இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், முதலாவது பிம்ஸ்டெக் நீர் விளையாட்டுகள் சாம்பியன்ஷிப் போட்டியை தொடங்கி வைத்தார்

Posted On: 06 FEB 2024 12:32PM by PIB Chennai

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், பிம்ஸ்டெக்  நாடுகள் பங்கேற்கும் நீர் விளையாட்டுகள் (அக்வாடிக்ஸ்) சாம்பியன்ஷிப் போட்டியை புதுதில்லியில்  இன்று தொடங்கி வைத்தார்.   பிம்ஸ்டெக் நீர் விளையாட்டுகள் சாம்பியன்ஷிப் போட்டி இந்த ஆண்டு முதல் முறையாக நடைபெறுகிறது.

நிகழ்ச்சியில் பேசிய அனுராக் சிங் தாக்கூர், உலகின் 25 சதவீத மக்கள் தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் வாழ்கின்றனர் என்று கூறினார்.

7 பிம்ஸ்டெக் நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம், வங்காள விரிகுடா பகுதியில் பயணம் மற்றும் போக்குவரத்துக்கு மேம்படுவதோடு, வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பு அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த நீர் விளையாட்டுப் போட்டி, விளையாட்டு வீரர்களுக்கு இடையிலான நட்பை ஆழப்படுத்த உதவுவதுடன், ஆழமான விளையாட்டு கலாச்சாரத்தை உருவாக்கவும் உதவும் என்று அவர் கூறினார். இந்த நோக்கத்துடனேயே நேபாளத்தில் நடந்த உச்சிமாநாட்டின் போது, இந்த விளையாட்டுத் தொடர்பான அறிவிப்பை பிரதமர் திரு நரேந்திர மோடி, வெளியிட்டதாக  அவர் கூறினார் .

பிம்ஸ்டெக் நாடுகளின் கூட்டமைப்பு  வரலாற்றில் முதன்முறையாக ஒரு விளையாட்டு போட்டி நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார். தொடக்க விழாவில் நேபாளத்தின் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு டிக் பகதூர் லிம்பு மற்றும் பிம்ஸ்டெக் நாடுகளின் தூதர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதலாவது பிம்ஸ்டெக் நீர் விளையாட்டு (அக்வாடிக்ஸ்) சாம்பியன்ஷிப் போட்டி, தில்லியின் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி நீச்சல் குள வளாகத்தில் 2024 பிப்ரவரி 6 முதல் 9 வரை நடைபெறுகிறது, நீச்சல், வாட்டர் போலோ மற்றும் டைவிங் பிரிவுகளில் 20 வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டிகள் நடைபெறுகின்றன.

மூன்று விளையாட்டுப் போட்டிகளில் 39 பதக்கங்களும், மொத்தம் 9 கோப்பைகளும் வழங்கப்பட உள்ளன. பல்வேறு பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த 268 விளையாட்டு வீரர்கள் இந்தப் போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

பிம்ஸ்டெக்  எனப்படும்  வங்காள விரிகுடா நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பில் பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம், இலங்கை, மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன. இந்த பிம்ஸ்டெக் அமைப்பு  இந்த நாடுகளுக்கிடையே ஒரு தனித்துவமான இணைப்பை உருவாக்குகிறது.

***

 

(Release ID: 2002939)

ANU/PKV/PLM/RS/RR


(Release ID: 2002981) Visitor Counter : 125