பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
வளர்ந்த இந்தியா என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் வகையில் இந்திய பொது நிர்வாக நிறுவனம் செயல்படும்: மத்திய இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங்
Posted On:
31 OCT 2023 4:09PM by PIB Chennai
2047-ம் ஆண்டில் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் வகையில் இந்திய பொது நிர்வாக நிறுவனம் (ஐஐபிஏ) செயல்படும் என்று மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். புதுதில்லியில் இன்று நடைபெற்ற ஐஐபிஏ-வின் 69-வது வருடாந்திரக் கூட்டத்தில் பேசிய அவர், இந்த நிறுவனம் அரசு ஊழியர்களின் திறனை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது என்றார்.
ஐஐபிஏ தற்கால நடைமுறைகளுக்கு ஏற்ப தன்னை மறுசீரமைத்துக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார். ஐஜிஓடி தளத்தில் 500 க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கான பயிற்சித் தொகுப்பு வீடியோக்களை தயாரிப்பதற்கும் ஐஐபிஏ பங்களித்துள்ளது என்று அவர் தெரிவித்தார். மக்களுக்கு சேவைகளை வழங்குவதற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துமாறு அவர் வலியுறுத்தினார். நாடு முழுவதும் உள்ள ஐஐபிஏ-வின் பல்வேறு கிளைகள் வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை, மக்களை மையமாகக் கொண்ட நிர்வாகம் ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்வதாக அவர் கூறினார்.
கடந்த 9 ஆண்டுகளில், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், ஆட்சேர்ப்பு செயல்முறையில் முன்னோடி முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளது என அவர் தெரிவித்தார். 22 அட்டவணை மொழிகளிலும் வேலைவாய்ப்புத் தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் எனவே மொழித் தடைகளால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது என்றும் திரு ஜிதேந்திர சிங் கூறினார்.
*****
Release ID: 1973371
AD/PLM/KRS
(Release ID: 1973481)
Visitor Counter : 103