பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சர்வதேச எரிசக்தி முகமையின் அமைச்சர்கள் அளவிலான கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 14 FEB 2024 3:10PM by PIB Chennai

மேன்மை தாங்கிய சீமான்களே, சீமாட்டிகளே வணக்கம்.

சர்வதேச எரிசக்தி முகமையின் அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். சர்வதேச எரிசக்தி முகமை நிறுவப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த மைல்கல்லை எட்டியதற்கு வாழ்த்துக்கள். இந்த கூட்டத்திற்கு இணைத் தலைமை வகித்த அயர்லாந்து, ஃபிரான்ஸ் நாடுகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே

இந்தியா உலகின் மிக விரைவாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக உள்ளது. நீடித்த வளர்ச்சிக்கு எரிசக்தி பாதுகாப்பு, நிலைத்தன்மை தேவைப்படுகிறது. பத்தாண்டுகளில், 11-வது பெரிய பொருளாதாரத்திலிருந்து 5-வது பெரிய பொருளாதாரத்திற்கு நாம் முன்னேறியுள்ளோம். அதே காலகட்டத்தில், நமது சூரிய மின்சக்தி திறன் 26 மடங்கு அதிகரித்துள்ளது. நமது புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனும் இரட்டிப்பாகியுள்ளது. இது குறித்து பாரிஸ் நகரில் அளித்த வாக்குறுதிகளை காலக்கெடுவுக்கு முன்னதாகவே நிறைவேற்றியுள்ளோம்.

நண்பர்களே

உலக மக்கள் தொகையில் 17 சதவீதம் பேர் இந்தியாவில் உள்ளனர். உலகின் மிகப்பெரிய எரிசக்தி அணுகல் முயற்சிகள் சிலவற்றை நாங்கள் நடத்தி வருகிறோம். எனினும், நமது கரியமிலவாயு  உமிழ்வு உலகளவில் மொத்தத்தில் 4% மட்டுமேயாகும். இருப்பினும், பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். கூட்டு மற்றும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை நாங்கள் கடைப்பிடிக்கிறோம். சர்வதேச சூரியசக்தி கூட்டணி போன்ற முயற்சிகளுக்கு இந்தியா ஏற்கனவே தலைமை தாங்கியுள்ளது. எங்களுடைய இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை முறை இயக்கம் புவி சார்ந்த வாழ்க்கை முறையில் கவனம் செலுத்துகிறது. 'குறைத்தல், மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி' என்பது இந்தியாவின் பாரம்பரிய வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாகும். இந்தியாவின் ஜி20 தலைமைப் பதவியும் இந்த முன்னணியில் குறிப்பிடத்தக்க நடவடிக்கையைக் கண்டது. உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணியின் தொடக்கம் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். இந்த முயற்சிக்கு ஆதரவளித்த சர்வதேச எரிசக்தி முகமைக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே

140 கோடி இந்திய மக்கள்  திறமை, தொழில்நுட்பம் மற்றும் புதுமைக் கண்டுபிடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இதில் இந்தியா பெரிய பங்காற்றும்போது சர்வதேச எரிசக்தி முகமை பயனடையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். சர்வதேச எரிசக்தி முகமையின் அமைச்சர்கள் நிலையிலான கூட்டம் வெற்றிபெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போதுள்ள கூட்டாண்மைகளை வலுப்படுத்தவும், புதிய கூட்டாண்மைகளை உருவாக்கவும் இந்தத் தளத்தை நாம் பயன்படுத்திக் கொள்வோம். தூய்மையான, பசுமையான, அனைவரையும் உள்ளடக்கிய உலகை உருவாக்குவோம்.

நன்றி

மிகவும் நன்றி.

***

ANU/PKV/IR/KPG/KV


(Release ID: 2005892) Visitor Counter : 93