வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

தூய்மையான தீபாவளி – சிறப்பான தீபாவளி: தூய்மையுடன் கூடிய பண்டிகைக் கொண்டாட்டங்கள் தொடர்பான கையெழுத்து இயக்கத்தை நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டு வசதித் துறை அமைச்சகம் தொடங்குகிறது

Posted On: 06 NOV 2023 3:46PM by PIB Chennai

 "கடந்த சில ஆண்டுகளில், நாட்டின் ஒரு புதிய தீர்மானமும் பண்டிகைகள் மற்றும் விழாக்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. அது உள்ளூர்ப் பொருட்களை ஊக்குவிப்போம் என்ற தீர்மானம் என்பது உங்களுக்குத் தெரியும். பண்டிகைகளின்போது தூய்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். பாலித்தீன் போன்ற தீங்கு விளைவிக்கும் குப்பைகள் நமது பண்டிகைகளின் உணர்வுக்கு எதிரானவை. எனவே, பிளாஸ்டிக் அல்லாத உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பண்டிகைகளின் போது அவற்றை ஊக்குவிப்பதும், தூய்மையுடன் நமது ஆரோக்கியத்தையும் சுற்றுச்சூழலையும் கவனித்துக்கொள்வதும் நமது கடமையாகும்" என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறி இருக்கிறார்.

தீபாவளி நெருங்குவதால் வீடுகளில் கொண்டாட்டம் கோலாகலமாக உள்ளது. தீபாவளிக்கு முன் மக்கள் தூய்மைப் பணிகளில் ஈடுபடுவதால் ஒவ்வொரு வீட்டிலும் தூய்மை என்ற அம்சம் முக்கியத்துவம் பெறுகிறது. தீபாவளியின் போது, தூய்மை என்பது வீடுகளில் மட்டும் இல்லை. தெருக்கள், சந்தைகள் மற்றும் சுற்றுப்புறங்கள் தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய ஒட்டுமொத்த சமூகமும் ஒன்றிணைய வேண்டும்.

நாட்டின் பண்டிகை மனநிலைக்கு ஏற்ப, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் நகர்ப்புறத் தூய்மை இயக்கத்தின் கீழ், 2023 நவம்பர் 06 முதல் 12-ம் தேதி வரை “தூய்மையான தீபாவளி சிறப்பான தீபாவளி இயக்கம் தொடங்கப்படுகிறது. தூய்மை இந்தியாவின் பயணம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம் தொடர்பான கொள்கைகளுடன் தீபாவளியின் கலாச்சார முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதை இந்த இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளைப் பயன்படுத்துவதற்கும், ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாத தீபாவளியைக் கொண்டாடுவதற்கும், தீபாவளிக்கு முன்னும் பின்னும் தூய்மைக்கு முன்னுரிமை அளிப்பதற்கும் தனிநபர்களை ஊக்குவிப்பதன் மூலம் சுற்றுச்சூழல் மீதான பொறுப்புணர்வை வளர்ப்பதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம், பண்டிகைகள் மற்றும் விழாக்களுடன் சுற்றுச்சூழல் அணுகுமுறையை வளர்க்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

'தூய்மையான தீபாவளி சிறப்பான தீபாவளி' என்ற கையெழுத்து இயக்கம் அரசின் மைகவ் தளத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது.  தூய்மையான, பசுமையான மற்றும் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் இல்லாத தீபாவளியைக் கொண்டாடுவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் தேசிய கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்க மக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். 2023 நவம்பர் 6 முதல் 12-ம் தேதி வரை மைகவ் தளத்தில் தூய்மை தீபாவளிக்கு மக்கள் பதிவு செய்யலாம். அவர்கள் ஒரு 30 விநாடிகள் கொண்ட வீடியோவில் தூய்மை தீபாவளிக்கான அவர்களின் தனித்துவமான முன்முயற்சிகளைப் படம்பிடித்து, தூய்மையான தீபாவளி (#SwachDiwali) என்ற ஹேஷ்டேக் மூலம் சமூக ஊடக தளங்களில் பதிவேற்றலாம். நகர்ப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின் அதிகாரப் பூர்வ சமூக வலைதளமான @sbmurbangov என்ற தளத்தையும் குறிப்பிடலாம்.

----

ANU/PKV/PLM/KV



(Release ID: 1975043) Visitor Counter : 143