பிரதமர் அலுவலகம்

மகரிஷி தயானந்த சரஸ்வதியின் 200-வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்


“நமது பாரம்பரியமும் ஆன்மீகமும் மங்கி வந்த காலகட்டத்தில், சுவாமி தயானந்தர் நம்மை வேதங்களுக்குத் திரும்புமாறு அழைத்தார்”

"மகரிஷி தயானந்தர் வேத ஞானி மட்டுமல்ல - தேசிய முனிவரும் கூட"

"இந்தியாவைப் பற்றி சுவாமிஜி வைத்திருந்த நம்பிக்கையை, நாம் அமிர்த காலத்தின் மீதான தன்னம்பிக்கையாக மாற்ற வேண்டும்"

"நேர்மையான முயற்சிகள் மற்றும் புதிய கொள்கைகள் மூலம், நாடு மகள்களை முன்னேற்றி வருகிறது"

Posted On: 11 FEB 2024 12:32PM by PIB Chennai

சுவாமி தயானந்த சரஸ்வதியின் 200-வது பிறந்த நாளையொட்டி குஜராத் மாநிலம் மோர்பியில் உள்ள தங்காராவில் உள்ள சுவாமி தயானந்தர் பிறந்த இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார்.

பிரதமர் மோடி தமது உரையில், சுவாமிஜியின் பங்களிப்புகளை கௌரவிப்பதற்கும், அவரது போதனைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்கும் ஆரிய சமாஜம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளதற்கு மகிழ்ச்சியைத் தெரிவித்தார். கடந்த ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்றதைக் கூறிய அவர், அத்தகைய பெரிய ஆத்மாவின் பங்களிப்புகள் மிகவும் சிறப்பாக இருக்கும்போது, அவர்களுடன் தொடர்புடைய விழாக்கள் விரிவாக இருப்பது இயற்கையானது என்று குறிப்பிட்டார்.

மகரிஷி தயானந்தரின் வாழ்க்கையை நமது புதிய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்த இந்த நிகழ்வு ஒரு சிறந்த ஊடகமாக இருக்கும் என்று நம்புவதாகக் கூறிய பிரதமர் திரு நரேந்திர மோடி, அத்தகைய குறிப்பிடத்தக்க ஆளுமைகளின் மரபுகளை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

சுவாமி தயானந்தர் குஜராத்தில் பிறந்தவர் என்றும், ஹரியானாவில் தீவிரமாக செயல்பட்டு வந்தார் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இரு பிராந்தியங்களுடனும் தமக்குள்ள தொடர்பை எடுத்துரைத்த பிரதமர், சுவாமி தயானந்தரின் வாழ்க்கையில் தமக்கு ஏற்பட்ட ஆழமான தாக்கத்தை ஒப்புக் கொண்டார். அவரது போதனைகள் தமது நடவடிக்கைகளை வடிவமைத்துள்ளன என்றும் அவரது மரபு தமது பயணத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது என்றும் பிரதமர் கூறினார். சுவாமிஜியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள அவரைப் பின்பற்றுபவர்களுக்கு பிரதமர்  தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

சுவாமி தயானந்தரின் போதனைகளின் தாக்கம் குறித்து பேசிய பிரதமர் திரு நரேந்திர மோடி, எதிர்காலத்தின் போக்கை மாற்றியமைக்கும் தருணங்கள் வரலாற்றில் உள்ளன என்றார். இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு, சுவாமி தயானந்தரின் பிறப்பு அத்தகைய தருணம் என அவர் தெரிவித்தார். அறியாமை மற்றும் மூடநம்பிக்கைகளிலிருந்து இந்தியாவை விழிப்படையச் செய்வதில் சுவாமிஜியின் பங்கை பிரதமர் அவர் எடுத்துரைத்தார், வேத அறிவின் சாரத்தை மீண்டும் கண்டுபிடிப்பதற்கான இயக்கத்தை வழிநடத்தினார் என்றும் அவர் கூறினார். நமது பாரம்பரியம் மற்றும் ஆன்மீகம் மங்கி வரும் காலங்களில், சுவாமி தயானந்தா 'வேதங்களுக்குத் திரும்பு' என்று அழைப்பு விடுத்தார் என்று குறிப்பிட்ட பிரதமர், வேதங்கள் குறித்த அறிவார்ந்த விளக்கங்கள் மற்றும் பகுத்தறிவு விளக்கங்களை வழங்குவதற்கான சுவாமிஜியின் முயற்சிகளை சுட்டிக் காட்டினார். சமூக நெறிமுறைகள் குறித்த சுவாமிஜியின் அச்சமற்ற விமர்சனத்தையும், சமூகத்தில் தன்னம்பிக்கையை தூண்டிய இந்திய தத்துவத்தின் உண்மையான சாராம்சத்தை அவர் தெளிவுபடுத்தியதையும் பிரதமர் குறிப்பிட்டார். ஒற்றுமையை வளர்ப்பதிலும், இந்தியாவின் பண்டைய பாரம்பரியத்தில் பெருமித உணர்வை ஏற்படுத்துவதிலும் சுவாமி தயானந்தரின் போதனைகளின் முக்கியத்துவத்தை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.

நமது சமூக தீமைகள் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் நம்மை தாழ்ந்தவர்களாக சித்தரிக்க ஒரு வழிமுறையாக பயன்படுத்தப்பட்டன என்று பிரதமர் குறிப்பிட்டார். சிலர் சமூக மாற்றங்களைக் குறிப்பிட்டு பிரிட்டிஷ் ஆட்சியை நியாயப்படுத்தியதாக பிரதமர் தெரிவித்தார். சுவாமி தயானந்தரின் வருகை இந்தச் சதிகளுக்கு பலத்த அடி கொடுத்தது என்று அவர் கூறினார். "லாலா லஜபதி ராய், ராம் பிரசாத் பிஸ்மில், சுவாமி சிரத்தானந்த் போன்ற புரட்சியாளர்கள் ஆரிய சமாஜத்தால் தாக்கம் பெற்று உருவானார்கள் என்றப கூறிய பிரதமர், தயானந்தர் ஒரு வேத ஞானி மட்டுமல்லாமல், ஒரு தேசிய முனிவரும் கூட என்று குறிப்பிட்டார்.

அமிர்த காலத்தின் ஆரம்ப ஆண்டுகளில் சுவாமி தயானந்தரின் 200-வது ஆண்டு விழா வந்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். தேசத்திற்கு பிரகாசமான எதிர்காலம் என்ற சுவாமி தயானந்தாவின் தொலைநோக்குப் பார்வையை பிரதமர் திரு நரேந்திர மோடி  நினைவு கூர்ந்தார். இந்தியாவைப் பற்றி சுவாமிஜி வைத்திருந்த நம்பிக்கையை, நாம் அமிர்த காலத்தின் மீதான தன்னம்பிக்கையாக மாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.  சுவாமி தயானந்தர் நவீனத்துவத்தின் ஆதரவாளராகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்தார் என்று பிரதமர் மேலும் கூறினார்.

உலகெங்கிலும் உள்ள ஆர்ய சமாஜ் நிறுவனங்களின் விரிவான கட்டமைப்பை எடுத்துக் கூறிய பிரதமர், 2,500 க்கும் மேற்பட்ட பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மற்றும் 400 க்கும் மேற்பட்ட குருகுலங்கள் மாணவர்களுக்கு ஆர்ய சமாஜம் கல்வி கற்பிப்பதை சுட்டிக்காட்டினார். இது நவீனத்துவம் மற்றும் வழிகாட்டுதலுக்கு ஒரு துடிப்பான சான்றாகும் என்று அவர் கூறினார். 21-ம் நூற்றாண்டில் புதிய உத்வேகத்துடன் தேச நிர்மாண முன்முயற்சிகளை மேற்கொள்ள இந்த சமூகத்தினர் முன்வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். டி.ஏ.வி நிறுவனங்கள் "சுவாமிஜியின் வாழும் நினைவுகள்" என்று கூறிய பிரதமர், அவை தொடர்ந்து அதிகாரப்படுத்தப்படும் என்று உறுதியளித்தார்.

சுவாமிஜியின் தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்லும் வகையில் தேசிய கல்விக் கொள்கை உள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். உள்ளூர் பொருட்களுக்கு முக்கியத்துவம், தற்சார்பு இந்தியா, சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம், நீர் பாதுகாப்பு, தூய்மை இந்தியா, விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றில் ஆர்ய சமாஜத்தின் மாணவர்கள் மற்றும் நிறுவனங்கள் பங்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். முதல் முறை வாக்காளர்கள் தங்கள் பொறுப்புகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஆர்ய சமாஜம் நிறுவப்பட்ட 150-வது ஆண்டு விழா பற்றி குறிப்பிட்ட பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்த முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பத்தைக் கூட்டு முன்னேற்றம் மற்றும் நினைவுகூரலுக்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அனைவரையும் ஊக்குவித்தார்.

இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய பிரதமர், ஆச்சார்யா தேவ்ரத் ஜி-யின் முயற்சிகளை எடுத்துரைத்து, சுவாமி தயானந்தர் பிறந்த இடத்திலிருந்து, இயற்கை விவசாயம் குறித்த செய்தி நாட்டில் உள்ள ஒவ்வொரு விவசாயியையும் சென்றடையட்டும் என்று கூறினார்.

பெண்களின் உரிமைகளுக்காக சுவாமி தயானந்தா குரல் கொடுத்ததைப் பாராட்டிய பிரதமர், நேர்மையான முயற்சிகள் மற்றும் புதிய கொள்கைகள் மூலம், நாடு தனது மகள்களை முன்னேற்றுகிறது என்று கூறி, சமீபத்திய மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா குறித்துப் பேசினார். மகரிஷி தயானந்தருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இந்த சமூக முன்முயற்சிகள் மூலம் மக்களை இணைப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

புதிதாக உருவாக்கப்பட்ட இளைஞர் அமைப்பான மை-பாரத்தில் சேருமாறு டிஏவி கட்டமைப்பில் உள்ள இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார். "டிஏவி கல்வி கட்டமைப்பைச் சேர்ந்த மாணவர்களை மை பாரத் தளத்தில் சேர ஊக்குவிக்குமாறு சுவாமி தயானந்த சரஸ்வதியைப் பின்பற்றுபவர்களைக் கேட்டுக் கொள்வதாகக் கூறிப் பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.  

----

 

ANU/PKV/PLM/DL



(Release ID: 2004957) Visitor Counter : 60