குடியரசுத் தலைவர் செயலகம்

ராஷ்டிரசந்த் துக்கடோஜி மகராஜ் நாக்பூர் பல்கலைக்கழகத்தின் 111-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் பங்கேற்பு

Posted On: 02 DEC 2023 12:32PM by PIB Chennai

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இன்று (டிசம்பர் 2, 2023) நடைபெற்ற ராஷ்டிரசந்த் துக்கடோஜி மகராஜ் நாக்பூர் பல்கலைக்கழகத்தின் 111-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், எந்தவொரு நாட்டின் வளர்ச்சியிலும் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம் முக்கியப் பங்கு வகிப்பதாகக் குறிப்பிட்டார். ராஷ்டிரசந்த் துக்கடோஜி மகராஜ் நாக்பூர் பல்கலைக்கழகம் ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை அதிக அளவில் ஊக்குவிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்தார்.  புதிய கண்டுபிடிப்புகளுக்காக இப்பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், 60-க்கும் மேற்பட்ட காப்புரிமைகளைப் பெற்றுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.  மாணவர்களிடையே புத்தொழில் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதற்காக பல்கலைக்கழகத்தில் ஒரு தொழில் பாதுகாப்பு மையம் செயல்படுவதையும் அவர் குறிப்பிட்டார். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளூர் தேவைகளை மனதில் கொண்டு ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும் என்றும், அந்த கண்டுபிடிப்புகளை உரிய முறையில் செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தற்போது முழு உலகமும் ஒரு கிராமத்தைப் போல உள்ளது என்று அவர் கூறினார். எந்த நிறுவனமும் நவீன உலகத் தொடர்புகளில் இருந்து துண்டிக்கப்பட்டு இருப்பதில்லை என்று அவர் தெரிவித்தார். நாக்பூர் பல்கலைக்கழகம் பல்துறை ஆய்வுகள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை மேலும் ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதன் மூலம் மட்டுமே, உலகின் முன் உள்ள சவால்களை எதிர்கொள்ள முடியும் என்று அவர் கூறினார்.

தொழிநுட்பத்தின் பயன்பாடு குறித்து கருத்து தெரிவித்த குடியரசுத்தலைவர், எந்தவொரு வளத்தையும் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்றும் அனைத்தையும் நாம் சரியாகப் பயன்படுத்தினால், அது நாட்டிற்கும் சமூகத்திற்கும் நன்மை பயக்கும் எனவும் அவர் கூறினார்.  அவற்றைத் தவறாகப் பயன்படுத்தினால், அது ஒட்டு மொத்த மனிதகுலத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என்று அவர் குறிப்பிட்டார். இன்று செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு நம் வாழ்க்கையை எளிதாக்கும் வேளையில் அதில் உள்ள டீப்ஃபேக் தொழில்நுட்பம் சமூகத்திற்கு ஒரு அச்சுறுத்தலாக உள்ளது என்று எடுத்துரைத்தார்.

பட்டம் பெறுவது கல்வியின் முடிவல்ல என்றும் மாணவர்கள் தொடர்ந்து ஆர்வத்துடன் புதியவற்றைக் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். தொழில்நுட்பத் துறையில் விரைவான மாற்றங்கள் நிகழும்போது, தொடர்ந்து அதைத் தெரிந்து கொண்டு அதற்கேற்றவாறு நம்மைப் புதுப்பித்துக் கொள்வது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

மாணவர்கள் நாடு மற்றும் சமூகத்தின் சொத்து என்று அவர் தெரிவித்தார். இந்தியாவின் எதிர்காலம் மாணவர்களின் கைகளில் உள்ளது என்று கூறிய அவர், பின்னடைவுகளைக் கண்டு பின்வாங்கக் கூடாது என்று அறிவுறுத்தினார். அந்த சூழ்நிலைகளை அறிவு மற்றும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்று குடியரசுத்தலைவர் திருமதி திரெளபதி முர்மு கூறினார்.

*******

ANU/AD/PLM/DL



(Release ID: 1981860) Visitor Counter : 70