பிரதமர் அலுவலகம்
10-வது துடிப்புமிக்க குஜராத் உலகளாவிய உச்சிமாநாட்டைப் பிரதமர் தொடங்கி வைத்தார்
"இது புதிய கனவுகள், புதிய தீர்மானங்கள், தொடர்ச்சியான சாதனைகளுக்கான தருணம்"
""ஒரே உலகம், ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்" என்ற கொள்கைகள் இப்போது உலகளாவிய நலனுக்கு ஒரு முன்நிபந்தனையாக மாறியுள்ளன"
"விரைவாக மாறிவரும் உலகில் 'விஸ்வ மித்ரா' பங்களிப்பில் இந்தியா முன்னேறுகிறது"
"இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து உலகளாவிய நிறுவனங்கள் உற்சாகமாக உள்ளன"
"கடந்த 10 ஆண்டுகளில் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் பொருளாதாரத்தின் திறன், வலிமை, போட்டித்தன்மையை மேம்படுத்தியுள்ளன"
Posted On:
10 JAN 2024 2:02PM by PIB Chennai
10-வது துடிப்புமிக்க குஜராத் உலகளாவிய உச்சி மாநாடு 2024-ஐ பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் தொடங்கி வைத்தார். 'எதிர்காலத்திற்கான நுழைவாயில்' என்பது இந்த ஆண்டு உச்சிமாநாட்டின் கருப்பொருள் ஆகும். இதில் 34 நட்பு நாடுகள், 16 கூட்டமைப்புகள் பங்கேற்றுள்ளன. வடகிழக்கு பிராந்தியங்களில் முதலீட்டு வாய்ப்புகளை வெளிப்படுத்த வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்தால் இந்த உச்சிமாநாடு ஒரு தளமாக பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிகழ்வில் தொழில்துறை தலைவர்கள் பலர் உரையாற்றினர். ஆர்செலர் மிட்டல் நிறுவனத்தின் தலைவர் திரு லட்சுமி மிட்டல், ஜப்பான் சுஸுகி மோட்டார் கார்ப்பரேஷன் தலைவர் திரு டோஷிஹிரோ சுசூகி, ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் திரு முகேஷ் அம்பானி, அமெரிக்காவின் மைக்ரான் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு சஞ்சய் மெஹ்ரோத்ரா, அதானி குழுமத்தின் தலைவர் திரு கௌதம் அதானி, தென் கொரியாவின் சிம்டெக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு ஜெஃப்ரி சுன், டாடா சன்ஸ் லிமிடெட் தலைவர் திரு என்.சந்திரசேகரன், டிபி வேர்ல்டு தலைவர் திரு சுல்தான் அகமது பின் சுலயேம். ஸ்ரீ சங்கர் திரிவேதி சீனியர் துணைத் தலைவர் திரு என்விடியா, ஜீரோதா நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு நிகில் காமத் ஆகியோர் கூட்டத்தில் உரையாற்றி தங்கள் வணிகத் திட்டங்கள் குறித்துத் தெரிவித்தனர். வர்த்தகத் தலைவர்கள் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையைப் பாராட்டினர்.
ஜப்பானின் சர்வதேச விவகாரங்களுக்கான துணை அமைச்சர் திரு ஷின் ஹோசாகா, சவுதி அரேபியாவின் முதலீட்டுத்துறை துணையமைச்சர் திரு இப்ராஹீம் யூசஃப் அல் முபாரக், மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்கா, தெற்காசியா, ஐக்கிய நாடுகள் சபையின் இங்கிலாந்து இணையமைச்சர் திரு தாரிக் அகமது, அர்மீனியாவின் பொருளாதார அமைச்சர் திரு வாகன் கெரோபியான் மொராக்கோவின் பொருளாதார விவகாரங்கள், தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திரு. தீத் ரிசாலோ, தொழில், வர்த்தக அமைச்சர் திரு ரியாட் மெஸோர், நேபாள நிதி அமைச்சர் திரு பிரகாஷ் சரண் மஹத், வியட்நாம் துணைப் பிரதமர் திரு டிரான் லு குவாங், செக் குடியரசின் பிரதமர் திரு பெட்டர் ஃபியாலா, மொசாம்பிக் அதிபர் திரு பிலிப் நியுசி, திமோர் லெஸ்தே அதிபர் திரு ஜோஸ் ராமோஸ்-ஹோர்டா ஆகியோரும் துடிப்புமிக்க குஜராத் உலகளாவிய உச்சிமாநாட்டில் உரையாற்றினார்கள். ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவரும், அபுதாபி ஆட்சியாளருமான முகமது பின் சயீத் அல் நஹ்யானும் மாநாட்டின் தொடக்கத்தில் உரையாற்றினார்.
இம்மாநாட்டில் உரையாற்றிய பிரதமர், 2024-ம் ஆண்டிற்கான தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை 'வளர்ச்சியடைந்த நாடாக' ஆக்குவோம், அடுத்த 25 ஆண்டுகளை நாட்டின் 'அமிர்த காலமாக' மாற்றுவோம் என்ற உறுதிமொழியை அவர் மீண்டும் குறிப்பிட்டார். "இது புதிய கனவுகள், புதிய தீர்மானங்கள், தொடர்ச்சியான சாதனைகளுக்கான தருணம்", என்று அவர் கூறினார். ‘அமிர்த காலத்தின்' முதலாவது துடிப்புமிக்க குஜராத் உச்சிமாநாட்டின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார்.
துடிப்புமிக்க குஜராத் உலகளாவிய உச்சிமாநாட்டில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவரும், அபுதாபி ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் சிறப்பு விருந்தினராக பங்கேற்றது சிறப்பு வாய்ந்தது. ஏனெனில், இது இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான ஆழமான நட்புறவைக் குறிக்கிறது என்று பிரதமர் கூறினார். பொருளாதார மேம்பாடு, முதலீடு தொடர்பான விவாதங்களுக்கு உலகளாவிய தளமாக துடிப்புமிக்க குஜராத் உலகளாவிய உச்சிமாநாடு மாறி வருவதாகப் பிரதமர் திரு மோடி குறிப்பிட்டார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை, புதுமையான சுகாதாரம், இந்தியாவின் துறைமுக உள்கட்டமைப்பில் பல பில்லியன் டாலர் முதலீடுகளை அதிகரிப்பதில் இந்தியா-ஐக்கிய அரபு அமீரக கூட்டாண்மை ஆகியவை பற்றி அவர் எடுத்துரைத்தார். கிஃப்ட் சிட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் ‘இறையாண்மை செல்வ நிதிய’த்தின் செயல்பாடுகள் தொடங்கப்பட்டதையும், டிரான்ஸ்வேர்ல்ட் நிறுவனங்களின் விமானம், கப்பல் குத்தகை நடவடிக்கைகளையும் அவர் குறிப்பிட்டார். இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான உறவுகள் மேம்பட்டு வருவதற்கு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு பிரதமர் பெரும் பாராட்டு தெரிவித்தார்.
அகமதாபாத் ஐ.ஐ.எம். முன்னாள் மாணவரான மொசாம்பிக் அதிபர் திரு. பிலிப் நியுசி, ஆகஸ்ட் மாதம் கலந்து கொண்டதைக் குறிப்பிட்ட பிரதமர், இந்தியத் தலைமைத்துவத்தின் போது ஜி 20 நாடுகளின் ஆப்பிரிக்க ஒன்றியத்தை நிரந்தர உறுப்பினராக சேர்த்ததற்காக பெருமிதம் தெரிவித்தார். அதிபர் நியுசியின் வருகை இந்தியா-மொசாம்பிக், இந்தியா-ஆப்பிரிக்கா உறவுகளை வலுப்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.
செக் குடியரசின் பிரதமர் திரு. பீட்டர் ஃபியாலா தனது நாட்டின் பிரதமராக இந்தியாவுக்கு மேற்கொண்ட முதல் பயணம், இந்தியாவுடனான செக் குடியரசின் பழைய உறவுகளையும், துடிப்புமிக்க குஜராத்துடனான உறவுகளையும் குறிக்கிறது என்று பிரதமர் மோடி கூறினார். வாகன உற்பத்தி, தொழில்நுட்பம், உற்பத்தித் துறைகளில் ஒத்துழைப்பு பற்றி பிரதமர் திரு மோடி குறிப்பிட்டார்.
நோபல் பரிசு பெற்றவரும், திமோர் நாட்டின் அதிபருமான திரு ஜோஸ் ராமோஸ்-ஹோர்டாவை வரவேற்ற பிரதமர், மகாத்மா காந்தியின் அகிம்சைக் கொள்கையை தனது நாட்டின் சுதந்திரப் போராட்டத்துடன் அவர் பயன்படுத்தியதை எடுத்துரைத்தார்.
துடிப்புமிக்க குஜராத் உச்சிமாநாட்டின் 20 வது ஆண்டு நிறைவைக் குறிப்பிட்ட பிரதமர், இந்த உச்சிமாநாடு புதிய யோசனைகளை வெளிப்படுத்தியுள்ளதாகவும், முதலீடுகள், வருமானத்திற்கான புதிய நுழைவாயில்களை உருவாக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார். 'எதிர்காலத்திற்கான நுழைவாயில்' என்ற இந்த ஆண்டின் கருப்பொருளை சுட்டிக்காட்டிய பிரதமர், பகிரப்பட்ட முயற்சிகளால் 21-ம் நூற்றாண்டின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று கூறினார். ஜி 20 மாநாட்டின் போது, எதிர்காலத்திற்கான இந்தியாவின் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், துடிப்புமிக்க குஜராத் உலகளாவிய உச்சிமாநாட்டின் தொலைநோக்குப் பார்வையால் அது முன்வைக்கப்படுவதாகவும் பிரதமர் கூறினார். 'ஒரே உலகம், ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்ற கொள்கைகளுடன் ஐ2யு2 (இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா ஆகிய நாடுகளின் குழு) மற்றும் பிற பன்னாட்டு அமைப்புகளுடன் கூட்டாண்மையை வலுப்படுத்துவதையும் அவர் குறிப்பிட்டார். இது இப்போது உலகளாவிய நலனுக்கு ஒரு முன்நிபந்தனையாக மாறியுள்ளது எனறு அவர் தெரிவித்தார்.
விரைவாக மாறிவரும் உலகில் 'விஸ்வ மித்ரா' பங்களிப்பில் இந்தியா முன்னேறி செல்கிறது என்றும், பொதுவான கூட்டு இலக்குகளை அடைவதில் இன்று இந்தியா உலகிற்கு நம்பிக்கை அளித்துள்ளது என்றும் அவர் கூறினார். உலகளாவிய நலனுக்கான இந்தியாவின் அர்ப்பணிப்பு, முயற்சிகள், கடின உழைப்பு ஆகியவை உலகை பாதுகாப்பானதாகவும், வளமானதாகவும் ஆக்குகின்றன என்று அவர் தெரிவித்தார். நிலைத்தன்மையின் முக்கியத் தூணாக இந்தியாவை உலக நாடுகள் காண்பதாகவும் அவர் கூறினார். நம்பகமான நண்பர், மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சியில் நம்பிக்கை கொண்ட ஒரு கூட்டாளி, உலகளாவிய நன்மையில் நம்பிக்கை கொண்ட குரல், உலகளாவிய பொருளாதாரத்தில் வளர்ச்சியின் இயந்திரம், தீர்வுகளைக் கண்டுபிடிப்பதற்கான தொழில்நுட்ப மையம், திறமையான இளைஞர்களின் அதிகார மையம், ஜனநாயகம் மிக்க நாடாக திகழ்கிறது"என்று பிரதமர் கூறினார்.
"இந்தியாவின் 140 கோடி மக்களின் முன்னுரிமைகள், விருப்பங்கள், மனிதனை மையமாகக் கொண்ட வளர்ச்சியில் அவர்களின் நம்பிக்கை, உள்ளடக்கம், சமத்துவத்திற்கான அரசின் உறுதிப்பாடு ஆகியவை உலக செழிப்பு, வளர்ச்சியின் முக்கிய அம்சமாகும்" என்று பிரதமர் குறிப்பிட்டார். 10 ஆண்டுகளுக்கு முன்பு பொருளாதாரத்தில் 11-வது இடத்தில் இருந்த இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாகத் திகழ்கிறது என்று பிரதமர் கூறினார். உலகின் பல்வேறு மதிப்பீட்டு நிறுவனங்கள் கணித்தபடி, அடுத்த சில ஆண்டுகளில், இந்தியா உலகின் முதல் 3 பொருளாதாரங்களில் ஒன்றாக மாறும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். "வல்லுநர்கள் இதைப் பகுப்பாய்வு செய்யலாம், ஆனால், இந்தியா உலகின் 3 வது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று நான் உத்தரவாதம் அளிக்கிறேன்" என்று பிரதமர் திரு மோடி உறுதிபட தெரிவித்தார். உலகம் பல புவிசார் அரசியல் ஸ்திரமின்மைகளைக் கண்டுள்ள இந்த நேரத்தில் இந்தியா உலகிற்கு ஒரு நம்பிக்கை ஒளியாக மாறியுள்ளது என்று அவர் மேலும் கூறினார். துடிப்புமிக்க குஜராத் உலகளாவிய உச்சிமாநாட்டில் இந்தியாவின் முன்னுரிமைகள் குறித்துப் பேசிய பிரதமர், நீடித்த தொழில்கள், உற்பத்தி, உள்கட்டமைப்பு, புதிய தலைமுறை திறன்கள், எதிர்கால தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு, கண்டுபிடிப்புகள், பசுமை ஹைட்ரஜன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, செமிகண்டக்டர்கள் ஆகியவை பற்றியும் குறிப்பிட்டார். குஜராத்தில் நடைபெறும் வர்த்தகக் கண்காட்சியை, குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவரும் பார்வையிட வேண்டும் என்று பிரதமர் திரு மோடி வலியுறுத்தினார். நேற்று திரு நியுசி, திரு ராமோஸ் ஹோர்டா ஆகியோருடன் இந்த வர்த்தகக் கண்காட்சியில் நேரத்தை செலவிட்டது குறித்து பேசிய பிரதமர் , இ-மொபிலிட்டி, புத்தொழில், நீலப் பொருளாதாரம், பசுமை எரிசக்தி, நவீன உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் உலகத் தரம் வாய்ந்த அதிநவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட பொருட்களை இந்த வர்த்தகக் கண்காட்சி காட்சிப்படுத்தியுள்ளது என்று கூறினார். இந்தத் துறைகள் அனைத்திலும் முதலீடு செய்வதற்கான புதிய வாய்ப்புகள் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
இந்த சீர்திருத்தங்கள் பொருளாதாரத்தின் திறன், வலிமை, போட்டித்தன்மையை மேம்படுத்தியுள்ளதால், இந்தியப் பொருளாதாரத்தின் மீள்திறன், விரைவு அடிப்படையில் கட்டமைப்பு சீர்திருத்தங்களில் அரசு கவனம் செலுத்துவதைப் பிரதமர் விவரித்தார். மறுமுதலீடு, வங்கி திவால் சட்டம் ஆகியவை வலுவான வங்கி முறைக்கு வழிவகுத்துள்ளது என்றும், சுமார் 40 ஆயிரம் இணக்கங்களை நீக்கியது வணிகத்தை எளிதாக்க வழிவகுத்தது என்றும், சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு சிக்கலை நீக்கியுள்ளது, என்றும் அவர் கூறினார்.
உலகளாவிய விநியோக அமைப்பைப் பன்முகப்படுத்துவதற்கான சிறந்த சூழலில், அண்மையில் ஐக்கிய அரபு அமீரகம் உட்பட 3 நாடுகளுடன் வெளிநாட்டு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது; இது தானியங்கி நேரடி அன்னிய முதலீட்டிற்காக பல துறைகளை ஏற்படுத்துவது, உள்கட்டமைப்பில் முதலீட்டை பதிவு செய்வது மற்றும் முதலீட்டில் 5 மடங்கு அதிகரிப்பு, பசுமை மற்றும் மாற்று எரிசக்தி ஆதாரங்களில் முன்னெப்போதும் இல்லாத முன்னேற்றம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனில் 3 மடங்கு அதிகரிப்பு, சூரிய சக்தியில் 20 மடங்கு திறன், குறைந்த செலவிலான தரவுகள், ஒவ்வொரு கிராமத்திற்கும் கண்ணாடி இழை பதிப்பு, 5 ஜி, 1.15 லட்சம் பதிவு செய்யப்பட்ட புத்தொழில்களுடன் மூன்றாவது பெரிய புத்தொழில் சூழல் அமைப்பு ஆகியவற்றுக்கு வழிவகுத்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். ஏற்றுமதியில் ஒட்டுமொத்த சாதனை அதிகரிப்பு குறித்தும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் நிகழும் மாற்றங்கள் வாழ்க்கையை எளிதாக்குவதற்கும் அவர்களுக்கு அதிகாரமளிப்பதற்கும் உதவுகின்றன என்று பிரதமர் திரு மோடி மீண்டும் குறிப்பிட்டார். கடந்த 5 ஆண்டுகளில், 13.5 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளதாகவும், நடுத்தர வர்க்கத்தின் சராசரி வருமானம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார். பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் சாதனை அளவிலான அதிகரிப்பு, இந்தியாவின் எதிர்காலத்திற்கு ஒரு சிறந்த அறிகுறியாகும் என்று அவர் குறிப்பிட்டார். "இந்த உத்வேகத்துடன்" இந்தியாவின் முதலீட்டுப் பயணத்தின் ஒரு பகுதியாக இருக்குமாறு உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன் என்று பிரதமர் கூறினார்.
கடந்த 10 ஆண்டுகளுக்குள் விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 லிருந்து 149 ஆக அதிகரிப்பு, இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பை இரட்டிப்பாக்கியது, மெட்ரோ ரயில் கட்டமைப்பு, பிரத்யேக சரக்கு வழித்தடங்கள், தேசிய நீர்வழிகள், துறைமுகத்தில் கையாளும் திறன் அதிகரிப்பு, ஜி20-ன் போது அறிவிக்கப்பட்ட இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் ஆகியவற்றைப் பிரதமர் எடுத்துரைத்தார். "இவை உங்கள் அனைவருக்கும் மிகப்பெரிய முதலீட்டு வாய்ப்புகள்", என்று அவர் மேலும் கூறினார்.
இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் முதலீட்டாளர்களுக்கு புதிய வாய்ப்புகள் இருப்பதாகவும், துடிப்புமிக்க குஜராத் உச்சிமாநாடு இதற்கான நுழைவாயில் போன்றது என்றும், எதிர்காலத்திற்கான நுழைவாயில் என்றும் கூறினார். "நீங்கள் இந்தியாவில் முதலீடு செய்வது மட்டுமல்லாமல், புதிய தலைமுறை இளம் படைப்பாளிகள், நுகர்வோரை உருவாக்குகிறீர்கள்” என்று அவர் தெரிவித்தார். இந்தியாவின் ஆர்வமுள்ள இளம் தலைமுறையினருடனான உங்கள் கூட்டாண்மை நீங்கள் கற்பனை கூட செய்ய முடியாத முடிவுகளைக் கொண்டு வர முடியும்" என்று கூறி பிரதமர் திரு மோடி தமது உரையை நிறைவு செய்தார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவரும், அபுதாபி ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், மொசாம்பிக் அதிபர் திரு பிலிப் நியுசி, செக் குடியரசின் பிரதமர் திரு ஜோஸ் ராமோஸ்-ஹோர்டா, வியட்நாம் துணைப் பிரதமர் திரு பீட்டர் ஃபியாலா, குஜராத் ஆளுநர் திரு டிரான் லு குவாங், திரு. ஆச்சார்யா தேவ்ரத், குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பின்னணி
2003-ம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ் உருவாக்கப்பட்ட துடிப்புமிக்க குஜராத் உலகளாவிய உச்சிமாநாடு, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, நீடித்த வளர்ச்சிக்கான வணிக ஒத்துழைப்பு, அறிவுப் பகிர்வு, உத்திசார்ந்த கூட்டாண்மைக்கான மிகவும் புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. குஜராத்தின் காந்திநகரில் 2024 ஜனவரி 10 முதல் 12 வரை நடைபெறும் 10-வது துடிப்புமிக்க குஜராத் உலகளாவிய உச்சிமாநாட்டின் கருப்பொருள் "எதிர்காலத்திற்கான நுழைவாயில்" என்பதாகும். இது "துடிப்புமிக்க குஜராத்தின் 20 ஆண்டு கால வெற்றியை" கொண்டாடுகிறது.
***
(Release ID: 1994793)
ANU/SMB/IR/AG/KRS
(Release ID: 1994889)
Visitor Counter : 114
Read this release in:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam