வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

நகர்ப்புற திட்டங்களுக்கான செலவு 2014-ம் ஆண்டு முதல் கணிசமாக அதிகரித்துள்ளது: வீட்டுவசதித் அமைச்சர் திரு ஹர்தீப் எஸ் பூரி

Posted On: 16 NOV 2023 3:03PM by PIB Chennai

நகர்ப்புற திட்டங்களுக்கான செலவு 2014-ம் ஆண்டு முதல் கணிசமாக அதிகரித்துள்ளது என்று மத்திய வீட்டுவசதித் துறை அமைச்சர் திரு ஹர்தீப் எஸ் பூரி கூறியுள்ளார். நகரங்கள் 2.0 சவால்கள் தொடக்க விழாவில் பேசிய அவர், கரிம கழிவுகளிலிருந்து உயிரி எரிபொருள்களை உற்பத்தி செய்வதற்கான கோபர் தன் திட்டத்துடன் ஒப்பந்தம் செய்வதையும் இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து 100 ஸ்மார்ட் நகரங்களும் இந்தச் சவாலுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அமைச்சர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் முழு ஆதரவும் வழிகாட்டுதலும் அவர்களுக்கு வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

2023, மே  31 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நகரங்கள் 2.0 க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. நகரங்கள் 2.0 சவாலை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இன்று தொடங்கி வைத்தார். இந்தியாவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதர் திரு ஹெர்வே டெல்பின் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் செயலாளர் திரு மனோஜ் ஜோஷி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நகரங்கள் திட்டம் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ஆதரவளித்த சர்வதேச நட்பு நாடுகளுக்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார் . நகரங்கள் 2.0 திட்டத்திற்கான மொத்த நிதியில் ரூ.1,760 கோடி அல்லது 200 மில்லியன் யூரோ கடன் அடங்கும். இத்திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து 106 கோடி ரூபாய் (12 மில்லியன் யூரோ) தொழில்நுட்ப உதவி மானியமும் கிடைக்கும்.

கூட்டத்தில் உரையாற்றிய திரு பூரி, நகரங்கள் 1.0 இன் சாதனைகளை எடுத்துரைத்தார், இதில் 100 கிலோமீட்டருக்கும் அதிகமான மோட்டார் அல்லாத போக்குவரத்து வழித்தடங்களை மேம்படுத்துதல்; 750 ஏக்கருக்கும் அதிகமான பசுமையான திறந்தவெளிகளை உருவாக்குதல்; மற்றும் 1,400 குறைந்த விலை வீடுகள் கட்டுதல்; 350 கல்வி வசதிகள் மற்றும் 51 சுகாதார வசதிகளை செயல்படுத்துதல் உள்பட1,000 க்கும் மேற்பட்ட புதிய மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தியதும் அடங்கும்; ஹூப்ளி-தார்வாட்டில் உள்ள நகரங்கள் திட்டம் சமீபத்தில் குடியரசுத் தலைவரிடமிருந்து புத்தாக்க பிரிவின் கீழ் ஸ்மார்ட் சிட்டி விருது -2022 ஐ வென்றது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டு காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 2014-ம் ஆண்டு முதல் நகர்ப்புற வளர்ச்சிக்கான மொத்த முதலீடுகள் 10 மடங்கு அதிகரித்து 18 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

நாட்டின் நகர்ப்புறங்களில் சுழற்சிப் பொருளாதாரத்தை அடைவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்து பேசிய அமைச்சர், தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் , நாம் ஏற்கனவே 112 உயிரி எரிபொருள் ஆலைகள், 2,391 கழிவுகளிலிருந்து உரம் தயாரிக்கும் ஆலைகள், 55 கழிவுகளிலிருந்து எரிசக்தி ஆலைகள், 2,281 பொருள் மீட்பு வசதிகள், 972 கட்டுமான மற்றும் இடிப்பு கழிவு மேலாண்மை ஆலைகள் மற்றும் 335 திட மற்றும் திரவ வள மேலாண்மை ஆலைகளை அமைத்துள்ளோம் என்று குறிப்பிட்டார்.

*****

ANU/PKV/IR/RR/KV

 



(Release ID: 1977395) Visitor Counter : 77