சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இதய, நுரையீரல் புத்துயிர் (சிபிஆர்) நடைமுறை குறித்த நாடு தழுவிய பொது விழிப்புணர்வு இயக்கம்: மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்
Posted On:
06 DEC 2023 1:40PM by PIB Chennai
நோயாளிக்கு மாரடைப்பு ஏற்பட்டவுடன் உடனடியாக சிகிச்சை அளிக்கப்படுவது அவசியம் என்றும் அதற்கு சிபிஆர் எனப்படும் இதய நுரையீரல் புத்துயிர் நடைமுறை குறித்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சி மிக முக்கியமானது என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.
இதய நுரையீரல் புத்துயிரூட்டல் எனப்படும் சிபிஆர் (Cardiopulmonary Resuscitation - CPR) பயிற்சி குறித்து தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் (என்பிஇஎம்எஸ்) ஏற்பாடு செய்த நாடு தழுவிய பொது விழிப்புணர்வு நிகழ்ச்சியை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இன்று (06-12-2023) புதுதில்லியில் தொடங்கி வைத்தார். மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர்கள் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகெல், டாக்டர் பாரதி பிரவீன் பவார் ஆகியோரும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, மாரடைப்பு சிகிச்சைக்கான முதலுதவி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த முன்முயற்சியைப் பாராட்டினார். நல்ல இதய ஆரோக்கியத்தைப் பராமரிப்பதும், சீரான உணவு மற்றும் உடற்பயிற்சியை மேற்கொள்வதும் முக்கியமானது என்று அவர் கூறினார். மாரடைப்பால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, சிபிஆர் நுட்பத்தில் முதலுதவி அளிக்கப்பட்டால் அது உயிர்களைக் காப்பாற்ற உதவும் என்று அவர் தெரிவித்தார்.
மாரடைப்பால் பாதிக்கப்பட்டவருக்கு உதவி தேவைப்படுவதால் இந்த சிபிஆர் நுட்பம் முக்கியமானது என்றார். இதனைக் கருத்தில் கொண்டு, போதிய அறிவு மற்றும் பயிற்சியுடன் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என்று அவர் கூறினார்.
தேசிய அளவில் நடத்தப்படும் நாட்டின் முதல் சிபிஆர் விழிப்புணர்வு இயக்கம் இதுவாகும். இந்த இயக்கத்தின் போது, மாணவர்கள், மருத்துவத் துறையினர் மற்றும் துணை மருத்துவ ஊழியர்கள் உள்ளிட்டவர்களுக்கு இணையதளம் மூலம் ஒரே அமர்வில் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் பொதுமக்களின் ஈடுபாடு மற்றும் பங்கேற்பைப் பாராட்டிய டாக்டர் மன்சுக் மாண்டவியா, மேம்பட்ட அறிவு மற்றும் பயிற்சி சரியான நடைமுறைகள் மூலம் மாரடைப்பை திறம்பட நிர்வகித்து உயிரைக் காப்பாற்ற முடி.யும் என்றார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மருத்துவர், சிபிஆர் தொழில்நுட்பம் குறித்து விளக்கி, பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். சிபிஆர் பயிற்சி நுட்பம் தொடர்பாக பின்வரும் வீடியோ இணைப்பில் விரிவாகக் காணலாம். https://www.youtube.com/watch?v=NLAX9FfvIKQ
*******
ANU/SMB/PLM/KV
(Release ID: 1983129)
Visitor Counter : 168