இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் ஆண்டு சாதனைகள்

Posted On: 19 DEC 2023 5:09PM by PIB Chennai

2023-ம் ஆண்டில், விளையாட்டுத் துறையில் இந்தியா வியத்தகு சாதனைகளைப் படைத்துள்ளது.  பல்வேறு சர்வதேச போட்டிகளிலும், இந்திய வீரர் – வீராங்கனைகள், பாராட்டத்தக்க வகையில் விளையாடியுள்ளனர்.

சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், 28  தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம்  107 பதக்கங்களை வென்று, இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது.  வில்வித்தை மற்றும் துப்பாக்கி சுடும் போட்டிகளில் மட்டும், முறையே 9 மற்றும் 22 பதங்ககளை இந்திய வீரர்கள் வென்றுள்ளனர். 

இந்த வெற்றி, பாரா விளையாட்டுப் போட்டிகளிலும் தொடர்ந்தது. மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளிலும்,  இந்திய அணி  29 தங்கப்பதக்கம் உட்பட 111 பதக்கங்களை வென்று வரலாறு படைத்துள்ளது.  தடகளப் போட்டிகளில் மட்டும் இந்திய அணி, 18 தங்கம் உட்பட 55 பதக்கங்களை வென்றுள்ளது. 

உலக தடகள சாம்பியன் போட்டிகளிலும், இந்திய தடகள வீரர்-வீராங்கனைகள் வெகுசிறப்பான திறமையை வெளிப்படுத்தினர்.  இப்போட்டியில், இந்தியாவின் நீரஜ் சோப்ரா, இந்தியாவிற்கு முதலாவது தங்கப்பதக்கத்தைப் பெற்றுத் தந்தார்.  4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில், இந்தியா ஐந்தாவது இடத்தைப் பிடித்து, ஆசிய சாதனையை முறியடித்தது.

சர்வதேச செஸ் கூட்டமைப்பான ஃபிடே நடத்திய உலகக் கோப்பை செஸ் போட்டியில், உலகின் முதல்நிலை ஆட்டக்காரரான மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து களமிறிங்கிய இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா, இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.  

பெர்லினில் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக் உலக கோடைகால விளையாட்டுப் போட்டிகள் 2023-ல், 280பேர் அடங்கிய இந்திய அணி பங்கேற்று, 76 தங்கப்பதக்கம், 75 வெள்ளி, 51 வெண்கலம் என மொத்தம் 202 பதக்கங்களை வென்று, இந்திய அணி இரண்டாம் இடத்தைப் பெற்றது. 

 

பாட்மின்டன் போட்டிகளில் முக்கியமானதாக கருதப்படும் ஸ்விஸ் ஓபன் பாட்மின்டன் சாம்பியன் போட்டிகளிலும், இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி இணை  முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. 

மேலும், போபாலில் நடைபெற்ற சர்வதேச துப்பாக்கி சுடும் சம்மேளனத்தின் ரைபிள்/பிஸ்டல் உலகக்கோப்பை 2023 போட்டியிலும், இந்தியா ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என 7 பதக்கங்களைப் பெற்று, ஒட்டுமொத்த பதக்கப் பட்டியலில் 2ம் இடத்தைப் பெற்றது. 

2023-ம் ஆண்டில் இந்தியா நடத்திய சர்வதேச போட்டிகள்

புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில், சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் ஒடிசா ஹாக்கி ஆடவர் உலகக் கோப்பை 2023 போட்டிகளை இந்தியா நடத்தியது.  இப்போட்டியில் ஜெர்மனி அணி  கோப்பையை வென்ற நிலையில், பெல்ஜியம் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. 

இந்தியாவில், மோட்டார் விளையாட்டுப் போட்டிகளை மேம்படுத்தும் நோக்கில்,  மோட்டோ ஜிபி பாரத் பந்தயங்களும் முதன்முறையாக  நொய்டாவில் நடத்தப்பட்டது. 

சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனத்தின் மகளிர் உலகக் கோப்பை குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் 2023, தில்லியில் மாரச்சில் நடத்தப்பட்டது.  இதில்,  இந்தியாவின்  லவ்லினா போர்கோஹைன், நிகத் ஸரீன், நீது கங்காஸ் மற்றும் ஸ்வீட்டி போரா ஆகியோர் 4 தங்கப் பதக்கங்களை வென்றனர்.  இந்தப் போட்டியின் சிறந்த அணியாக இந்தியா மகுடம் சூட்டப்பட்டது. 

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் சார்பில், இந்தியாவின் தலைமையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 3 நாள் விளையாட்டுத்துறை அமைச்சர்கள் கூட்டம் மற்றும் இந்த அமைப்பின் நிபுனர் பணிக் குழுக் கூட்டமும் மார்ச் 13 மற்றும் 15-ந் தேதிகளில் நடைபெற்றது.  

விளையாட்டுத்துறையின் உயர் அதிகார அமைப்பான, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் 141வது கூட்டத்தை, 40ஆண்டுகளுக்குப் பிறகு, மும்பையில் இந்தியா நடத்தியது. இதில், 2028ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில், கிரிக்கெட் விளையாட்டையும் சேர்க்க  சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் பொதுக்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.   இக்கூட்டத்தை தொடங்கிவைத்துப் பேசிய பிரதமர் மோடி, 2030-ம் ஆண்டு இளையோர்  ஒலிம்பிக் போட்டியையும்,  2036ம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக் போட்டியையும் நடத்த இந்தியா ஆர்வமுடன் உள்ளதாக தெரிவித்தார்.  

முதலாவது கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகள் தில்லியில் நடைபெற்றது. 

கோவாவில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது :   

37-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை, கோவாவில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில், அக்டோபர் 26 அன்று பிரதமர் தொடங்கிவைத்தார்.  இந்தப் போட்டியில், நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 10,000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்-வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.  இப்போட்டியில், 228 பதக்கங்களுடன் மகாராஷ்டிரா முதலிடத்தைப் பெற்றது,  ஹரியானா இரண்டாம் இடம் பெற்றது. 

தேசிய விளையாட்டு தினம் 2023-ல், நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. 

தேசிய விளையாட்டுக் கூட்டமைப்பு மற்றும் கேலோ இந்தியா பல்கலைகழக விளையாட்டுகளுக்கான இரண்டு இணைய தளங்கள், தேசிய விளையாட்டு தினம்-2023ல் தொடங்கப்பட்டது.   கட்டுடல் இந்தியா வினாடி வினாப் போட்டிகளும் நடத்தப்பட்டது. 

கேலோ இந்தியா பல்கலைகழக விளையாட்டுப் போட்டிகள், மே 25ந் தேதி முதல் ஜுன் 3ந் தேதி வரை, உத்தரப்பிரதேசத்தில் நடத்தப்பட்டது.  நாட்டிலுள்ள 200க்கும் மேற்பட்ட பல்கலைகழகங்களைச் சேர்ந்த சுமார் 4700 தடகள வீரர் – வீராங்கனைகள், மொத்தம் 21 வகையான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனர்.  

5வது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளும், மத்தியப் பிரதேசத்தின் போபாலில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. 

கேலா இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகள், குல்மார்க்கில் பிப்ரவரி 10ந் தேதி தொடங்கி 14ந் தேதி வரை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின்போது, 40 கேலோ இந்தியா மையங்களை, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் காணொலி வாயிலாக தொடங்கிவைத்தார்.  

உங்களுக்கான மருந்துகளை அறிந்துகொள்வீர்

நேர்த்தியான விளையாட்டை ஊக்குவித்து, ஊட்டச்சத்துமிக்க உணவுகளை உட்கொள்வது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில்,  தேசிய  ஊக்கமருந்து தடுப்பு அமைப்பின் சார்பில், தில்லியில் ஏப்ரல் 13-ல் மாநாடு ஒன்று நடத்தப்பட்டது.  இதற்காக,  இணையதளங்கள் மற்றும் Know Your  Medicine  என்ற செல்போன் செயலியும் தொடங்கப்பட்டது. 

************

PKV/MM/KRS

 

(Release ID: 1988258) 

 
 
 


(Release ID: 1988840) Visitor Counter : 159