பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஸ்ரீ ராம ஜென்மபூமி ஆலயம் தொடர்பான ஆறு சிறப்புத் தபால் தலைகளை பிரதமர் வெளியிட்டார்

"இந்தத் தபால் தலைகளின் கலை வெளிப்பாடு மூலம் ராமர் மீதான பக்தி வெளிப்படுத்தப்பட்டுள்ளது"

"ராமர், அன்னை சீதை மற்றும் ராமாயணம் தொடர்பான போதனைகள், காலம், சமூகம் மற்றும் சாதி ஆகியவற்றின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவை- அவை ஒவ்வொரு தனிநபருடனும் இணைந்துள்ளன"

"ஆஸ்திரேலியா, கம்போடியா, அமெரிக்கா, நியூசிலாந்து உட்பட உலகின் பல நாடுகள் ராமரின் வாழ்க்கை நிகழ்வுகள் குறித்து மிகுந்த ஆர்வத்துடன் அஞ்சல் தலைகளை வெளியிட்டுள்ளன"

"பூமியில் மலைகளும் ஆறுகளும் இருக்கும் வரை ராமாயணக் கதை மக்களிடையே நிலைத்திருக்கும்"

Posted On: 18 JAN 2024 3:49PM by PIB Chennai

ஸ்ரீ ராமஜென்மபூமி கோயில் தொடர்பான ஆறு சிறப்பு தபால் தலைகளை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று  (18.01.2024) வெளியிட்டார். அத்துடன் உலகின் பல்வேறு நாடுகளில் முன்பு வெளியிடப்பட்ட ராமர் தொடர்பான இதேபோன்ற தபால் தலைகள் அடங்கிய தொகுப்பு நூலும் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு பாரதத்திலும் வெளிநாடுகளிலும் உள்ள ராமரின் பக்தர்கள் அனைவருக்கும் பிரதமர் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

கடிதங்கள் அல்லது முக்கிய ஆவணங்களை அனுப்புவதற்காக இந்த அஞ்சல்தலைகள் உறைகளில் ஒட்டப்படுகின்றன என்பதை நாம் அனைவரும் அறிவோம் என்று பிரதமர் கூறினார். ஆனால் அவை மற்றொரு நோக்கத்திற்கும் உதவுகின்றன என்று அவர் தெரிவித்தார். வரலாற்று நிகழ்வுகளை எதிர்கால சந்ததியினருக்கு பரப்பும் ஊடகமாகவும் அஞ்சல் தலைகள் செயல்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டார். எனவே அஞ்சல் தலையுடன் நீங்கள் ஒரு கடிதத்தை அல்லது பொருளை அனுப்பும்போதெல்லாம், நீங்கள் மற்றவர்களுக்கு வரலாற்று தகவல்களையும் அனுப்புகிறீர்கள் என்று பிரதமர் கூறினார். இந்த அஞ்சல் தலைகள் வெறும் காகிதங்கள் அல்ல எனவும், துண்டு அல்ல, அவை வரலாற்று ஆவணங்களின் சிறிய வடிவம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

இன்று வெளியிடப்படும் அஞ்சல் தலைகள் நமது இளைய தலைமுறையினர் ராமர் மற்றும் அவரது வாழ்க்கை பற்றி அறிந்து கொள்ள உதவும் என்று பிரதமர் கூறினார். இந்தத் தபால்தலைகளில் ராமர் மீதான பக்தி கலை வெளிப்பாடு மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். சூரியன், 'சரயு' நதி மற்றும் ராமர் ஆலயத்தின் கோயிலின் உள் கட்டடக்கலை ஆகியவை இந்த தபால் தலைகளில் சித்தரிக்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

ராமஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையுடன் இணைந்து இந்தத் தபால்தலைகளைக் கொண்டு வர வழிகாட்டிய துறவிகளையும் பிரதமர் பாராட்டினார்.

கடவுள் ராமர், அன்னை சீதை மற்றும் ராமாயணம் தொடர்பான போதனைகள் காலம், சமூகம் மற்றும் சாதி எல்லைகளைத் தாண்டி ஒவ்வொரு தனிநபருடனும் தொடர்புடையவை என்று பிரதமர் சுட்டிக் காட்டினார். மிகவும் கடினமான காலங்களில் கூட அன்பு, தியாகம், ஒற்றுமை மற்றும் தைரியம் பற்றிக் கற்பிக்கும் ராமாயணம், முழு மனிதகுலத்தையும் இணைக்கிறது என்று அவர் கூறினார். இதனால்தான் ராமாயணம் எப்போதும் உலக கவனத்தின் மையமாக இருந்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இன்று வெளியிடப்பட்ட தொகுப்புகள், உலகம் முழுவதும் ராமர், அன்னை சீதை மற்றும் ராமாயணம் எவ்வளவு பெருமிதத்துடன் பார்க்கப்படுகின்றனர் என்பதைப் பிரதிபலிப்பதாக உள்ளது என்று அவர் கூறினார்.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கம்போடியா, கனடா, செக் குடியரசு, பிஜி, இந்தோனேசியா, இலங்கை, நியூசிலாந்து, தாய்லாந்து, கயானா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகள் ராமரின் வாழ்க்கை நிகழ்வுகள் குறித்து மிகுந்த ஆர்வத்துடன் தபால் தலைகளை வெளியிட்டுள்ளன என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். பகவான் ஸ்ரீ ராமர் மற்றும் அன்னை ஜானகியின் கதைகள் பற்றிய அனைத்து தகவல்களும் அடங்கிய வகையில், புதிதாக வெளியிடப்பட்டுள்ள தொகுப்பு  (ஆல்பம்) அவர்களின் வாழ்க்கையைப் பற்றிய நுண்ணறிவை நமக்கு வழங்கும் என்று அவர் கூறினார். இந்தியாவுக்கு வெளியே ராமர் எவ்வாறு ஒரு சிறந்த அடையாளமாக இருக்கிறார் என்பதையும், நவீன நாடுகளில்கூட, ராமரின் தன்மை எவ்வாறு பாராட்டப்படுகிறது என்பதையும் பிரதமர் எடுத்துரைத்தார்.

மகரிஷி வால்மீகியின் பிரார்த்தனை என்றும் அழியாதது என்று கூறிய பிரதமர், பூமியில் மலைகளும், ஆறுகளும் இருக்கும் வரை ராமாயணக் கதை மக்களிடையே நிலவும் என்றும்,  அப்படித்தான் ராமபிரானின் ஆளுமையும் இருக்கும் என்றும் திரு நரேந்திர மோடி கூறினார்.

***

(Release ID: 1997337)

ANU/PKV/PLM/RS/KRS

 


(Release ID: 1997515) Visitor Counter : 153