நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்

2019-20 ஆம் ஆண்டுக்கான 16-வது தேசிய இளையோர் நாடாளுமன்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மத்திய இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால் நாளை பரிசுகளை வழங்குகிறார்

Posted On: 15 FEB 2024 12:02PM by PIB Chennai

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கான 16-வது தேசிய இளையோர் நாடாளுமன்ற போட்டி 2019-20-க்கான பரிசு வழங்கும் விழா நாளை புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற நூலக கட்டடத்தில் உள்ள ஜிஎம்சி பாலயோகி அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால் விழாவிற்கு தலைமை வகிக்கவுள்ளார்.  போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டு வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு பரிசுகளை அவர் வழங்குவார். இந்நிகழ்ச்சியில், 16-ஆவது தேசிய இளையோர் நாடாளுமன்ற போட்டியில் தேசிய அளவில் முதலிடம் பெற்ற பதிண்டா மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் தங்களது 'இளைஞர் நாடாளுமன்ற' அமர்வை மீண்டும் நிகழ்த்தவுள்ளனர்.

நாடாளுமன்ற விவகார அமைச்சகம் கடந்த 27 ஆண்டுகளாக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இளையோர் நாடாளுமன்றப் போட்டிகளை ஏற்பாடு செய்து வருகிறது. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கான இளையோர் நாடாளுமன்றப் போட்டித் திட்டத்தின் கீழ், தொடரின் 16-வதுபோட்டி நாட்டின் 36 பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கிடையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

 

சுய ஒழுக்கம், மாறுபட்ட கருத்துக்களை சகித்துக்கொள்ளுதல், கருத்துக்களை நேர்மையாக வெளிப்படுத்துதல் மற்றும் ஜனநாயக வாழ்க்கை முறையின் பிற நற்பண்புகளை இளைய தலைமுறையினரிடையே வளர்ப்பதை இளையோர் நாடாளுமன்ற திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

போட்டியில் தேசிய அளவில் முதலிடம் பெற்றதற்கான கோப்பை பதிண்டாவில் உள்ள பஞ்சாப் மத்திய பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்படும். இது தவிர, போட்டியில் குழு அளவில் முதலிடம் பெற்ற பின்வரும் 5 பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு குழு அளவிலான வெற்றிக் கோப்பைகள் அமைச்சரால் வழங்கப்படும்:

1.டிஏவி கல்லூரி, ஜலந்தர்

2.ஜாவ்பூர் பல்கலைக்கழகம், கொல்கத்தா

3. மும்பை பல்கலைக்கழகம், மும்பை

4.சாணக்யா தேசிய சட்டப் பல்கலைக்கழகம், பாட்னா

5.சிவாஜி பல்கலைக்கழகம், கோலாப்பூர்

***

ANU/PKV/PLM/AG/KV



(Release ID: 2006296) Visitor Counter : 80