பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உங்கள் செயல்களின் மூலம் திருநங்கைகளால் என்ன செய்ய முடியும் என்பதை நீங்கள் நிரூபித்துக் காட்டுகிறீர்கள்- சிறந்த சேவை புரிவதாக மும்பையைச் சேர்ந்த திருநங்கை கல்பனாவிடம் பிரதமர் கூறினார்

உரிமைகள் மறுக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதே எங்கள் நோக்கம்: பிரதமர்

Posted On: 18 JAN 2024 3:44PM by PIB Chennai

வளர்ச்சியடைந்த பாரதம் லட்சியப் பயண பயனாளிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். நாடு முழுவதிலும் இருந்து வளர்ச்சியடைந்த பாரதம் லட்சியப் பயணத்தின் ஆயிரக்கணக்கான பயனாளிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியின் போது, சாய் கின்னர் பச்சத் என்ற பெயரில் சுயஉதவிக் குழு  நடத்தி வரும் மும்பையைச் சேர்ந்த திருநங்கை கல்பனா பாயுடன் பிரதமர் கலந்துரையாடினார். மகாராஷ்டிராவில் திருநங்கைகளுக்கான முதல் குழு இவருடையது. தனது சவாலான வாழ்க்கையை விவரித்த கல்பனா, பிரதமரின் உரையாடலுக்கு நன்றி தெரிவித்தார். திருநங்கைகள், பிச்சை எடுத்தல் மற்றும் நிலையற்ற வாழ்க்கையை வாழ்வதால், அதை மாற்றும் நோக்கில் இந்தக் குழுவைத் தொடங்கியதாக பிரதமரிடம் கூறினார். 

 

கல்பனா, அரசு மானியத்தின் உதவியுடன் கூடை தயாரிப்பில் ஈடுபட்டார். நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் ஸ்வநிதித் திட்டம் அவருக்கு ஆதரவளித்தது. அவர் இட்லி, தோசை மற்றும் பூ வியாபாரம் செய்து வருகிறார். மும்பையில் உள்ள வாய்ப்புகள் குறித்து அவரிடம் பிரதமர் கேட்டறிந்தார். திருநங்கைகளின் யதார்த்தத்தைப் பற்றி மக்களுக்குக் கற்பிப்பதிலும், சமூகத்தில் திருநங்கைகள் குறித்த தவறான பிம்பத்தைச் சரிசெய்வதிலும் கல்பனா ஆற்றும் சேவை மகத்துவமானது என்று பிரதமர் தெரிவித்தார். "திருநங்கைகளால் செய்ய முடிந்ததைச் செய்து நீங்கள் நிரூபித்துக் காட்டுகிறீர்கள்" என்று பிரதமர் கல்பனாவைப் பாராட்டினார்.

கல்பனாவின் குழு, திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கி, தொழில்களைத் தொடங்கவும் ஊக்குவிக்கிறது. மோடியின் உத்தரவாத வாகனம் குறித்து திருநங்கைகள் சமூகத்தினர் மகிழ்ச்சியடைந்து இருப்பதாகவும், மத்திய அரசுத் திட்டங்களால் பல நன்மைகளைப் பெறுவதாகவும் அவர் கூறினார்.  கல்பனாவின் சிறந்த உணர்வுக்கு மரியாதை செலுத்திய பிரதமர், மிகவும் சவாலான வாழ்க்கைச் சூழலிலும் பிறருக்கு வேலைவாய்ப்பு  வழங்கும் அவரைப் பாராட்டினார். உரிமைகள் மறுக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதே எங்கள் நோக்கம் என்று பிரதமர் மேலும் கூறினார்.

***

(Release ID: 1997330)

ANU/PKV/PLM/RS/KRS


(Release ID: 1997502) Visitor Counter : 83