பிரதமர் அலுவலகம்
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ சமூகத்தினருடன் பிரதமர் கலந்துரையாடல்
கிறிஸ்துவ சமூகத் தலைவர்கள் பிரதமருக்கு நன்றி தெரிவித்தனர்- நாட்டு நலனுக்கான பிரதமரின் தொலைநோக்கு பார்வையைப் பாராட்டினர்
கிறிஸ்தவ சமூகத்தின் பங்களிப்பை தேசம் பெருமையுடன் அங்கீகரிக்கிறது: பிரதமர்
வறுமை ஒழிப்பு குறித்த போப்பாண்டவரின் கருத்து, அனைவரின் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி என்ற மந்திரத்தில் எதிரொலிக்கிறது: பிரதமர்
வளர்ச்சியின் பயன்கள் அனைவருக்கும் சென்றடைவதை இந்த அரசு உறுதி செய்கிறது- யாரும் விடுபடுவதில்லை: பிரதமர்
Posted On:
25 DEC 2023 6:28PM by PIB Chennai
பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான புதுதில்லி, லோக் கல்யாண் மார்க்கில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கிறிஸ்தவ சமூகத்தினருடன் கலந்துரையாடினார். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை குறிக்கும் நிகழ்ச்சியிலும் அவர் உரையாற்றினார். பள்ளி மாணவ, மாணவியர் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அனைவருக்கும், குறிப்பாக கிறிஸ்தவ சமுதாய மக்களுக்கு கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர், இந்த மிகவும் சிறப்பு வாய்ந்த மற்றும் புனிதமான தருணத்தில் தம்மைச் சந்தித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். கிறிஸ்துமஸ் பண்டிகையை தம்முடன் கொண்டாடும் இந்திய சிறுபான்மை அறக்கட்டளையின் முன்மொழிவை ஏற்றுக்கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாக அவர் தெரிவித்தார். மேலும் இந்த முன்முயற்சிக்கு அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். நீண்ட காலமாக கிறிஸ்தவ சமூகத்துடனான தமது நெருக்கமான மற்றும் மிகவும் அன்பான உறவுகளை எடுத்துரைத்த பிரதமர், குஜராத் முதலமைச்சராக இருந்தபோது கிறிஸ்தவ சமூகம் மற்றும் அவர்களின் தலைவர்களுடன் அடிக்கடி சந்திப்புகளை நடத்தியதை நினைவு கூர்ந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு போப்பாண்டவருடனான தமது சந்திப்பை மிகவும் மறக்கமுடியாத தருணம் என்று கூறிய பிரதமர், சமூக நல்லிணக்கம், உலகளாவிய சகோதரத்துவம், பருவநிலை மாற்றம் மற்றும் பூமியை ஒரு சிறந்த இடமாக மாற்றுவதற்கான உள்ளடக்கிய வளர்ச்சி போன்றவை குறித்து அவருடன் விவாதித்தாகத் தெரிவித்தார்.
கிறிஸ்துமஸ் என்பது இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடுவதற்கான நாள் மட்டுமல்ல என்றும் அவரது வாழ்க்கை, போதனைகள் மற்றும் மதிப்புகளை நினைவில் கொள்ளும் நாள் என்று குறிப்பிட்டார். இயேசுவின் இரக்கம் மற்றும் சேவையின் மதிப்புகளை அவர் எடுத்துரைத்தார். அனைவருக்கும் நீதி கிடைக்கவும் அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்கவும் இயேசு பாடுபட்டார் என்றும், இந்த விழுமியங்கள் தான் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் வழிகாட்டியாக திகழ்கிறது என்றும் அவர் கூறினார்.
சமூக வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களுக்கு இடையிலான மதிப்புகளின் ஒற்றுமையை பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். சேவையை புனித பைபிள் வலியுறுத்துவதாக அவர் கூறினார். சேவையே உயர்ந்த மார்க்கம் எனக் கூறிய அவர் பரிசுத்த வேதாகமத்தில், உண்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்றார். சத்தியம் மட்டுமே இரட்சிப்பின் பாதையை நமக்குக் காட்டும் என்று பிரதமர் கூறினார். பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் பாரம்பரியத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும் என்று பிரதமர் தெரிவித்தார். 21 ஆம் நூற்றாண்டின் நவீன இந்தியாவை அனைவரின் முயற்சி, ஒத்துழைப்பு, நல்லிணக்கம் ஆகியவை புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்லும் என்று அவர் கூறினார்.
புனித போப்பாண்டவரின் கிறிஸ்துமஸ் உரைகளில் ஒன்றை பிரதமர் சுட்டிக்காட்டினார். வறுமை குறித்த புனித போப்பின் கருத்து அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி என்ற மந்திரத்துடன் ஒத்துப்போவதாக பிரதமர் தெரிவித்தார். வளர்ச்சியின் பயன்கள் யாரும் விடுபட்டுவிடாமல், அனைவருக்கும் சென்றடைவதை இந்த அரசு உறுதி செய்துள்ளது என்று கூறிய பிரதமர், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த பலர், குறிப்பாக ஏழைகள் அரசின் திட்டங்களால் பயனடைவதாகத் தெரிவித்தார்.
கிறிஸ்தவ சமூகத்தின் பங்களிப்பை தேசம் பெருமையுடன் அங்கீகரிக்கிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார். சுதந்திர இயக்கத்தில் கிறிஸ்தவ சமூகத்தின் பங்களிப்புகளைப் பாராட்டிய பிரதமர், பல்வேறு அறிவார்ந்த சிந்தனையாளர்கள் மற்றும் தலைவர்களின் பங்களிப்புகளை எடுத்துரைத்தார். ஒத்துழையாமை இயக்கம் செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி முதல்வர் சுஷில் குமார் ருத்ராவின் ஆதரவில் உருவாக்கப்பட்டது என்று காந்திஜியே கூறியதைப் பிரதமர் சுட்டிக் காட்டினார். சமுதாயத்தை வழிநடத்துவதில் கிறிஸ்தவ சமூகம் வகிக்கும் முக்கிய பங்கை எடுத்துரைத்த அவர், ஏழைகள் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கான சேவையில் தீவிரமாக பங்கேற்பதைக் குறிப்பிட்டார். கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற முக்கியமான துறைகளில் அவர்களின் பங்களிப்புகளையும் அவர் பாராட்டினார்.
2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக இந்தியா உருவெடுக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டையும், அந்தப் பயணத்தில் இளைஞர்களின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்திய பிரதமர், இளைஞர்களின் உடல், மன மற்றும் உணர்ச்சி ரீதியான தகுதியின் அவசியத்தை எடுத்துரைத்தார். உடற்பயிற்சி, சிறுதானியங்கள், ஊட்டச்சத்து மற்றும் போதை மருந்துகளுக்கு எதிரான பிரச்சாரம் ஆகியவை தொடர்பான இயக்கங்கள் குறித்து சமூகத் தலைவர்கள் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
கிறிஸ்துமஸ் நாளன்று பரிசுகள் வழங்கும் பாரம்பரியத்தைக் குறிப்பிட்ட பிரதமர், வரும் தலைமுறையினருக்கு ஒரு சிறந்த பூமியைப் பரிசளிக்க வேண்டும் என்று கூறினார். நிலைத்தன்மை என்பது இன்றைய காலத்தின் தேவை என்று கூறிய பிரதமர் திரு நரேந்திர மோடி, சுற்றுச் சூழலுக்கு ஏற்ற நிலையான வாழ்க்கை முறையை இந்தியாவின் லைஃப் இயக்கம் வழங்குவதாகக் கூறினார். இந்த இயக்கம் சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறைகளை ஊக்குவிக்கிறது என்று அவர் தெரிவித்தார். மறுபயன்பாடு, மறுசுழற்சி, மக்கும் பொருட்களைப் பயன்படுத்துதல், சிறுதானியங்களைப் பயன்படுத்துதல் மற்றும் குறைந்த கார்பன் வெளியேற்றம் கொண்ட தயாரிப்புகளைப் பயன்படுத்துதல் ஆகியவை இந்த இயக்கத்தின் முக்கிய அம்சங்கள் என்று அவர் குறிப்பிட்டார். சமூக உணர்வுள்ள கிறிஸ்தவ சமூகம் இந்தப் பணியில் முக்கிய பங்கு வகிக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.
உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுத்தல் இயக்கம் குறித்தும் பிரதமர் பேசினார். நாம் உள்ளூர் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தும்போது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களின் தூதர்களாக மாறும்போது, அது நாட்டிற்கான ஒரு வகை சேவையாக அமையும் என்று அவர் தெரிவித்தார். கிறிஸ்தவ சமூகம் உள்ளூர் மக்களுக்காக மேலும் அதிகமாகக் குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக அவர் கூறினார்.
பண்டிகைக் காலம் தேசத்தை ஒன்றிணைக்கவும், ஒவ்வொரு குடிமகனையும் ஒருங்கிணைக்கவும் வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது என்று பிரதமர் தெரிவித்தார். பன்முகத்தன்மையுடன் நம்மை ஒற்றுமையாக வைத்திருக்கும் பிணைப்பை இந்தப் பண்டிகை வலுப்படுத்தட்டும் என்று அவர் கூறினார். கிறிஸ்துமஸ் பண்டிகை நம் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியை நிரப்பட்டும் என்று அவர் தெரிவித்தார். வரவிருக்கும் ஆண்டு நம் அனைவருக்கும் செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் அமைதியைக் கொண்டு வரட்டும் என்று கூறிப் பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.
இந்த கலந்துரையாடலில் நாடு முழுவதிலுமிருந்து கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்திய ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் கர்டினல் ஆஸ்வால்ட் கிரேசியாஸ் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்தார். இந்த நாள் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த நாளாகவும் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். நல்லாட்சி மீதான வாஜ்பாயின் ஆர்வத்தைப் பற்றியும் அவர் பேசினார்.
பிரபல விளையாட்டு வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் தமது விளையாட்டு வாழ்க்கையின் அனுபவங்கள் மற்றும் தற்போதைய நல்ல மாற்றத்தைக் குறிப்பிட்டார். கேலோ இந்தியா மற்றும் ஃபிட் இந்தியா மூலம், விளையாட்டுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் இந்த மாற்றத்திற்கு பிரதமரின் தலைமையே காரணம் என்றும் அஞ்சு பாபி ஜார்ஜ் பாராட்டுத் தெரிவித்தார்.
கிறிஸ்துமஸ் பண்டிகை விழாவில் பங்கேற்ற பிரதமருக்கு வட இந்திய திருச்சபையின் தில்லி மறைமாவட்ட ஆயர் அருட்தந்தை டாக்டர் பால் ஸ்வரூப் நன்றி தெரிவித்தார்.
தில்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரி முதல்வர் ஜான் வர்கீஸ், கல்வித் துறையில், பிரதமரின் தொலைநோக்குப் பார்வை, உறுதிப்பாடு மற்றும் பரந்த இதயம் ஆகியவற்றைப் பாராட்டினார், இது புதிய தேசிய கல்விக் கொள்கை மற்றும் பிற கொள்கைகளிலும் பிரதிபலிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். ஜி 20 உச்சிமாநாட்டில் இந்தியாவின் வெற்றிகரமான தலைமைத்துவதைப் பாராட்டிய திரு வர்கீஸ், உலகளாவிய தென் பகுதி நாடுகளின் குரலாக இந்தியா மாறியுள்ளது என்றும் இதற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடியே காரணம் என்றும் கூறினார். கல்லூரி பேராலயத்தில் நேற்றிரவு நடைபெற்ற பிரார்த்தனையில், பிரதமருக்காக பிரார்த்தனை நடைபெற்றதாக அவர் தெரிவித்தார். உலகின் தொன்மையான மொழியான தமிழ் மீது பிரதமருக்குள்ள அன்பைக் குறிப்பிட்டு அதற்கும் அவர் பாராட்டுத் தெரிவித்தார்
தில்லி மறைமாவட்ட பேராயர் அனில் கூட்டோ, கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்ததற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்தார். கிறிஸ்தவ சமூகம் எப்போதும் நாட்டின் நலனுக்காக உழைத்து வருகிறது என்று கூறிய அவர், இந்தியாவின் வளர்ச்சி, ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக பிரதமரிடம் உறுதியளித்தார்.
இந்நிகழ்ச்சியின் போது பேசிய அருட்தந்தை பால் ஸ்வரூப், பிரதமருடன் அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடுவது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார்.
ANU/SM/PLM/KPG
(Release ID: 1990341)
Visitor Counter : 114
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam