நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
2023-ல் உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் சாதனைகள்
Posted On:
27 DEC 2023 12:56PM by PIB Chennai
மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை 2023-ம் ஆண்டில் மேற்கொண்ட சாதனைகள் பின்வருமாறு:-
பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டம் (பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா) : நாட்டில் கொவிட்-19 பெருந்தொற்றுப் பரவலால் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்திற்கு இடையே ஏழைகள் மற்றும் நலிவடைந்தோர் எதிர்கொண்ட சிரமங்களை குறைக்கும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டம் ஏழு கட்டங்களாக 28 மாதங்களுக்கு சுமார் 1118 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதற்கான மொத்த மதிப்பீடு ரூ.3.91 லட்சம் கோடியாகும்.
இத்திட்டம் தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தை சீராக நடைமுறைப்படுத்துவதை உறுதிசெய்யும். ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ், பயனாளிகள் எந்த இடத்திலும் உணவு தானியங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் முடிய இத்திட்டத்தின் கீழ் உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஜனவரி மாதத்தில் 40,72,922 மெட்ரிக் டன்னும், பிப்ரவரி மாதத்தில் 40,93,818 மெட்ரிக் டன்னும், மார்ச் மாதத்தில் 41,19,561 மெட்ரிக் டன்னும், ஏப்ரல் மாதத்தில் 40,64,491 மெட்ரிக் டன்னும், மே மாதத்தில் 40,84,928 மெட்ரிக் டன்னும், ஜூன் மாதத்தில் 40,91,201 மெட்ரிக் டன்னும், ஜூலை மாதத்தில் 41,24,719 மெட்ரிக் டன்னும், ஆகஸ்ட் மாதத்தில் 41,20,305 மெட்ரிக் டன்னும், செப்டம்பர் மாதத்தில் 40,65,725 மெட்ரிக் டன்னும், அக்டோபர் மாதத்தில் 41,02,089 மெட்ரிக் டன்னும், நவம்பர் மாதத்தில் 38,42,479 மெட்ரிக் டன்னும் உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளன.
வெளிச்சந்தை விற்பனை திட்டம்:
2023-ம் ஆண்டின் மொத்தம் 82.89 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை, 3.04 லட்சம் மெட்ரிக் டன் அரிசி ஆகியவற்றை வெளிச்சந்தையில், இந்திய உணவுக்கழகம் மின் ஏலம் மூலம் இதுவரை விற்பனை செய்துள்ளது.
கொவிட் பரவல் காலத்தில், முழு அடைப்பாலும், புலம் பெயர்ந்ததாலும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், ஏழைகள், நலிவடைந்த பிரிவினருக்கு வழங்குவதற்காக வெளிச்சந்தையில், அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும், அரசு சாரா அமைப்புகளுக்கும் உணவு தானியங்கள் வழங்கப்பட்டன. தற்போது அந்த நிலை மாறியிருப்பதால் அத்திட்டம் நிறுத்தப்பட்டது. இருப்பினும் அதன் துணைத் திட்டத்தின் கீழ் சமுதாய உணவகங்களுக்கு உணவு தானியங்கள் விற்பனைக்கு வழங்கப்படுகிறது. கோதுமை கிலோ ஒன்றுக்கு ரூ.21.50-க்கும், அரிசி கிலோ ஒன்றுக்கு ரூ.24-க்கும், 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை வழங்கப்படும்.
ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தின் முன்னேற்றம்: 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 மாநிலங்களில் துவங்கப்பட்ட இத்திட்டம் தற்போது நாடு முழுவதும் அனைத்து 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்படுகிறது. தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் பயனாளிகள் 80 கோடி பேர் இத்திட்டத்தால் பயனடைந்து வருகின்றனர்.
2023-ம் ஆண்டு சுமார் 28 கோடி பரிவர்த்தனைகள் கடந்த 11 மாதங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் 80 லட்சம் மெட்ரிக்டன் உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளன.
உணவு தானியங்கள் கொள்முதல்:
2023-24 நடப்பு கரீஃப் சந்தை பருவத்தில் 17.12.2023 வரை 365.48 லட்சம் மெட்ரிக் டன் நெல் (244.99 லட்சம் மெட்ரிக் டன் அரிசி) கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலையின் கீழ், கொள்முதல் செய்யப்பட்டதால் 30 லட்சத்து 90 ஆயிரத்து 303 விவசாயிகள் ரூ.80,515.26 கோடி அளவுக்கு பயனடைந்துள்ளனர்.
2023-24 ரபி சந்தைப் பருவத்தில், 262.02 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டது. 21,28,985 விவசாயிகள், ரூ.55,679.73 கோடி அளவுக்கு பயனடைந்தனர்.
கோதுமை இருப்பு அளவு செயல்பாடு: ஒட்டுமொத்த உணவுப் பாதுகாப்பை பராமரிக்கவும், பதுக்கலை தடுக்கவும் மத்திய அரசு, 2023 ஜூன் 12-ந் தேதி கோதுமை இருப்பு அளவு திட்டத்தை தொடங்கியது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த வர்த்தகர்கள், மொத்த விற்பனையாளர்கள், சில்லரை விற்பனையாளர்கள், சில்லரை விற்பனையில் ஈடுபடும் பெரிய நிறுவனங்களுக்கு இது பொருந்தும். 2024 மார்ச் 24-ந் தேதி வரை இது அமலில் இருக்கும்.
சர்க்கரை துறை: இந்திய சர்க்கரை துறை நாட்டில் மிக முக்கியமான விவசாயம் சார்ந்த தொழிலாக உள்ளது. இது சுமார் 5 கோடி கரும்பு விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கிராமப்புற வாழ்வாதாரத்தை வழங்குகிறது. சர்க்கரை ஆலைகளில் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் நேரடி வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். உலகிலேயே சர்க்கரை உற்பத்தி மற்றும் நுகர்வில் இந்தியா முன்னணியில் உள்ளது. தற்போது இந்திய சர்க்கரை தொழில் ஆண்டு வருவாய் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடியாக உள்ளது.
2022-23 சர்க்கரை பருவத்தில் நாட்டில் 534 சர்க்கரை ஆலைகள் இயங்கின. சராசரி ஆண்டு கரும்பு உற்பத்தி தற்போது 5000 லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் 330 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டு, 43 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரை எத்தனால் உற்பத்திக்கு மாற்றப்பட்டது. 2022-23-ம் சர்க்கரைப் பருவத்தில், சர்க்கரை நுகர்வு 280 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்தது. 63 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரை இப்பருவத்தில் ஏற்றுமதி செய்யப்பட்டது.
எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டம் : நாடு முழுவதும் மத்திய அரசு எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. எண்ணெய் சந்தை நிறுவனங்கள் இந்த பெட்ரோலை விற்பனை செய்கின்றன. இந்த திட்டத்தின் கீழ் 2025-ம் ஆண்டு வாக்கில் எத்தனால் கலப்பை 20 சதவீதமாக மாற்ற அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
***
ANU/SMB/PKV/AG/KV
(Release ID: 1991517)
Visitor Counter : 171