பாதுகாப்பு அமைச்சகம்
உலக அரங்கில் ஆயுதப்படைகளின் பெண்கள் சக்தி: ஸ்குவாட்ரன் லீடர் பாவனா காந்த், கர்னல் பொனுங் டொமிங், லெப்டினன்ட் கமாண்டர் அன்னு பிரகாஷ் ஆகியோர் ரியாத்தில் நடந்த உலக பாதுகாப்பு கண்காட்சி 2024-ல் தங்களது அற்புதமான பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்
Posted On:
08 FEB 2024 10:13AM by PIB Chennai
தற்போது ரியாத்தில் நடைபெற்று வரும் உலகப் பாதுகாப்பு கண்காட்சி 2024, முப்படையில் உள்ள பெண்களின் பிரதிநிதித்துவத்தைக் கண்டது. இது பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு ஒரு சான்றாகும். ஸ்குவாட்ரன் லீடர் பாவனா காந்த், கர்னல் பொனுங் டொமிங், லெப்டினன்ட் கமாண்டர் அன்னு பிரகாஷ் ஆகியோர் இந்தக் கண்காட்சியின் பல்வேறு கருத்தரங்குகளில், குறிப்பாக சர்வதேசப் பெண்கள் பாதுகாப்பு கருப்பொருள் நிகழ்வுகளில் ஆயுதப்படைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தினர்.
பிப்ரவரி 07-ம் தேதி, அமெரிக்காவுக்கான செளதி தூதர் இளவரசி ரீமா பின்ட் பண்டர் அல்-சவுத் தொகுத்து வழங்கிய 'பாதுகாப்பில் சர்வதேசப் பெண்கள் - உள்ளடக்கிய எதிர்காலத்தில் முதலீடு' என்ற தலைப்பிலான கருத்தரங்கில், இந்திய விமானப்படையின் போர் விமானியான ஸ்குவாட்ரன் லீடர் பாவனா காந்த் ஒரு குழு உறுப்பினராக மைய மேடையில் கலந்து கொண்டார். ஸ்குவாட்ரன் லீடர் தடைகளை உடைத்து வானத்தில் பறக்கும் தனது எழுச்சியூட்டும் பயணம் குறித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். இந்தியாவில் மதிப்பிற்குரிய போர் விமானிகள் கிளப்பில் அங்கம் வகிக்கும் அவர், தலைமைத்துவம், மீள்திறன், நவீன காலப் போரில் பெண்களின் அதிகரித்து வரும் பங்களிப்பு பற்றி விளக்கிய போது, அவரது நுண்ணறிவு பல்வேறு பார்வையாளர்களை ஈர்த்தது. குடியரசு தின அணிவகுப்பில் (2021) பங்கேற்ற முதல் பெண் போர் விமானி என்ற பெருமையைப் பெற்ற அவர், 2024 குடியரசு தின விழாவிலும் பங்கேற்றார்.
இந்திய ராணுவத்தைச் சேர்ந்த கர்னல் பொனுங் டொமிங், வடக்குப் பிரிவில், 15,000 அடிக்கு மேல் அமைந்துள்ள உலகின் மிக உயர்ந்த எல்லை பணிக்குழுவை வழிநடத்திய முதல் பெண் அதிகாரி ஆவார். பொறியியல் அதிகாரியாக பல சவாலான பணிகளில் முன்னணியில் இருந்துள்ளார்.
இந்தியக் கடற்படையின் லெப்டினன்ட் கமாண்டர் அன்னு பிரகாஷ் கடல்சார் பாதுகாப்பு மற்றும் நடவடிக்கைகளில் தனது நிபுணத்துவத்தை முன்னணிக்குக் கொண்டு வந்துள்ளார். இந்தியாவின் பரந்த கடற்கரையைப் பாதுகாப்பதிலும், பிராந்திய ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதிலும் பெண்கள் வகிக்கும் முக்கியப் பங்கை அவரது பங்கேற்பு விளக்கியது. இந்த நிகழ்வில் அவரது பங்கேற்பு, இந்தியாவிற்கும் கடல்சார் களத்தில் பிற நாடுகளுக்கும் இடையே வலுவான உறவுகளையும் ஒத்துழைப்பையும் வளர்க்க உதவியது.
உலகப் பாதுகாப்பு கண்காட்சி 2024-ல் இந்த மூன்று சிறந்த பெண் அதிகாரிகளின் பங்கேற்பு, பாதுகாப்புத்துறையில் இந்தியப் பெண்களின் அதிகரித்து வரும் பங்களிப்புக்கு ஒரு சான்றாகும். இந்த மூவரும் பிப்ரவரி 08 அன்று ரியாதில் உள்ள சர்வதேச இந்தியப் பள்ளியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 600 பள்ளி மாணவர்களுக்கு தங்களின் அற்புதமான பயணம் குறித்து உத்வேகம் தரும் உரையை வழங்குவார்கள். சீருடையில் உள்ள இந்தியப் பெண்களின் மாறுபட்ட திறமைகள் மற்றும் தலைமைத்துவ திறன்களை வெளிப்படுத்துவதற்கான ஒரு தளமாக இந்த நிகழ்வு இருக்கும். எதிர்காலத் தலைமுறையினர் தங்கள் கனவுகளைப் பின்பற்றவும், புதிய தளங்களை உள்ளடக்கவும் இது ஊக்குவிக்கும்.
கடந்த 04-ந் தேதி தொடங்கிய இந்தக் கண்காட்சி இன்றுடன் முடிவடைகிறது. இந்த நிகழ்ச்சிக்காக இந்தியத் தூதுக்குழுவின் தலைவராக பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு அஜய் பட் ரியாத் சென்றுள்ளார்.
***
(Release ID: 2003811)
ANU/SMB/PKV/AG/RR
(Release ID: 2003853)
Visitor Counter : 85