என்று பிரதமர் உறுதியளித்தார். ஜவுளித் துறையில் உள்ளவர்களிடையே ஒத்துழைப்பை மேம்படுத்தவும் அவர் பரிந்துரைத்தார். இதனால் தொழில்துறையின் வளர்ச்சியை மேலும் மேம்படுத்த ஒரு விரிவான தீர்மானத்தை அடைய முடியும். உணவு, சுகாதாரம், முழுமையான வாழ்க்கை முறை உட்பட வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் 'அடிப்படைகளுக்கு திரும்பிச் செல்வதை' நோக்கி உலகெங்கிலும் உள்ள மக்களின் விருப்பத்தை சுட்டிக்காட்டிய பிரதமர், ஜவுளித் துறையிலும் இதுதான் நிலை என்று  தெரிவித்தார். ஆடை உற்பத்திக்கு ரசாயனம் இல்லாத வண்ண நூல்களின் தேவை குறித்தும் அவர் குறிப்பிட்டார். இந்திய சந்தையை மட்டுமே பூர்த்தி செய்யும் மனப்பான்மையிலிருந்து ஜவுளித் துறையினர் விலகி, ஏற்றுமதியை நோக்கி சிந்திக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். ஆப்பிரிக்கச் சந்தையின் குறிப்பான தேவைகள் அல்லது ஜிப்சி சமூகங்களின் தேவைகள் மகத்தான சாத்தியக்கூறுகளை முன்வைக்கின்றன என்பதற்கான உதாரணத்தை அவர் வழங்கினார்.

கதரை அதன் பாரம்பரிய பிம்பத்திலிருந்து உடைத்து, இளைஞர்களிடையே நம்பிக்கையை ஊட்டும் ஒரு அலங்காரமாக மாற்றுவதற்கான தனது முயற்சிகள் குறித்தும் அவர் பேசினார். ஜவுளித் துறையின் நவீன துறைகளில் மேலும் ஆராய்ச்சி செய்யவும், சிறப்பு ஜவுளிகளின் நற்பெயரை மீண்டும் பெறவும் அவர் கேட்டுக்கொண்டார். இந்தியாவின் வைரத் தொழில் தற்போது அந்தத் தொழில் தொடர்பான அனைத்து உபகரணங்களையும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்கிறது என்பதை உதாரணமாகக் குறிப்பிட்ட பிரதமர், ஜவுளித் துறையினர் ஜவுளிக் கருவிகள் உற்பத்தி துறையில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், புதிய யோசனைகள் மற்றும் முடிவுகளைக் கொண்டவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் ஜவுளி போன்ற புதிய பகுதிகளை ஆராயுமாறு தொடர்புடையவர்களை அவர் கேட்டுக்கொண்டார். உலகளாவிய அலங்கார போக்கைப் பின்பற்றாமல் வழிநடத்துமாறு அவர் அவர்களைக் கேட்டுக்கொண்டார்.

மக்களின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் கிரியா ஊக்கியாக செயல்பட அரசு தயாராக உள்ளது என்பதை சுட்டிக் காட்டிய பிரதமர், உலகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும், தங்களது சந்தைகளை பன்முகப்படுத்தும் வகையிலும் புதிய தொலைநோக்குப் பார்வையுடன் தொழிற்சாலைகள் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி தமது உரையை நிறைவு செய்தார்.

மத்திய வர்த்தகம், தொழில் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் திருமதி தர்ஷனா ஜர்தோஷ் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

 

பின்னணி

 

பாரத் டெக்ஸ் 2024  பிப்ரவரி 26-29 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

11 ஜவுளி ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில்களின் கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டு அரசால் ஆதரிக்கப்படும், பாரத் டெக்ஸ் 2024 வர்த்தகம், முதலீடு என்ற இரட்டை தூண்களின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது, இது நீடித்த தன்மையில் அதிக கவனம் செலுத்துகிறது. நான்கு நாள் நிகழ்வில் 65-க்கும் மேற்பட்ட அமர்வுகள் இடம்பெற்றுள்ளன. 100-க்கும் மேற்பட்ட உலகளாவிய குழு உறுப்பினர்கள் துறை எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கின்றனர். நீடித்தத்தன்மை மற்றும் சுற்றறிக்கை, இந்திய ஜவுளி பாரம்பரியம், நீடித்தத்தன்மை மற்றும் உலகளாவிய வடிவமைப்புகள் போன்ற பல்வேறு கருப்பொருள்களில் அலங்கார விளக்கக்காட்சிகள் ஆகியவற்றையும் இது கொண்டுள்ளது.

3,500-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள், 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 3,000-க்கும் மேற்பட்ட வாங்குபவர்கள் மற்றும் 40,000-க்கும் மேற்பட்ட வணிக பார்வையாளர்கள், ஜவுளித்துறை மாணவர்கள், நெசவாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் ஜவுளித் தொழிலாளர்கள் தவிர, கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் பாரத் டெக்ஸ் 2024-ல் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டின் போது 50-க்கும் மேற்பட்ட அறிவிப்புகள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால், ஜவுளித் துறையில் முதலீடு, வர்த்தகத்திற்கு மேலும் உத்வேகம் அளிக்கவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தற்சார்பு இந்தியா, வளர்ச்சியடைந்த இந்தியா குறித்த பிரதமரின் பார்வையை முன்னெடுத்துச் செல்வதில் இது மற்றொரு முக்கிய படியாகும்.

***

ANU/PKV/IR/AG/KV



(Release ID: 2009074) Visitor Counter : 95