சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையில் மருத்துவ முகாம்கள்: இதுவரை 2 கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்

Posted On: 29 DEC 2023 11:22AM by PIB Chennai

நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்த தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  தற்போது நடைபெற்று வரும்  நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையில் சுகாதார சேவைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.  இந்த யாத்திரையின் போது இதுவரை  1,08,500 கிராம ஊராட்சிகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நடத்தப்பட்ட சுகாதார முகாம்கள் மூலம்  2 கோடியே 10 லட்சத்து 24 ஆயிரத்து 874 பேர் பயனடைந்துள்ளனர்.  இந்த யாத்திரையின் 44-வது நாள் முடிவில் 1,44,80,498 ஆயுஷ்மான் அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

காசநோய்   பரிசோதனை நடவடிக்கையின் ஒருபகுதியாக இந்த யாத்திரையின்  44-வது நாள் முடிவில், 80,01,825 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 4,86,043 பேர் உயர் பொது சுகாதார மையங்களில் மேல் சிகிச்சைக்குப்  பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

காசநோயாளிகளுக்கான ஊட்டச்சத்துத் திட்டத்தின் கீழ், காசநோயாளிகளுக்கு நேரடிப் பயன்பரிமாற்றம் மூலம் பண உதவி வழங்கப்படுகிறது. இதற்காக, நிலுவையில் உள்ள பயனாளிகளின் வங்கிக் கணக்கு விவரங்கள் சேகரிக்கப்பட்டு, கணக்குகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படுகின்றன. இதுவரை  36,763 பயனாளிகளின் கணக்கு விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

அரிவாள் செல்  ரத்தசோகை நோய்க்கான பரிசோதனையும் இந்த முகாம்களில் மேற்கொள்ளப்படுகிறது. பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், இதுவரை 8,51,194 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 27,630 பேருக்கு இந்த நோய் உறுதி செய்யப்பட்டு, அவர்கள் உயர் பொது சுகாதார நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தொற்றா நோய்களைப் பொறுத்தவரை, உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்கான பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் நோய் இருப்பதாகக் கண்டறியப்படும் நோயாளிகள் உயர் சிகிச்சை மையங்களுக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர். இதுவரை 15,694,596 பேருக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 7,32,057 பேருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதாகவும், 5,28,563 பேருக்கு நீரிழிவு நோய் இருப்பதாகவும் முதல் கட்டப் பரிசோதனையில் தெரியவந்தது. 11,56,927 பேர் உயர் பொது சுகாதார மையங்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்

***

ANU/PKV/PLM/RS/KV

 

 



(Release ID: 1991479) Visitor Counter : 93