சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

பனிமூட்டம் காரணமாக சாலைகளில் பார்வைத் தெளிவு குறைவதை எதிர்கொள்ள தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது

Posted On: 30 DEC 2023 3:02PM by PIB Chennai

குளிர்காலம் தொடங்கியுள்ளதால் தேசிய நெடுஞ்சாலைகளில் பார்வைத் தெளிவு குறைவதை எதிர்கொள்ள, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் தலைவர் திரு சந்தோஷ் குமார் யாதவ், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய கள அலுவலகங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். பனிமூட்டம் காரணமாக தெளிந்த நிலை குறைவதால், தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகளின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுவதைத் தடுக்க, இந்த நடவடிக்கைகள் உதவும்.

 

பனிமூட்ட நிலைகளின் போது சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை பொறியியல் மேம்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் என்ற இரண்டு பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. சேதமடைந்த சாலை குறியீடுகளை மீண்டும் நிறுவுதல், மங்கிய நடைபாதை அடையாளங்களை சரிசெய்தல், பிரதிபலிப்பு குறிப்பான்கள், நடுத்தர குறிப்பான்கள் போன்றவற்றை வழங்குவதன் மூலம் பாதுகாப்பை மேம்படுத்துதல், குடியிருப்புகள் மற்றும் விபத்து ஏற்படக்கூடிய இடங்களில் குறுக்குவெட்டு பட்டை அடையாளங்களை வழங்குதல், கட்டுமான மண்டலங்கள் மற்றும் அபாயகரமான இடங்களில் குறியீடுகளை உறுதி செய்தல், சேதமடைந்த அபாய குறிப்பான்களை மாற்றுதல் ஆகியவை 'பொறியியல் நடவடிக்கைகளில்' அடங்கும்.

 

இதேபோல், 'பாதுகாப்பு விழிப்புணர்வு' நடவடிக்கைகள் நெடுஞ்சாலை வாகன ஓட்டிகளை, தெளிவில்லாத குறைந்த பார்வை நிலைகளில் இருந்து தற்காத்துக் கொள்ளும் நடவடிக்கைகளை எடுத்துரைக்கின்றன. இந்த நடவடிக்கைகளில் 'மூடுபனி வானிலை எச்சரிக்கைகள்' மற்றும் வேக வரம்பு தகவல்களைக் காண்பிக்க மாறும் செய்தி குறியீடுகள் (வி.எம்.எஸ்) அல்லது மின்னணு குறியீடுகளைப் பயன்படுத்துவது உள்ளிட்டவை அடங்கும். பனிமூட்டம் உள்ள பகுதிகளில் மணிக்கு 30 கிலோ மீட்டர் வேக வரம்பில் மட்டுமே செல்ல வேண்டும் என்பது குறித்து பயணிகளை எச்சரிக்கும் பொது அடையள முறை பயன்படுத்தப்படும்.

 

சுங்கச் சாவடியை கடக்கும் பயணிகளுக்கு பனிமூட்டம் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும், விபத்துகள் ஏற்பட்டால் உதவவும் தொடர்பு எண்ணுடன் பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படும். குளிர்காலத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும்போது ஏற்படக் கூடி.ய ஆபத்தைக் குறைக்கவும், தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகளுக்குப் பாதுகாப்பான மற்றும் தடையற்ற பயண அனுபவத்தை உறுதி செய்யவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உறுதிபூண்டுள்ளது.

 

Release ID: 1991733

***

PKV/PLM/KRS



(Release ID: 1991764) Visitor Counter : 97