சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

ஜம்முவில் எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் திரு. நரேந்திர மோடி திறந்து வைத்தார்

கடந்த 10 ஆண்டுகளில் ஜம்மு-காஷ்மீரில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 4-ல் இருந்து 12-ஆக அதிகரித்துள்ளது. இந்தக் காலகட்டத்தில், ஜம்மு காஷ்மீரில் எம்பிபிஎஸ் இடங்கள் 500 முதல் 1300 ஆக அதிகரித்துள்ளன: பிரதமர்

"கடந்த 10 ஆண்டுகளில் ஜம்மு - காஷ்மீரில் முதுநிலை மருத்துவ இடங்கள் பூஜ்ஜியத்தில் இருந்து 650 ஆக அதிகரித்துள்ளது"

Posted On: 20 FEB 2024 3:19PM by PIB Chennai

ஜம்முவில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனமான எய்ம்ஸ் மருத்துவமனையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (20.02.2024) தொடங்கி வைத்தார். இந்தப் பகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளையும்  தொடங்கி வைத்து புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன், திட்டங்களின் பயனாளிகளுடன் கலந்துரையாடினார்.

ஜம்மு- காஷ்மீர் துணை நிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா, மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஜுகல் கிஷோர் சர்மா உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், கடந்த 10 ஆண்டுகளில் ஜம்மு-காஷ்மீரில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 4-ல் இருந்து 12-ஆக அதிகரித்துள்ளது என்றார். இதேபோல், இந்தக் காலகட்டத்தில், ஜம்மு காஷ்மீரில் எம்பிபிஎஸ் இடங்கள் 500 முதல் 1300 வரை இரு மடங்காக அதிகரித்துள்ளன என்று கூறினார். 2014 க்கு முன்னர் ஜம்மு-காஷ்மீரில் முதுநிலை மருத்துவ இடங்கள் இல்லை எனவும் தற்போது இந்த யூனியன் பிரதேசத்தில் 650 முதுநிலை மருத்துவ இடங்கள் உள்ளன என்றும் அவர்  கூறினார். இப்பகுதியில் 35 புதிய செவிலியர் மற்றும் துணை மருத்துவக் கல்லூரிகளும் தொடங்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.  இதனால் செவிலியர் இடங்களின் எண்ணிக்கையையும் கணிசமாக அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.

கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் மத்திய அரசு 15 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளை தொடங்கியுள்ளது என்று அவர் தெரிவித்தார். ஜம்மு மக்கள் சிறப்பு மருத்துவ சிகிச்சையைப் பெறுவதற்காக இனி தில்லிக்குச் செல்ல வேண்டியதில்லை என்று அவர் கூறினார்.

நாட்டின் அனைத்துத் துறைகளிலும் உள்கட்டமைப்பு மேம்பாடு வேகமாக நடைபெறுவதை பிரதமர் எடுத்துரைத்தார். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி மக்கள் அனைவரும் பணியாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஜம்மு-காஷ்மீரில் மேற்கொள்ளப்படும் மத்திய அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா எய்ம்ஸ் மருத்துவமனைக்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தார். கடந்த 5 ஆண்டுகளில் ஜம்மு - காஷ்மீரில் சுகாதாரம், கல்வி, பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு விரைவான நல்ல மாற்றத்தைக் கண்டுள்ளது என்று அவர் கூறினார். பயங்கரவாதம் 75 சதவீதம் குறைந்துள்ளதாகவும் முதலீடுகள் அதிகரித்துள்ளதாகவும் திரு மனோஜ் சின்ஹா குறிப்பிட்டார்.

நாட்டில் குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு அளித்து வரும் முக்கியத்துவத்தை இந்நிகழ்ச்சியில் பேசிய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் எடுத்துரைத்தார். கடைக்கோடி மக்கள் வரை வளர்ச்சித் திட்டங்களின் பயன்கள் சென்றடைவதை உறுதி செய்வதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு திரு ஜிதேந்திர சிங் நன்றி தெரிவித்தார்.

***

ANU/SM/PLM/RS/DL



(Release ID: 2007489) Visitor Counter : 75