பிரதமர் அலுவலகம்

விடுதலையின் அமிர்தப் பெருவிழா மற்றும் எனது இளைய பாரதத் தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

Posted On: 31 OCT 2023 8:28PM by PIB Chennai

பாரத் மாதா கி- ஜெய்!

பாரத் மாதா கி- ஜெய்!

பாரத் மாதா கி- ஜெய்!

மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களான  திரு அமித் பாய் அவர்களே, திரு கிஷன் ரெட்டி  அவர்களே,  திரு அனுராக் தாக்கூர்  அவர்களே,  திரு அர்ஜுன் ராம் மேக்வால்  அவர்களே,  திருமிகு மீனாட்சி லேகி அவர்களே, திரு நிசித் பிரமானிக் அவர்களே  மற்றும் நாடு முழுவதிலுமிருந்து இங்கு கூடியுள்ள எனது அனைத்து இளம் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களே!

இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க பிரம்மாண்டமான விழாவின் உச்சக்கட்டத்தை கடமைப் பாதை காண்கிறது. காந்தியால் ஈர்க்கப்பட்டு, மார்ச் 12, 2021 அன்று சபர்மதி ஆசிரமத்திலிருந்து தொடங்கிய விடுதலையின் அமிர்தப் பெருவிழா, அக்டோபர் 31, 2023 அன்று சர்தார் சாகேபின் பிறந்தநாளில் முடிவடைகிறது. தண்டி யாத்திரை தொடங்கிய பிறகு நாட்டின் குடிமக்கள் அதனுடன் இணைந்தது போலவே,  விடுதலையின் அமிர்தப் பெருவிழாவும் ஒரு புதிய வரலாற்றை உருவாக்கும் அளவுக்குப் பெருந்திரளான பங்கேற்பைக் கண்டுள்ளது. 

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும்  அமிர்தப் பெருவிழா கொண்டாட்டம் ,' எனது மண், எனது தேசம்'  இயக்கத்தின் நிறைவுடன்  முடிவடைகிறது. இன்று,  விடுதலையின் அமிர்தப் பெருவிழாவை நினைவுகூரும் வகையில் ஒரு நினைவுச்சின்னமும் திறக்கப்பட்டுள்ளது. இந்த நினைவுச்சின்னம், இந்த வரலாற்று நிகழ்வை வரும் தலைமுறையினருக்கு என்றென்றும் நினைவூட்டும். சில மாநிலங்கள், அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் சிறந்த ஏற்பாடுகளுக்காக விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன. விருது பெற்ற அனைவருக்கும், அந்த மாநில மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத்  தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது குடும்ப உறுப்பினர்களே,

ஒரு புறம், இன்று ஒரு பெரிய கொண்டாட்டத்தை நிறைவு செய்கிறோம், அதே நேரத்தில், நாங்கள் ஒரு புதிய தீர்மானத்தையும் தொடங்குகிறோம். இன்று, எனது இளைய பாரதம், அதாவது 'மை பாரத்'  திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. எனது இளைய பாரதத் தளம், 21-ஆம் நூற்றாண்டில் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் முக்கிய பங்கு வகிக்கவிருக்கிறது. இதற்காக, நாட்டிற்கும், நாட்டு இளைஞர்களுக்கும் எனது வாழ்த்துகளைத்  தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது குடும்ப உறுப்பினர்களே,

பாரதத்தின் இளைஞர்களால்  எவ்வாறு தங்களை ஒழுங்கமைத்து ஒவ்வொரு இலக்கையும் அடைய முடியும் என்பதற்கு 'எனது மண், எனது தேசம்’ இயக்கம் ஓர் எடுத்துக்காட்டு. 'எனது மண், எனது தேசம்' என்ற இந்தப்  இயக்கத்துடன் நாட்டின் கிராமங்கள் மற்றும் தெருக்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான இளைஞர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் லட்சக்கணக்கான நிகழ்வுகள் நடந்துள்ளன. நாடு முழுவதிலுமிருந்து 8 ஆயிரத்து 500 'அமிர்த  கலசங்கள்' இன்று இங்கு வந்துள்ளன. இந்தப் இயக்கத்தின் கீழ், கோடிக்கணக்கான இந்தியர்கள் ஐந்து உறுதிமொழிகளை எடுத்துள்ளனர். லட்சக்கணக்கான இந்தியர்களும் தங்கள் செல்ஃபி படங்களை இயக்க வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளனர்.

நண்பர்களே,

 மண் ஏன் என்ற கேள்வி பலரது மனதிலும் எழலாம். மகத்தான நாகரிகங்கள் முடிவுக்கு வந்துவிட்டன, ஆனால் பாரத மண்ணில் அந்த உணர்வு, உயிர் சக்திதான் இந்த தேசத்தைக் காலங்காலமாகப் பாதுகாத்து வருகிறது. நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் நம் ஆன்மாவை, ஆன்மீகத்துடன் இணைக்கும் மண் இது. இந்த மண்ணில் சத்தியம் செய்து, நமது மாவீரர்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பல கதைகள் இந்த மண்ணோடு பின்னிப் பிணைந்துள்ளன. சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன், ஒரு சிறுவன் இந்த மண்ணில் விறகு விதைத்துக் கொண்டிருந்தான். என்ன விதைக்கிறாய் என்று அவரது தந்தை கேட்டபோது, "நான் துப்பாக்கிகளை விதைக்கிறேன்" என்று பதிலளித்தார். "துப்பாக்கியைக் கொண்டு என்ன செய்வாய்?" என்று அப்பா கேட்டார். அந்தச் சிறுவன், "நான் என் நாட்டை விடுவிப்பேன்" என்றான். அவன் வளர்ந்தபோது, அந்த சிறுவன் தியாகத்தின் உச்சத்தை அடைந்தான், அதை இன்றும் அடைவது கடினம். அந்தச் சிறுவன் வேறு யாருமல்ல, வீரத் தியாகி பகத்சிங்தான்.

விவசாயியாக இருந்தாலும் சரி, வீரனாக இருந்தாலும் சரி, அனைவரும் தங்கள் ரத்தத்தையும், வியர்வையையும் இந்த மண்ணுக்கு வழங்கியுள்ளனர். எனவே, இந்த அமிர்த கலசத்தில் உள்ள ஒவ்வொரு மண் துகளும் விலைமதிப்பற்றவை. அவை சுதாமாவின் பையில் வைக்கப்பட்ட அரிசி தானியங்களைப் போன்றவை. சுதாமாவின் பையில் ஒரு கைப்பிடி அரிசியில் ஒரு முழு உலகத்தின் செல்வமும் அடங்கி இருப்பது போல, நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் கனவுகள், விருப்பங்கள் மற்றும் எண்ணற்ற தீர்மானங்கள் இந்த ஆயிரக்கணக்கான  அமிர்த கலசங்களில் பொதிந்துள்ளன. நாட்டின் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் முற்றத்திலிருந்தும் இங்கு வந்துள்ள மண் நமக்குக் கடமை உணர்வை நினைவூட்டிக்கொண்டே இருக்கும். 'வளர்ச்சியடைந்த பாரதம்’ என்ற நமது உறுதிப்பாட்டை நிறைவேற்றவும், இன்னும் கடினமாக  உழைக்கவும் இந்த மண் நமக்கு உத்வேகம் அளிக்கும்.

நண்பர்களே,

இந்த மண்ணுடன், நாடு முழுவதும் உள்ள தாவரங்கள் இங்கு அமிர்தத் தோட்டத்தை உருவாக்கப்  பயன்படுத்தப்படுகின்றன. அதன் திறப்பு விழாவும் நடந்துள்ளது. இந்த அமிர்தத் தோட்டம், வரும் தலைமுறையினரை ' ஒரே பாரதம், உன்னத பாரதம்'  என்ற உணர்வை நோக்கி ஊக்குவிக்கும். புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் 'ஜன் ஜனனி ஜன்மபூமி' என்ற கலைப்படைப்பு இருப்பது சிலருக்குத் தெரிந்திருக்கலாம். ஒவ்வொரு மாநிலத்தின் மண்ணையும் பயன்படுத்தி நாட்டின் ஒவ்வொரு மாநிலத்தைச் சேர்ந்த 75 பெண் கலைஞர்களால் இது உருவாக்கப்பட்டுள்ளது. இது நம் அனைவருக்கும் ஒரு பெரிய உத்வேகம்.

எனது குடும்ப உறுப்பினர்களே,

 விடுதலையின் அமிர்த பெருவிழா கொண்டாட்டம், கிட்டத்தட்ட ஆயிரம் நாட்கள் தொடர்ந்தது. இந்த ஆயிரம் நாட்களில், பாரதத்தின் இளைஞர்கள் மீது மிகப்பெரிய மற்றும் மிகவும் நேர்மறையான தாக்கம் ஏற்பட்டுள்ளது. இது சுதந்திரத்தின் மாண்புகளை இளைய தலைமுறையினருக்கு உணர்த்தியுள்ளது.

நண்பர்களே,

உங்களைப் போல நானும் அடிமைத்தனத்தை பார்த்ததில்லை. விடுதலை வேட்கை, தவம், தியாகம் ஆகியவற்றை நாம் அனுபவித்ததில்லை. நம்மில் பலர் சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்தவர்கள். சுதந்திரத்துக்குப் பிறகு பிறந்த நாட்டின் முதல் பிரதமர் நான்தான்.  அமிர்தப் பெருவிழாவின்போது நான் நிறைய புதிய  தகவல்களைப் பெற்றுள்ளேன். இந்தக் காலகட்டத்தில் பழங்குடி வீரர்களின் பல பெயர்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

நாடு முழுவதும் அமிர்தப் பெருவிழா மக்களின் கொண்டாட்டமாக  மாற்றப்பட்டது. ' இல்லந்தோறும் மூவர்ணக் கொடி'  இயக்கத்தின் வெற்றி ஒவ்வொரு இந்தியரின் வெற்றியாகும். அமிர்தப்  பெருவிழா, ஒரு வகையில், மறக்கப்பட்ட வரலாற்றின் பக்கங்களை எதிர்கால சந்ததியினருடன் இணைத்துள்ளது.

சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற வீரர்களின் தீவிர ஈடுபாட்டை எடுத்துக்காட்டும் ஒரு குறிப்பிடத்தக்க தரவுத்தளம் தயாரிக்கப்பட்டுள்ளது. அல்லூரி சீதாராம ராஜு, வாரிகுட்டி சென்னய்யா, தந்தியா பில், டிரோட் சிங் மற்றும் நாடு முழுவதும் உள்ள பல கதாநாயகர்கள் இப்போது தங்கள் பங்களிப்புகளுக்காக அறியப்படுகிறார்கள்.  அமிர்தப் பெருவிழாவின்போது கிட்டூர் ராணி சென்னம்மா, ராணி கெய்டின்லியூ, ராணி வேலு நாச்சியார், மாதங்கினி ஹஸ்ரா, ராணி லட்சுமிபாய் முதல் துணிச்சலான ஜல்காரிபாய் வரை நாட்டின் மகளிர் சக்திக்கு மரியாதை செலுத்தினோம்.

எனது குடும்ப உறுப்பினர்களே,

நோக்கங்கள் நல்லதாக இருக்கும்போது, தேசத்தின் அபரிமிதமான உணர்வு முதலில் வரும்போது, முடிவுகள் மிகச் சிறந்ததாக இருக்கும். விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் போது பாரதம் வரலாற்று மைல்கற்களை அடைந்துள்ளது. இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய நெருக்கடியான கொவிட்  பெருந்தொற்றை நாம் வெற்றிகரமாக எதிர்கொண்டோம், இந்தக் காலகட்டத்தில், வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான செயல்திட்டத்தை நாம் வகுத்தோம்.  அமிர்தப் பெருவிழாவின் போது இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்தது. உலகளாவிய பெரிய சவால்களை எதிர்கொண்ட போதும்,  இந்தக் காலகட்டத்தில்  பாரதம் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக மாறியது. சந்திரயான் விண்கலத்தை நிலவில் தரையிறக்கினோம். வரலாற்றுச் சிறப்புமிக்க ஜி20 உச்சிமாநாட்டை பாரதம் நடத்தியது. ஆசிய விளையாட்டு மற்றும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் 100-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

அமிர்தப் பெருவிழாவின்போது, பாரதம் 21-ஆம் நூற்றாண்டிற்கான புதிய நாடாளுமன்ற கட்டிடத்தையும் பெற்றது. பெண்களுக்கு அதிகாரமளிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்டது. ஏற்றுமதி மற்றும் விவசாய உற்பத்தியில் பாரதம்  புதிய சாதனைகளைப் படைத்தது. இந்தக்  காலகட்டத்தில், வந்தே பாரத் ரயில்களின் வரலாறு காணாத விரிவாக்கம் ஏற்பட்டது. ரயில் நிலையங்களை மாற்றுவதற்கான அமிர்த பாரத ரயில் நிலைய இயக்கமும் தொடங்கப்பட்டது. நாட்டிற்கு முதல் பிராந்திய விரைவு ரயில், நமோ பாரத் கிடைத்தது. நாடு முழுவதும் 65,000  அமிர்த நீர்நிலைகள் உருவாக்கப்பட்டன. 

இன்று இந்த எம்.ஒய் பாரத் இயங்குதளத்தின் அறிமுகத்தை முன்னிட்டு, உங்கள்  செல்பேசியை எடுத்து, அதன் விளக்கை  இயக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். 

பாரத் மாதா கி- ஜெய்!

பாரத் மாதா கி- ஜெய்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

மிகவும் நன்றி!

****** 

ANU/SMB/BR/KV



(Release ID: 1974381) Visitor Counter : 80