குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

ராணுவப் பொறியாளர் சேவையின் பயிற்சி அதிகாரிகள் குடியரசுத்தலைவரை சந்தித்தனர்

Posted On: 03 NOV 2023 2:02PM by PIB Chennai

ராணுவப் பொறியாளர் சேவையின் பயிற்தி அதிகாரிகள் இன்று (நவம்பர் 3, 2023) குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய குடியரசுத் தலைவர், பொறியியலாளர்களின் பங்கு என்பது கணக்கீடுகள், வடிவமைப்பு மற்றும் நிர்மாணம் என்பவற்றுடன் நின்று விடுவது அல்ல என்றார். இது மிகவும் பரந்த அளவிலானது என்றும் சமூகங்களை இணைப்பது என்றும் அவர் கூறினார். கனவுகளை நனவாக்குவது, எதிர்காலத்தை வடிவமைப்பது ஆகியவை இதில் அடங்கும் என்று அவர் தெரிவித்தார். வலுவான மற்றும் நிலையான பௌதீக உள்கட்டமைப்பை உருவாக்கும் சக்தி பொறியாளர்களுக்கு உள்ளது என்று அவர் இளம் அதிகாரிகளிடம் கூறினார் .

பருவநிலை மாற்ற சவால்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்துப் பேசிய குடியரசுத்தலைவர், சுற்றுச்சூழலுக்கு உகந்த, நிலையான மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் கட்டமைப்புகளை வடிவமைக்க வேண்டியது ராணுவப் பொறியியல் சேவை அதிகாரிகளின் கடமையாகும் என்று கூறினார். பசுமைப் பொறியியல் என்பது காலத்தின் தேவை என்று அவர் தெரிவித்தார். பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதில் ராணுவப் பொறியியல் சேவைப் பிரிவு பங்களிப்பை வழங்குவதற்கு அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். ராணுவப் பொறியியல் சேவையின் இளம் அதிகாரிகள் புதிய யோசனைகள், புதிய ஆற்றல் மற்றும் அதிக உற்சாகத்துடன் செயல்படுவதன் மூலம் இந்த முயற்சிகளுக்கு மேலும் உத்வேகம் அளிப்பார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அனைத்துத் துறைகளிலும், குறிப்பாகப் பொறியியல் துறையில் நவீன மற்றும் மேம்பட்டத்  தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியமானது என்று குடியரசுத்தலைவர் கூறினார். ராணுவப் பொறியியல் சேவை அதிகாரிகள் வளர்ச்சிப் பணிகளில் முன்னணியில் இருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

உலகளாவிய நிலையில் பல்வேறு துறைகளில் நமது நாடு புதிய அளவுகோல்களை அமைத்து வரும் இந்த நேரத்தில், நாட்டிற்கும் அதன் ஆயுதப் படைகளுக்கும் சேவை செய்ய உறுதிபூண்டுள்ள ராணுவப்  பொறியியல் சேவைப் பிரிவினர் அதில் பெருமிதம் கொள்ள வேண்டும் என்று குடியரசுத் தலைவர் கூறினார். தாய் நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்யத் தயாராக இருக்கும் வீரர்களுக்கு சேவை மற்றும் ஆதரவை வழங்கும் வாய்ப்பை இந்த ராணுவப் பொறியியல் சேவைப் பிரிவினர் பெற்றிருப்பதாகக் குடியரசுத் தலைவர் கூறினார்.

*****

ANU/SMB/PLM/KRS


(Release ID: 1974508) Visitor Counter : 108