பிரதமர் அலுவலகம்

எக்கனாமிக் டைம்ஸ் நவ் உலகளாவிய வர்த்தக உச்சி மாநாடு 2024-ல் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 09 FEB 2024 11:09PM by PIB Chennai

கயானா பிரதமர் திரு. மார்க் பிலிப்ஸ் அவர்களே, திரு. வினீத் ஜெயின் அவர்களே, தொழில்துறைத் தலைவர்களே, தலைமைச் செயல் அதிகாரிகளே, இதர பிரமுகர்களே வணக்கம்.

நண்பர்களே,

இந்த உலக வர்த்தக உச்சி மாநாட்டின் குழு, இந்த ஆண்டு மிக முக்கியமான கருப்பொருளை தேர்வு செய்துள்ளது.  மேம்பாடு மற்றும் பல்வகைப்படுத்தல் ஆகியவை இன்றைய சகாப்தத்தில் மிகவும் விவாதிக்கப்பட்ட சொற்கள். வளர்ச்சி மற்றும் பல்வகைப்படுத்தல் பற்றி விவாதிக்கும் போது, இது பாரதத்திற்கான நேரம். இது இந்தியாவின் நேரம் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். உலகம் முழுவதும் பாரதத்தின் மீதான நம்பிக்கை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. முன்னெப்போதும் இல்லாத உற்சாகத்தை நாம் காண்கிறோம். பாரதத்தின் டிஜிட்டல் மற்றும் பௌதீக உள்கட்டமைப்பு சாதனை உச்சத்தில் உள்ளது. 10 ஆண்டுகளில் பாரதம் சிறப்பாக மாறியுள்ளது என்று ஒவ்வொரு நிபுணர் குழுவிலும் ஒரு விவாதம் உள்ளது. வினீத் அவர்களும் பல விஷயங்களைக் குறிப்பிட்டார். இன்று உலகம் பாரதத்தின் மீது உலகம் எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறது என்பதை இந்த விவாதங்கள் காட்டுகின்றன. பாரதத்தின் திறன்கள் குறித்து உலகில் இதுபோன்ற நேர்மறையான உணர்வு முன்பு ஒருபோதும் இருந்ததில்லை. அதனால்தான் நான் செங்கோட்டையில் இருந்து சொன்னேன் – "இதுதான் நேரம், சரியான நேரம்" என்று.

நண்பர்களே,

எந்தவொரு நாட்டின் வளர்ச்சிப் பயணத்திலும் அனைத்து சூழ்நிலைகளும் அதற்கு சாதகமாக இருக்கும்போது, அந்த நாடு வரவிருக்கும் நூற்றாண்டுகளில் வலுவாக இருக்கும். இன்று பாரதத்திற்கான காலத்தைப் பார்க்கிறேன். இந்த காலகட்டம் - இந்த சகாப்தம் - உண்மையிலேயே சிறப்பானது. நமது வளர்ச்சி விகிதம் தொடர்ந்து அதிகரித்து வரும் நேரமும், நமது நிதிப் பற்றாக்குறை குறைந்து வரும் நேரமும் இது. நமது ஏற்றுமதி அதிகரித்து, நடப்புக் கணக்கு பற்றாக்குறை குறைந்து வரும் நேரம் இது. நமது உற்பத்தி முதலீடு வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து, பணவீக்கம் கட்டுக்குள் இருக்கும் நேரம் இது. வாய்ப்புகளும், வருமானமும் அதிகரித்து, வறுமை குறைந்து வரும் நேரம் இது. உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன் இரண்டும் அதிகரித்து வரும் நேரம் இது. நம்மை விமர்சிப்பவர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்தருக்கும் காலமும் இதுதான்.

நண்பர்களே

இந்த முறை நமது இடைக்கால பட்ஜெட் நிபுணர்களிடமிருந்தும், ஊடக நண்பர்களிடமிருந்தும் பெரும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. பல ஆய்வாளர்களும் இதை பாராட்டியுள்ளனர். இது ஒரு ஜனரஞ்சக பட்ஜெட் அல்ல. இதுவும் பாராட்டுக்கு ஒரு காரணம். இந்த விமர்சனத்திற்கு நான் நன்றி கூறுகிறேன். ஆனால் அவர்களின் மதிப்பீட்டில் மேலும் சில புள்ளிகளைச் சேர்க்க விரும்புகிறேன். சில அடிப்படை அம்சங்களை கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். எங்கள் பட்ஜெட் அல்லது ஒட்டுமொத்த கொள்கை உருவாக்கம் பற்றி நீங்கள் விவாதித்தால், அதில் சில முதல் கொள்கைகளை நீங்கள் காண்பீர்கள். அந்த கொள்கைகள் - ஸ்திரத்தன்மை, நிலைத்தன்மை, ஆகியவை. இந்த பட்ஜெட்டும் அதன் நீட்டிப்புதான்.

நண்பர்களே

ஒருவரை பரிசோதிக்க வேண்டும் என்றால், கடினமான அல்லது சவாலான காலங்களில் மட்டுமே அவரை சோதிக்க முடியும். கொவிட்-19 தொற்றுநோயும் அதைத் தொடர்ந்து வந்த காலமும் உலகெங்கிலும் உள்ள அரசுகளுக்கு ஒரு பெரிய சோதனையாக மாறியது. சுகாதாரம் மற்றும் பொருளாதாரம் என்ற இரட்டை சவாலை எப்படி சமாளிப்பது என்று யாருக்கும் தெரியவில்லை. அந்த நாட்களை நினைவில் கொள்ளுங்கள். நான் தொடர்ந்து தொலைக்காட்சியில் நாட்டு மக்களுடன் தொடர்பு கொண்டிருந்தேன். அந்த நெருக்கடியின் போது ஒவ்வொரு கணமும் நான் மக்களுடன் நின்றேன். அந்த ஆரம்ப நாட்களில், உயிர்களைக் காப்பாற்றுவதற்கு முன்னுரிமை அளிப்பது பற்றி நான் பேசினேன். எங்கள் எல்லா முயற்சிகளையும் நாங்கள் செய்தோம். ஏழைகளுக்கு அரசு இலவச ரேஷன் பொருட்களை வழங்கியது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளில் கவனம் செலுத்தினோம். தடுப்பூசிகள் ஒவ்வொரு இந்தியரையும் விரைவாக சென்றடைவதையும் நாங்கள் உறுதி செய்தோம்.

சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தின் அம்சங்களை ஒரே நேரத்தில் நிவர்த்தி செய்தோம். பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக அரசு பணம் வழங்கியது.  நாங்கள் சாலையோர வியாபாரிகள், சிறு தொழில்முனைவோருக்கு நிதி உதவி வழங்கினோம், விவசாயத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்பதை உறுதிப்படுத்த எல்லாவற்றையும் செய்தோம். பேரிடரை வாய்ப்பாக மாற்ற நாங்கள் தீர்மானித்தோம்.

எமது சொந்த தீர்மானங்களுக்கு அமைய எமது நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுத்து பணவீக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தோம். இன்றும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சில நாடுகளின் நிலை உள்ளது. அவர்கள் தேர்ந்தெடுத்த பாதையின் பக்க விளைவுகள் இன்னும் உள்ளன. எங்களுக்கும் அழுத்தம் கொடுக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

நண்பர்களே

நாங்கள் ஒரு மக்கள் நல அரசாக செயல்படுகிறோம். சாமானிய மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதும் எங்களது உயர் முன்னுரிமையாகும். நாங்கள் புதிய திட்டங்களை உருவாக்கினோம். இந்தத் திட்டங்களின் பலன்கள் தகுதியுள்ள ஒவ்வொரு பயனாளிகளையும் சென்றடைவதையும் உறுதி செய்தோம்.

நாங்கள் நிகழ்காலத்தில் மட்டுமல்ல, நாட்டின் எதிர்காலத்திலும் முதலீடு செய்துள்ளோம். நீங்கள் கவனித்தால், எங்கள் அரசின் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் நான்கு முக்கிய காரணிகளை நீங்கள் கவனிக்கலாம். முதலாவது - மூலதன செலவின வடிவில் உற்பத்தி செலவினங்களை பதிவு செய்தல், இரண்டாவது - நலத்திட்டங்களில் முதலீடு, மூன்றாவது - வீண் செலவுகள் மீதான கட்டுப்பாடு மற்றும் நான்காவது - நிதி ஒழுக்கம். இந்த நான்கு அம்சங்களையும் நாங்கள் சமநிலைப்படுத்தியுள்ளோம்,

நண்பர்களே

நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வந்ததன் மூலமும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலமும் எங்கள் அரசு நாட்டின் பணத்தை மிச்சப்படுத்தியுள்ளது. முன்பு 10 கோடி போலி பயனாளிகள் இருந்தனர். இதுபோன்றவை பல ஆண்டுகளாக தொடர்ந்தன. அவர்கள் மோசடி பயனாளிகளாக இருந்தனர் என்பதைக் கேட்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். பிறக்காத பயனாளிகள்! பிறக்காத விதவைகள் இருந்தார்கள். பத்து கோடி! இதுபோன்ற 10 கோடி போலி பெயர்களை பதிவுகளில் இருந்து நீக்கினோம். நேரடி பணப் பரிமாற்றத் திட்டத்தை நாங்கள் தொடங்கினோம். பணம் கசிவதை நிறுத்தினோம்.

நண்பர்களே,

மக்கள் பணத்தை மிச்சப்படுத்தும் வகையில் எங்கள் திட்டங்களை வடிவமைத்துள்ளோம். இன்று, ஜல் ஜீவன் இயக்கம் காரணமாக ஏழைகளுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பது சாத்தியமாகியுள்ளது. இதனால், நோய்களுக்கான அவர்களின் சிகிச்சைச் செலவுகள் குறைந்துள்ளன. ஆயுஷ்மான் பாரத் திட்டம் நாட்டின் ஏழைகளை காப்பாற்றியுள்ளது மற்றும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் மக்கள் மருந்தக மையங்களில் மருந்துகளுக்கு 80 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. தள்ளுபடியின் விளைவாக, மக்கள் மருந்தக மையங்களில் இருந்து மருந்துகளை வாங்கியவர்களின் பணம் 30,000 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது.

நண்பர்களே

தற்போதைய தலைமுறைக்கு மட்டுமல்லாமல் வரவிருக்கும் பல தலைமுறைகளுக்கும் நான் பொறுப்புக் கூற கடமைப்பட்டுள்ளேன். நான் என் அன்றாட வாழ்க்கையை வாழ விரும்பவில்லை. இனி வரும் தலைமுறையினரின் எதிர்காலத்தை பாதுகாக்க விரும்புகிறேன்.

நண்பர்களே

சில கூடுதல் வாக்குகளைப் பெறுவதற்காக கருவூலத்தை காலி செய்யும் அரசியலில் இருந்து நான் விலகியே இருக்கிறேன். எனவே, எங்கள் கொள்கைகள் மற்றும் முடிவுகளில் நிதி நிர்வாகத்திற்கு முன்னுரிமை அளித்துள்ளோம். ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். மின்சாரம் தொடர்பாக சில அரசியல் கட்சிகளின் அணுகுமுறையை நீங்கள் அறிவீர்கள். அந்த அணுகுமுறை நாட்டின் மின்சார அமைப்பின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். எனது அணுகுமுறை அவர்களிடமிருந்து வேறுபட்டது. ஒரு கோடி வீடுகளுக்கு மேற்கூரை சூரிய சக்தி திட்டத்தை எங்கள் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்தத் திட்டத்தின் மூலம், மக்கள் மின்சாரத்தை உருவாக்கலாம். அத்துடன் அவர்களின் மின்சாரக் கட்டணங்களை பூஜ்ஜியமாகக் குறைக்கலாம். மேலும் அதிகப்படியான மின்சாரத்தை விற்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம். அனைவருக்கும் குறைந்த விலையில் எல்இடி பல்புகளை வழங்கும் உஜாலா (உன்னத ஜோதி) திட்டத்தை அமல்படுத்தியதன் மூலம், நாங்கள் மலிவான விலையில் எல்இடி பல்புகளை வழங்கியுள்ளோம். கடந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது, எல்இடி பல்புகள் 400 ரூபாய்க்கு கிடைத்தன. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன், நிலைமை மாறியது, எல்இடி பல்புகள் 40 முதல் 50 ரூபாய்க்கு கிடைக்கத் தொடங்கின. அதே தரத்துடன், அதே நிறுவனத்திடமிருந்து இவை கிடைக்கின்றன. எல்இடி பல்புகள் காரணமாக மக்கள் தங்கள் மின் கட்டணத்தில் சுமார் 20,000 கோடியை மிச்சப்படுத்தியுள்ளனர்.

நண்பர்களே

அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்கள் இங்கு ஏராளம் உள்ளனர்.  வறுமையை ஒழிப்போம், வறுமையை ஒழிப்போம் என்ற முழக்கம் கடந்த 70 ஆண்டுகளாக நமது நாட்டில் இரவு பகலாக எதிரொலித்து வந்திருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த முழக்கங்களுக்கு மத்தியில், வறுமை ஒழிக்கப்படவில்லை. நேரத்தில் ஏழைகள் தொடர்ந்து ஏழைகளாகவே இருந்தனர். ஆனால், 2014-ம் ஆண்டு ஏழைகளின் மகன் பிரதமரான பிறகு, வறுமைக்கு எதிரான போர் நடத்தப்படுகிறது. எங்கள் அரசாங்கம் வறுமைக்கு எதிரான இயக்கத்தைத் தொடங்கியது. இதன் விளைவாக கடந்த 10 ஆண்டுகளில், 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து வெளியே வந்துள்ளனர். இது நமது அரசின் கொள்கைகள் சரியானது என்பதையும், நமது அரசின் திசை சரியானது என்பதையும் காட்டுகிறது.

நண்பர்களே

நமது ஆளுகை மாதிரி ஒரே நேரத்தில் இரண்டு முனைகளில் முன்னோக்கி நகர்கிறது. ஒருபுறம், நாம் மரபுரிமையாகப் பெற்றுள்ள 20 ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்கிறோம். மறுபுறம், 21 ஆம் நூற்றாண்டின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். எந்தப் பணியையும் நாங்கள் மிகச் சிறியதாகக் கருதவில்லை. மாறாக, நாம் மிகப்பெரிய சவால்களைக் கூட எதிர்கொண்டு லட்சிய இலக்குகளை அடைந்துள்ளோம். எங்கள் அரசு 11 கோடி கழிப்பறைகளைக் கட்டியிருக்கிறது என்றால், விண்வெளித் துறையிலும் புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம். எங்கள் அரசு ஏழைகளுக்கு 4 கோடி வீடுகளை வழங்கியுள்ளது என்றால், நாங்கள் 10,000-க்கும் மேற்பட்ட அடல் டிங்கரிங் ஆய்வகங்களை அமைத்துள்ளோம். எங்கள் அரசு 300-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகளை கட்டியிருக்கிறது என்றால், சரக்கு மற்றும் பாதுகாப்பு வழித்தடங்கள் அமைக்கும் பணிகளும் வேகமாக முன்னேறி வருகின்றன. எங்கள் அரசு வந்தே பாரத் ரயில்களை அறிமுகப்படுத்தியுள்ளது என்றால், தில்லி உட்பட நாடு முழுவதும் உள்ள நகரங்களில் 10,000 மின்சார பேருந்துகளையும் இயக்கியுள்ளோம். எங்கள் அரசு கோடிக்கணக்கான இந்தியர்களை வங்கி சேவைகளுடன் இணைத்துள்ள அதே வேளையில், டிஜிட்டல் இந்தியா மற்றும் நிதித் தொழில்நுட்ப சேவைகள் மூலம் வசதிகளையும் நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

நண்பர்களே

முந்தைய அரசுகளை விட மிக விரைவாகவும், பெரிய அளவிலும் பணியாற்ற நான் முடிவு செய்தேன். இந்த அணுகுமுறையின் விளைவுகளை இன்று உலகம் கண்கூடாகக் காண்கிறது. முந்தைய 70 ஆண்டுகளில் செய்யப்படாத அளவுக்கு கடந்த 10 ஆண்டுகளில் அதிக பணிகள் செய்யப்பட்ட பல துறைகள் உள்ளன. அதாவது, நீங்கள் 70 ஆண்டுகளை 10 ஆண்டுகளுடன் ஒப்பிடுங்கள். 2014 வரை, ஏழு தசாப்தங்களில் கிட்டத்தட்ட 20,000 கிலோமீட்டர் ரயில் பாதைகளுக்கு மின்மயமாக்கப்பட்டது. 70 ஆண்டுகளில் 20,000 கி.மீ! எங்கள் அரசின் 10 ஆண்டுகால ஆட்சியில், 40,000 கிலோமீட்டருக்கும் அதிகமான ரயில் பாதைகளை நாங்கள் மின்மயமாக்கியுள்ளோம். இப்போது சொல்லுங்கள், ஒப்பீடு ஏதும் உண்டா?

நண்பர்களே

2014 வரை, பாரதம் கடந்த 70 ஆண்டுகளில் 250 கிலோமீட்டருக்கும் குறைவான மெட்ரோ ரயில் கட்டமைப்பைக் கொண்டிருந்தது. கடந்த 10 ஆண்டுகளில், 650 கிலோமீட்டருக்கும் அதிகமான புதிய மெட்ரோ ரயில் கட்டமைப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

நண்பர்களே

2014 க்கு முந்தைய 10 ஆண்டுகளில், நாடு பின்பற்றிய கொள்கைகளால் பொருளாதார அழிவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இதே நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே பாரதத்தின் பொருளாதார நிலவரம் குறித்த வெள்ளை அறிக்கையையும் நாங்கள் சமர்ப்பித்திருக்கிறோம். இன்று, அது குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன. இன்று இங்கு இவ்வளவு பெரிய பார்வையாளர்கள் இருப்பதால், எனது எண்ணங்களையும் வெளிப்படுத்த விரும்புகிறேன். இன்று கொண்டு வந்துள்ள இந்த வெள்ளை அறிக்கை, 2014 ஆம் ஆண்டிலும் கூட என்னால் கொண்டு வரப்பட்டிருக்க முடியும். நான் அரசியல் ஆதாயம் அடைய வேண்டும் என்றால், அந்த புள்ளிவிவரங்களை 10 ஆண்டுகளுக்கு முன்பே தேசத்தின் முன் சமர்ப்பித்திருக்க முடியும். ஆனால் 2014-ல் நான் யதார்த்தத்தை எதிர்கொண்டபோது, நான் அதிர்ச்சியடைந்தேன். அந்த நேரத்தில் நான் அந்த விஷயங்களை அம்பலப்படுத்தியிருந்தால், ஒரு சிறிய தவறான சமிக்ஞை கூட நாட்டின் நம்பிக்கையை சிதைத்திருக்கும். மக்கள் நம்பிக்கையை இழந்திருப்பார்கள்.

எல்லாவற்றையும் அம்பலப்படுத்துவது அரசியல் ரீதியாக எனக்கு பொருத்தமாக இருந்திருக்கும். அரசியல் என்னைத் தூண்டுகிறது. ஆனால் தேச நலன் என்னை அவ்வாறு செய்ய அனுமதிக்கவில்லை. அதனால்தான் நான் அரசியல் பாதையை விட்டுவிட்டு தேச நலன் என்ற பாதையைத் தேர்ந்தெடுத்தேன். கடந்த 10 ஆண்டுகளில், நிலைமை வலுவாகிவிட்டபோது,= நான் தேசத்திற்கு உண்மையைச் சொல்ல வேண்டும் என்று உணர்ந்தேன். அதனால்தான் நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நீங்கள் அதைப் பார்த்தால், நாங்கள் எங்கிருந்தோம், பல கடினமான சூழ்நிலைகளைக் கடந்து இன்று எப்படி இங்கு வந்தோம் என்பது உங்களுக்குத் தெரியும்.

நண்பர்களே

இன்று, பாரதத்தின் புதிய உச்சத்தை நீங்கள் காண்கிறீர்கள். எங்கள் அரசு பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டது, வினீத் அவர்கள் பாரதம் விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் ஆகும் என்று திரும்பத் திரும்ப குறிப்பிட்டதை நான் கவனித்தேன். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. நமது மூன்றாவது பதவிக்காலத்தில் நமது நாடு உலகப் பொருளாதாரத்தில் முதல் 3 இடங்களை எட்டும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

நண்பர்களே,

தயாராக இருங்கள். நான் எதையும் மறைக்கவில்லை. இப்போது எனக்கு அனுபவம் கிடைத்திருப்பதால், காரணம் இல்லாமல் நான் பேசுவதில்லை. அதனால்தான் நான் சொல்கிறேன். மூன்றாவது பதவிக்காலத்தில் இன்னும் பெரிய முடிவுகள் வரவிருக்கின்றன. 'புதிய இந்தியா' அதிவேகத்தில் செயல்படும். இதுதான் மோடியின் உத்தரவாதம். இந்த உச்சிமாநாட்டில் சாதகமான விவாதங்கள் இருக்கும் என்று நான் நம்புகிறேன். பல நல்ல ஆலோசனைகள் வெளிவரும், அவை எங்களுக்கு உதவும். இந்த நிகழ்ச்சிக்காக அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக்க நன்றி.

பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார். 

----

ANU/PKV/PLM/DL



(Release ID: 2005008) Visitor Counter : 41