உள்துறை அமைச்சகம்

வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோயில் கட்டுமானம் மற்றும் ஸ்ரீ ராம் லல்லா பிராண பிரதிஷ்டை குறித்து மக்களவையில் விதி எண் 193-ன் கீழ் இன்று நடைபெற்ற விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா பங்கேற்று உரையாற்றினார்


2024-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதி ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நாளாகத் திகழும்: திரு அமித் ஷா

ஜனவரி 22 இந்தியாவின் ஆன்மீக உணர்வின் மறுமலர்ச்சி நாள்: திரு அமித் ஷா

Posted On: 10 FEB 2024 6:09PM by PIB Chennai

வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோயில் கட்டுமானம் மற்றும் ஸ்ரீ ராம் லல்லா பிராண பிரதிஷ்டை குறித்து மக்களவையில் விதி எண் 193-ன் கீழ் இன்று நடைபெற்ற விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா பங்கேற்று உரையாற்றினார். பல ஆண்டுகளாக நீதிமன்ற ஆவணங்களில் இருந்த இந்த வழக்கு, திரு நரேந்திர மோடி பிரதமரான பின்னர் வெளிப்பாடு பெற்றதாக அவர் தெரிவித்தார்.  தமது எண்ணங்களையும் நாட்டு மக்களின் குரலையும் இன்று இந்த சபையில் முன்வைக்க விரும்புவதாக திரு அமித் ஷா கூறினார். 2024 ஜனவரி 22 ஆம் தேதி பத்தாயிரம் ஆண்டுகளுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாக இருக்கப் போகிறது என்று அவர் கூறினார். 1528-ம் ஆண்டில் தொடங்கிய அநீதிக்கு எதிரான போராட்டத்தின் முடிவை இந்த ஜனவரி 22 குறிக்கிறது என்று திரு அமித் ஷா கூறினார். ஜனவரி 22-ம் தேதி ஒட்டுமொத்த இந்தியாவின் ஆன்மீக உணர்வின் மறுமலர்ச்சி நாள் என்றும் அது மகத்தான இந்தியாவின் பயணத்தின் தொடக்கம் என்றும் அவர் கூறினார். 1528 முதல் 2024-ம் ஆண்டு வரை ஸ்ரீ ராமர் கோவிலுக்காக போராடிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் கூறினார்.

கடவுள் ராமர் மற்றும் ராம சரித்திரம் இல்லாமல் இந்தியாவை கற்பனை செய்து பார்க்க முடியாது என்றும், இந்த நாட்டை அறிந்து கொள்ளவும், உணரவும் விரும்புவோர், கடவுள் ராமர் மற்றும் ராம சரிதம் இல்லாமல் அதை அடைய முடியாது என்றும் உள்துறை அமைச்சர் கூறினார். கடவுள் ராமரின் குணமும், கடவுள் ராமரும் இந்த நாட்டு மக்களின் ஆன்மா என்று அவர் தெரிவித்தார். கடவுள் ராமர் இல்லாத இந்தியாவை கற்பனை செய்பவர்களுக்கு இந்தியாவை தெரியாது என்றும், அவர்கள் அடிமை சகாப்தத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

ராம ராஜ்ஜியம் என்பது எந்தவொரு குறிப்பிட்ட மதத்திற்கோ அல்லது பிரிவுக்கானதோ அல்ல என்றும், ஒரு சிறந்த அரசு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான அடையாளமாக அது உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.  இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகிற்கும் ஒரு சிறந்த அரசு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான அடையாளம் அது என்றும் அவர் குறிப்பிட்டார்.

1858 முதல் நடந்து வந்த சட்டப் போராட்டம் 330 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வந்ததாக அவர் குறிப்பிட்டார். ராம ஜென்மபூமியின் வரலாறு மிக நீண்டது என்றும், பல மன்னர்கள், துறவிகள், அமைப்புகள் மற்றும் சட்ட வல்லுநர்கள் இதற்கு பங்களித்துள்ளனர் என்றும் உள்துறை அமைச்சர் கூறினார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை முழு உலகிற்கும் காட்டியுள்ளது என்று அவர் கூறினார்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக, நாட்டில் வன்முறை ஏற்படும் என்று பலர் கூறியதாக அவர் தெரிவித்தார்.  ஆனால் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு சிந்தனை நீதிமன்றத் தீர்ப்பை வெற்றி அல்லது தோல்விக்கு பதிலாக அனைவரும் ஏற்றுக்கொள்ளும் உத்தரவாக மாற்றியுள்ளது என்று அவர் தெரிவித்தார். ராமர் கோவில் கட்டுமானத்திற்குப் பிறகு அதைத் திறக்க அழைக்கப்பட்டபோது, பிரதமர் திரு நரேந்திர மோடி 11 நாட்கள் கடினமான விரதத்தை மேற்கொண்டார் என்று அமைச்சர் கூறினார். 11 நாட்கள் கட்டிலில் படுத்துத் தூங்காமல், இளநீரை மட்டுமே குடித்து, ராமரின் பக்தியில் மூழ்கி பிரதமர், பிராண பிரதிஷ்டை செய்துள்ளதாக திரு அமித் ஷா கூறினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் கடந்த 10 ஆண்டுகளில் பல முக்கிய முடிவுகள் எட்டப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். 1962 ஆம் ஆண்டைப் போல சீனா நமது எல்லையை சேதப்படுத்தியபோது, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ் இந்தியா உறுதியாக நின்றது என்று அவர் கூறினார். பூஞ்ச் மற்றும் புல்வாமாவில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தபோது, துல்லியத் தாக்குதல் மற்றும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதன் மூலம் பிரதமர் துணிச்சலை வெளிப்படுத்தினார் என்றும், தகுந்த பதிலடி கொடுத்தார் என்றும் அவர் கூறினார்.

இந்த நாட்டிற்கு இதுபோன்ற தலைமை நீண்ட காலத்திற்குத் தேவை என்று உள்துறை அமைச்சர் குறிப்பிட்டார். திரு நரேந்திர மோடியை பிரதமராக தேர்ந்தெடுத்ததன் மூலம் நாட்டின் 140 கோடி மக்களும் நாட்டின் அனைத்து சவால்களுக்கும் தீர்வு கண்டுள்ளனர் என்று அவர் கூறினார். ராமர் கோவில் கட்டப்பட்டது, சமூக ஒற்றுமை மற்றும் கலாச்சார மறுமலர்ச்சிக்கு ஒரு அற்புதமான எடுத்துக்காட்டு என்று உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்தார்.

----

 

ANU/AD/PLM/DL



(Release ID: 2004873) Visitor Counter : 69