நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
இந்திய உணவுக் கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்தை ரூ.10,000 கோடியிலிருந்து ரூ.21,000 கோடியாக உயர்த்தியதன் மூலம் வேளாண் துறைக்கு மத்திய அரசு ஊக்கமளிக்கிறது
Posted On:
17 FEB 2024 1:14PM by PIB Chennai
வேளாண் துறையை மேம்படுத்துவதற்கும், நாடு முழுவதும் விவசாயிகளின் நலனை உறுதி செய்வதற்கும் மத்தியஅரசு, இந்திய உணவுக் கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்தை ரூ .10,000 கோடியிலிருந்து ரூ .21,000 கோடியாக உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த உத்திப்பூர்வ நடவடிக்கை விவசாயிகளை ஆதரிப்பதற்கும் இந்தியாவின் விவசாய பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்குமான அரசின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது.
இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு கட்டமைப்பின் தூணாக எஃப்.சி.ஐ, குறைந்தபட்ச ஆதரவு விலையில் உணவு தானியங்களை கொள்முதல் செய்தல், உத்திப்பூர்வ உணவு தானிய சேமிப்புகளை பராமரித்தல், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு விநியோகித்தல் மற்றும் சந்தையில் உணவு தானிய விலைகளை உறுதிப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்திய உணவுக் கழகத்தின் உத்தரவுகளை திறம்பட நிறைவேற்றுவதில் அதன் செயல்பாட்டுத் திறன்களை மேம்படுத்துவதில் அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்தின் அதிகரிப்பு ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்.
நிதித் தேவையின் இடைவெளியை ஈடுகட்ட இந்திய உணவுக் கழகம் ரொக்கக் கடன், குறுகிய காலக் கடன் வழிவகைகள் போன்றவற்றை நாடுகிறது.
அனுமதிக்கப்பட்ட மூலதனத்தை அதிகரித்தல் மற்றும் மேலும் உட்செலுத்துதல் மூலம் வட்டிச் சுமை குறைந்து, பொருளாதாரச் செலவு குறையும். இந்த மூலதனத்தை உட்செலுத்துவதன் மூலம், இந்திய உணவுக் கழகம் தனது சேமிப்பு வசதிகளை நவீனப்படுத்துதல், போக்குவரத்து கட்டமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களை பின்பற்றுதல் ஆகியவற்றையும் மேற்கொள்ளும்.
இந்த நடவடிக்கைகள் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைப்பதற்கு மட்டுமல்லாமல், நுகர்வோருக்கு உணவு தானியங்களை திறம்பட விநியோகிப்பதை உறுதி செய்வதற்கும் அவசியம்.
நடைமுறை மூலதனத் தேவைக்காகவும், மூலதன சொத்துக்களை உருவாக்குவதற்காகவும் இந்திய உணவுக் கழகத்திற்கு சமபங்கு உரிமைகளை மத்திய அரசு வழங்குகிறது. தற்போதுள்ள உள் அமைப்புகள் மற்றும் வெளிப்புற அமைப்புகள் (மாநில கொள்முதல் இணையதளங்கள்) ஆகியவற்றைப் பயன்படுத்தி, ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப அமைப்பை உருவாக்க இந்திய உணவுக் கழகம் ஒரு விரிவான முன்முயற்சியை மேற்கொண்டுள்ளது.
மின்னணு அலுவலக அமலாக்கம் ஏற்கனவே இந்திய உணவுக் கழகத்தை குறைந்த காகித செலவு கொண்ட அமைப்பாக மாற்றியுள்ளது. இந்திய உணவுக் கழகத்தின் முக்கிய செயல்பாட்டு மென்பொருளாக விளங்கும் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்பத் தீர்வுகளின் இந்த முன்முயற்சிகள், பொதுவான டிஜிட்டல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதுடன், தகவல்களுக்கான ஒற்றை ஆதாரத்தை வழங்கும்.
இந்திய உணவுக் கழகம் தனது திறனை மேம்படுத்தும் வகையில், சிமெண்ட் சாலைகள், கூரை பராமரிப்பு, மின் விளக்குகள் மற்றும் எடைமேடைகளை மேம்படுத்துதல் போன்ற பணிகளை விடாமுயற்சியுடன் செயல்படுத்தி உணவு பாதுகாப்பை மேம்படுத்தி வருகிறது.
*******
ANU/PKV/BS/DL
(Release ID: 2006782)
Visitor Counter : 98