பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

ஆந்திர மாநிலம் திருப்பதியில் நாளை (18.01.2024 அன்று) ஆரோக்கியமான கிராமம் குறித்த 3 நாள் தேசியப் பயிலரங்கை மத்திய இணையமைச்சர் திரு கபில் மோரேஷ்வர் பாட்டீல் தொடங்கி வைக்கிறார்.

Posted On: 17 JAN 2024 1:27PM by PIB Chennai

ஆரோக்கியமான கிராமம் குறித்த 3 நாள் தேசியப் பயிலரங்கை, ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதியில் நாளை (18.01.2024) மத்தியப் பஞ்சாயத்து ராஜ் இணையமைச்சர் திரு கபில் மோரேஷ்வர் பாட்டீல் தொடங்கி வைக்கிறார். ஆந்திரப் பிரதேச துணை முதலமைச்சரும், பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான திரு புதி முத்யலா நாயுடு, பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளர் திரு விவேக் பரத்வாஜ், ஆந்திரப் பிரதேச அரசின் தலைமைச் செயலாளர் டாக்டர் கே.எஸ்.ஜவஹர் ரெட்டி ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

ஆந்திரப் பிரதேச அரசின் பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையுடன் இணைந்து,  மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் 2024 ஜனவரி 18 முதல் 20 வரை ஆரோக்கியமான கிராமம் என்ற கருப்பொருளில் இப்பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளது.

சிறந்த நடைமுறைகள், சுகாதார அளவீடுகளைக் கண்காணிப்பதில் ஊராட்சிகளின் பங்கு, தொற்று மற்றும் தொற்றா நோய்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள், கிராம சுகாதாரத் திட்டத்தை கிராமப் பஞ்சாயத்து வளர்ச்சித் திட்டத்துடன் ஒருங்கிணைத்தல் ஆகியவை இப்பயிலரங்கின் முக்கிய நோக்கமாகும்.

ஆரோக்கியமான கிராமத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்த குழு விவாதத்திற்காகப் பங்கேற்கும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுடன் வெவ்வேறு பணிக்குழுக்கள் அமைக்கப்படும். ஊட்டச்சத்து, கொசுக்களால் பரவும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள், மக்களுக்குத் தரமான சுகாதார சேவைகளை அணுகுவதை உறுதி செய்வதில் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் பங்களிப்பு ஆகியவற்றின் மூலம் ஆரோக்கியமான கிராமத்தை உருவாக்குவதற்கான உத்திகள், அணுகுமுறைகள், திட்டங்கள் குறித்த அவர்களின் கருத்துக்கள் விளக்கப்படும்.

தொற்றும் மற்றும் தொற்றா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் கிராம ஊராட்சியின் பங்களிப்பு, தரமான சுகாதார சேவைகள் கிடைப்பது, பெண்கள், குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினருக்கான ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினைகளை நிவர்த்தி செய்தல், வயதானவர்கள், சிறப்புத் தேவை உள்ளவர்களுக்கு நோய்த்தடுப்பு பராமரிப்பு, வாழ்க்கை முறை நோயை (உயர் ரத்த அழுத்தம் / நீரிழிவு / ஆஸ்துமா போன்றவை) எதிர்த்துப் போராடுவதில் கிராம ஊராட்சிகளின் பங்கு, போதைப்பொருள் உபயோகத் தடுப்பு, மது, புகையிலையின் தீங்கு குறித்து இக்கருத்தரங்கின் போது கலந்துரையாடப்படவுள்ளது.     

மத்திய, மாநில அரசுத் துறைகளின் உயர் அதிகாரிகள், பஞ்சாயத்து ராஜ் பயிற்சி நிறுவனங்கள், ஐக்கிய நாடுகள் சபை / தேசியத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நாடு முழுவதிலுமிருந்து பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 800 பிரதிநிதிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

----

ANU/SMB/IR/KPG/KV



(Release ID: 1996956) Visitor Counter : 102