வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
பாதுகாப்பான, நம்பகமான, நெகிழ்ச்சித்தன்மையுடன் கூடிய விநியோகச் சங்கிலியை உருவாக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: உலகத் தெற்கின் குரல் இரண்டாவது மாநாட்டில் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் உரை
Posted On:
17 NOV 2023 5:17PM by PIB Chennai
விநியோகச் சங்கிலிகளை வெளிப்படையான, பாதுகாப்பான, நம்பகமான, நிலையான மற்றும் சமத்துவமானதாக மாற்றுவதற்கு பல்வேறு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார். உலகத் தெற்கின் குரல் இரண்டாவது உச்சிமாநாட்டில் இன்று (17.11.2023) அவர் உரையாற்றினார்.
கொவிட் -19 தொற்றுப்பாதிப்பு நெருக்கடி, பருவநிலை மாற்றத்தின் தாக்கம் மற்றும் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள் ஆகியவை உலகளாவிய விநியோக சங்கிலிகளை பாதித்துள்ளன என்று அவர் கூறினார். இந்த இடையூறுகள், உணவு, நிலையான வளர்ச்சியை அடைதல் ஆகியவற்றில் மகத்தான சவால்களை உருவாக்கியுள்ளன என்று அவர் தெரிவித்தார். உலகளாவிய சவால்களில் பெரும்பாலானவை உலகின் தென் பகுதி நாடுகளால் உருவாகவில்லை என்று அவர் குறிப்பிட்டார். ஆனால் அந்த சவால்கள் இந்த நாடுகளை அதிகம் பாதிக்கின்றன என்பதை பிரதமர் திரு நரேந்திர மோடி சரியாகச் சுட்டிக்காட்டியுள்ளார் என்று திரு பியூஷ் கோயல் கூறினார். உலகம் தீர்வுகளைத் தேடும் போதெல்லாம், நமது குரல் கூட்டாக ஒலிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் குறிப்பிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
உலகின் தெற்கு குரலை வலுப்படுத்துவதில் இந்தியா வலுவான பங்களிப்பை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ஆப்பிரிக்க யூனியன் ஜி 20 அமைப்பின் ஒரு பகுதியாக தற்போது மாறியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். உலகத் தெற்கின் குரலை வலுப்படுத்தவும் மேலும் பல முயற்சிகளை மேற்கொள்வது அவசியம் என்று அவர் கூறினார்.
இந்தியாவின் தலைமையின் கீழ் பொது உள்கட்டமைப்பு அமைப்புகளுக்கான ஜி 20 கட்டமைப்பு கொண்டு வரப்பட்டுள்ளது என்று திரு பியூஷ் கோயல் சுட்டிக்காட்டினார். இது சமூக மட்டத்தில் மக்களுக்கு நேரடியாகச் சேவைகளை வழங்குவதில் டிஜிட்டல் கட்டமைப்பின் பங்கை அங்கீகரிப்பதாக அவர் தெரிவித்தார்.
உலகின் தென்பகுதி நாடுகளிடையேயான ஒத்துழைப்பின் மூலம் தொழில்நுட்பம் மற்றும் சேவைகளின் அடித்தளத்தை வலுப்படுத்த முடியும் என்று அவர் குறிப்பிட்டார். இந்த நாடுகள் தங்களது திறன்களைப் பயன்படுத்தி, நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் கூட்டு ஒத்துழைப்புகளை உருவாக்க வேண்டிய நேரம் இது என்று திரு பியூஷ் கோயல் கூறினார்.
***
(Release ID: 1977663)
ANU/PKV/PLM/AG/KRS
(Release ID: 1977708)
Visitor Counter : 135