பிரதமர் அலுவலகம்
7-வது இந்திய மொபைல் மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்
நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு 100 '5ஜி பயன்பாட்டு ஆய்வகங்கள் வழங்கப்பட்டன
பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை தொழில்துறையினர் பாராட்டினர்
"எதிர்காலம் இங்கேயே இப்போதே உள்ளது"
"நமது இளைய தலைமுறை தொழில்நுட்பப் புரட்சியை வழிநடத்துகிறது"
" 5 ஜி கட்டமைப்பை விரிவுபடுத்துவது மட்டுமல்லாமல், 6 ஜி-யில் தலைமைத்துவ நாடாக இந்தியா மாறுவதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது"
"ஒவ்வொரு துறையிலும் ஜனநாயகமயமாக்கலின் சக்தியை நாங்கள் நம்புகிறோம்"
"மூலதனத்திற்கான அணுகல், வளங்களுக்கான அணுகல் மற்றும் தொழில்நுட்ப அணுகல் ஆகியவை அரசின் முன்னுரிமையாகும்"
"இந்தியாவின் குறைக்கடத்தி இயக்கம் அதன் உள்நாட்டு தேவைகளை மட்டுமல்லாமல் உலகளாவிய தேவைகளையும் பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் முன்னேறி வருகிறது"
"டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியில், இந்தியா எந்த வளர்ந்த நாட்டிற்கும் குறைந்த நிலையில் இல்லை"
"வளர்ந்து வரும் நாடு என்ற நிலையில் இருந்து வளர்ந்த நாடாக மாறுவதை விரைவுபடுத்தும் ஊக்கசக்தியே தொழில்நுட்பம்
"21 ஆம் நூற்றாண்டு இந்தியாவின் சிந்தனைத் தலைமையின் சகாப்தத்தைக் குறிக்கிறது"
Posted On:
27 OCT 2023 12:09PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 7-வது இந்தியா மொபைல் மாநாடு 2023-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (27.10.2023) தொடங்கி வைத்தார். இந்திய மொபைல் மாநாடு (ஐஎம்சி) என்பது ஆசியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு, ஊடக மற்றும் தொழில்நுட்பக் கூட்டமைப்பாகும். இந்த மாநாடு 2023 அக்டோபர் 27 முதல் 29 வரை 'உலகளாவிய டிஜிட்டல் கண்டுபிடிப்பு' என்ற கருப்பொருளுடன் நடைபெறுகிறது. ஐஎம்சி 2023 முக்கிய அதிநவீன தொழில்நுட்பங்களின் மேம்பாடு, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு 100 '5ஜி பயன்பாட்டு ஆய்வகங்களை பிரதமர் வழங்கினார்.
அரங்கம் 5-ல் கண்காட்சியை தொடங்கி வைத்த பிரதமர், அதைப் பார்வையிட்டார். தொழில்துறை தலைவர்களும் நிகழ்ச்சியில் பேசினர். ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் தலைவர் திரு ஆகாஷ் எம் அம்பானி, சமீபத்திய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் இளைய தலைமுறையினரின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான பிரதமரின் உறுதிப்பாட்டைப் பாராட்டினார். டிஜிட்டல் இந்தியா திட்டத்தை, உள்ளடக்கியதாகவும், புதுமையானதாகவும், நிலையானதாகவும் மாற்றுவதில் நாட்டில் உள்ள லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு பிரதமர் ஒரு உத்வேகம் அளிக்கிறார் என்று அவர் எடுத்துரைத்தார். ஜியோ, இந்தியாவின் அனைத்து 22 தொலைத்தொடர்பு பிரிவுகளிலும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட 5 ஜி கட்டமைப்புகளை நிறுவியுள்ளது என்று அவர் கூறினார்.
இது ஒட்டுமொத்த 5 ஜி விநியோகத்தில் 85 சதவீத பங்களிப்பை வழங்குகிறது என்றும், 5 ஜி தொகுப்பு வெளியீடு இந்திய திறமையாளர்களால் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார். 12.5 கோடி பயனர்களைக் கொண்ட முதல் 5 ஜி வசதி கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று என அவர் தெரிவித்தார். பிரதமர் திரு நரேந்திர மோடி, ஒட்டுமொத்த தேசத்தையும் ஒருங்கிணைத்து, ஜிஎஸ்டி, டிஜிட்டல் புரட்சி மற்றும் உலகின் மிக உயரமான சிலை ஆகிய பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பிரதமரின் முயற்சிகள் இந்தியா மொபைல் மாநாட்டில் அனைவரையும் ஊக்குவிக்கின்றன என்று அவர் தெரிவித்தார். அனைத்து டிஜிட்டல் தொழில்முனைவோர், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் சார்பாக, இந்தியாவின் அமிர்த கால கனவை நனவாக்க அவர் உறுதியளிப்பதாக திரு ஆகாஷ் அம்பானி கூறினார்.
பார்தி எண்டர்பிரைசஸ் தலைவர் திரு சுனில் பார்தி மிட்டல் பேசுகையில், பிரதமரின் டிஜிட்டல் இந்தியா தொலைநோக்குப் பார்வையை அவர் எடுத்துரைத்தார். இது டிஜிட்டல் உள்கட்டமைப்பை வேகமாக மேம்படுத்த வழிவகுத்தது என்றும், இதனால் ஏற்பட்ட மாற்றத்தை உலகம் கவனிக்கிறது என்றும் அவர் சுட்டிக் காட்டினார். இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (டிபிஐ) பல நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது என்று அவர் கூறினார். பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின் இரண்டாவது முக்கிய தூணாக மேக் இன் இந்தியா உள்ளது என்று கூறிய திரு மிட்டல், கடந்த ஒரு வருடத்தில் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைக் குறிப்பிட்டார். உற்பத்தியில் இந்தியா மிகவும் ஆழமான வேர்களை வளர்த்துள்ளது என்றும், ஆப்பிள் முதல் டிக்சன் வரை, சாம்சங் முதல் டாடா வரை, ஒவ்வொரு நிறுவனமும், சிறிய, பெரிய அல்லது புத்தொழில் போன்ற உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன என்றும் கூறினார். இந்தியா ஒரு உற்பத்தி நாடாக உருவெடுத்துள்ளது என்று தெரிவித்துள்ள அவர், டிஜிட்டல் உள்கட்டமைப்பில் பெரிய அளவிலான தலைமைத்துவ இடத்தில் இந்தியா உள்ளது என்றார். 5000 நகரங்கள் மற்றும் 20,000 கிராமங்களில் ஏர்டெல் 5 ஜி ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், மார்ச் 2024 க்குள் நாடு முழுவதையும் உள்ளடக்கும் வகையில், இது கொண்டு செல்லப்படும் என்றார். இது தொடர்பாக பிரதமர் விடுத்த அழைப்பை அவர் சுட்டிக்காட்டினார். இது உண்மையில் உலகின் மிக வேகமான 5 ஜி மாற்றமாக இருக்கும் என்று அவர் கூறினார்.
ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் திரு குமார் மங்கலம் பிர்லா பேசுகையில், இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தை முன்னெடுப்பதில் பிரதமரின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைக்கு நன்றி தெரிவித்தார். மேலும் அனைவருக்கும் நன்மைகள் உறுதி செய்யப்படும் அந்தியோதயா கோட்பாட்டில் வேரூன்றிய டிஜிட்டல் உள்ளடக்கத்திற்கான அவரது உறுதிப்பாட்டைப் பாராட்டினார். உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்ற டிஜிட்டல் பரிணாம வளர்ச்சியில் இந்தியாவின் வளர்ச்சிக்கு இந்த அணுகுமுறையே காரணம் என்று அவர் பாராட்டினார். பிரதமரின் தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்ட உலகளாவிய தென்பகுதி நாடுகளின் சாம்பியனாக இந்தியா உருவெடுத்துள்ளது என்று திரு பிர்லா கூறினார். டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துதல் மற்றும் தரவு மேலாண்மை ஆகியவற்றில் இந்தியா மிகப் பெரிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்த நடைமுறைகளை ஏற்க பல நாடுகள் ஆர்வமாக உள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பிரதமரின் தொலைநோக்கு பார்வையை அடைவதில் வோடபோன் ஐடியா ஒரு பொறுப்பான நிறுவனமாக செயல்பட உறுதிபூண்டுள்ளது என்று அவர் மீண்டும் எடுத்துரைத்தார். பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் 6 ஜி போன்ற துறைகளில் எதிர்கால தொழில்நுட்பங்களுக்கான தரநிலைகளை உருவாக்குவதில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். மேலும், அரசு அளித்த மகத்தான ஆதரவுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய திரு நரேந்திர மோடி, 21 ஆம் நூற்றாண்டின் மாறிவரும் காலங்களில், இந்த நிகழ்வு கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றும் சக்தியைக் கொண்டுள்ளது என்றார். தொழில்நுட்பத்தின் வேகத்தில் "எதிர்காலம் இங்கேயே இப்போதே உள்ளது என்று அவர் கூறினார். தொலைத்தொடர்பு, தொழில்நுட்பம் மற்றும் இணைப்புத் துறையில் எதிர்காலம் குறித்த பார்வைகளை வழங்குவதற்காக இதில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சியை அவர் பாராட்டினார். 6 ஜி, செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு, குறைக்கடத்திகள், ட்ரோன், விண்வெளித் துறைகள், ஆழ்கடல், பசுமை தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகளைக் குறிப்பிட்ட அவர், எதிர்காலம் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் எனவும் நமது இளைய தலைமுறை தொழில்நுட்பப் புரட்சியை வழிநடத்துவது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் கூறினார்.
கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 5ஜி அறிமுகம் உலக நாடுகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதை திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார். 5 ஜி வெற்றிக்குப் பிறகு இந்தியா அத்துடன் நிற்கவில்லை என்றும், அதை ஒவ்வொரு தனிநபரிடமும் கொண்டு செல்லும் பணியை மேற்கொண்டது என்றும் அவர் கூறினார். இந்தியா 5 ஜி அறிமுக கட்டத்திலிருந்து 5 ஜி சென்றடையும் கட்டத்திற்கு நகர்ந்தது என்று அவர் கூறினார். 5 ஜி அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வருடத்திற்குள், 97 சதவீதத்திற்கும் அதிகமான நகரங்கள் மற்றும் 80 சதவீதத்திற்கும் அதிகமான மக்களை உள்ளடக்கிய 4 லட்சம் 5 ஜி அடிப்படை நிலையங்களின் வளர்ச்சி குறித்து பிரதமர் குறிப்பிட்டார். சராசரி மொபைல் பிராட்பேண்ட் வேகத்தின் வேகம் ஒரு வருடத்தில் 3 மடங்கு அதிகரித்துள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். பிராட்பேண்ட் வேகத்தில் இந்தியா 118-வது இடத்தில் இருந்து 43-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது என்று அவர் கூறினார். நாட்டில் 5 ஜி கட்டமைப்பை விரிவுபடுத்துவது மட்டுமல்லாமல், 6 ஜி-யில் தலைமைத்துவ நாடாக மாறுவதற்கும் இந்தியா முக்கியத்துவம் அளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த ஊழலைச் சுட்டிக்காட்டிய பிரதமர், தற்போதைய அரசின் ஆட்சிக்காலத்தில் நடந்த 4ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் ஏதுமின்றி, நடைபெற்றதாக அவர் கூறினார். 6ஜி தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னிலை வகிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தரவரிசை மற்றும் எண்ணிக்கை வளர்ச்சிக்கு அப்பால், இணைய இணைப்பு மற்றும் வேகம் மேம்பட்ட வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது என்று அவர் கூறினார். கல்வி, மருத்துவம், சுற்றுலா மற்றும் விவசாயம் ஆகியவற்றில் மேம்பட்ட இணைப்பு மற்றும் வேகத்தின் நன்மைகளை அவர் விவரித்தார்.
ஜனநாயகமயமாக்கலின் சக்தியை நம்புவதாகவும், வளர்ச்சியின் பயன் ஒவ்வொரு பிரிவினருக்கும், பிராந்தியத்திற்கும் சென்றடைய வேண்டும் என்றும் அவர் கூறினார். இந்தியாவில் உள்ள வளங்களிலிருந்து அனைவரும் பயனடைய வேண்டும் என்று தெரிவித்த அவர், அனைவருக்கும் கண்ணியமான வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்றார். தொழில்நுட்பத்தின் பயன் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்று கூறிய அவர் இதற்காக அரசு வேகமாகச் செயல்பட்டு வருகிறது என்று கூறினார். தம்மைப் பொறுத்தவரை, இது மிகப்பெரிய சமூக நீதி, என்று அவர் மேலும் கூறினார். அவர் மேலும் கூறுகையில், மூலதனத்திற்கான அணுகல், வளங்களுக்கான அணுகல் மற்றும் தொழில்நுட்ப அணுகல் ஆகியவை அரசின் முன்னுரிமையாகும் என்று தெரிவித்தார். முத்ரா திட்டத்தின் கீழ் பிணையில்லா கடன்கள், கழிவறை வசதிகள் மற்றும் நேரடி பண பரிமாற்றம் ஆகியவை பொதுவான ஒரு விஷயத்தைக் கொண்டுள்ளன என்று அவர் தெரிவித்தார். இவை சாதாரண மக்களுக்கு முன்னர் கிடைக்காத நிலையில் தற்போது, இந்த வசதிகள் மக்களின் உரிமைகளை உறுதி செய்கின்றன என்று அவர் குறிப்பிட்டார். இந்த விஷயத்தில் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தின் பங்கை எடுத்துரைத்த அவர், சுமார் 2 லட்சம் கிராம பஞ்சாயத்துகளை பிராட்பேண்ட் உடன் இணைத்த பாரத் நெட் பற்றி குறிப்பிட்டார். 10,000 அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் சுமார் 75 லட்சம் குழந்தைகளுக்கு அதிநவீன தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்கின்றன என்று அவர் கூறினார்.
இன்று தொடங்கப்பட்டுள்ள 5 ஜி பயன்பாட்டு ஆய்வகங்கள் இதேபோன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த ஆய்வகங்கள் இளைஞர்களை பெரிய கனவு காணத் தூண்டுகின்றன என்றும், அவற்றை அடைவதற்கான நம்பிக்கையை அளிக்கின்றன என்றும் அவர் மேலும் கூறினார்.
கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் புத்தொழில் சூழல் அமைப்பு உலகில் தனக்கென ஒரு குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். "இந்தியா மிகக் குறைந்த காலத்தில் ஒரு நூற்றாண்டு யுனிகார்ன் நிறுவனங்களை உருவாக்கியுள்ளது. இப்போது உலகின் முதல் 3 புத்தொழில் சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றாக மாறியுள்ளது என்று திரு மோடி குறிப்பிட்டார். 2014-ம் ஆண்டுக்கு முன்பு வரை இந்தியாவில் சில நூறு புத்தொழில் நிறுவனங்கள் மட்டுமே இருந்ததாகவும், இன்று அந்த எண்ணிக்கை சுமார் ஒரு லட்சமாக உயர்ந்துள்ளதாகவும் பிரதமர் கூறினார். நாட்டில் புத்தொழில் நிறுவனங்களுக்கு வழிகாட்டுவதற்காக இந்திய மொபைல் மாநாட்டின் முன்முயற்சியான 'ஆஸ்பயர்' திட்டத்தைப் பற்றியும் பிரதமர் திரு நரேந்திர மோடி பேசினார். மேலும் இந்த நடவடிக்கை இந்திய இளைஞர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இத்துறையில் இந்தியாவின் பயணம் நினைவுகூரப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். காலாவதியான தொழில்நுட்பத்தால் ஏற்பட்ட சிரமங்களை நினைவு கூர்ந்த திரு நரேந்திர மோடி, கடந்த கால அரசுகளின் காலாவதியான நடைமுறைகளைச் சுட்டிக்காட்டினார். 2014-க்குப் பிறகு, மக்கள் காலாவதியான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை நிறுத்தினர் என்று அவர் தெரிவித்தார். இந்தியா மொபைல் போன்களை இறக்குமதி செய்யும் நாடாக இருந்த நிலையில் இன்று, இந்தியா உலகின் இரண்டாவது பெரிய மொபைல் உற்பத்தியாளராக மாறியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். முந்தைய அரசுகளின் பதவிக் காலத்தின் போது எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் தொலைநோக்குப் பார்வை இல்லாத நிலை இருந்ததாக கூறிய திரு நரேந்திர மோடி, இந்தியா இன்று சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை ஏற்றுமதி செய்து வருவதாகத் தெரிவித்தார். பிக்சல் போன்களை இந்தியாவில் தயாரிக்கப் போவதாக கூகுள் நிறுவனம் சமீபத்தில் அறிவித்ததையும் அவர் சுட்டிக் காட்டினார். சாம்சங் ஃபோல்ட் ஃபைவ் மற்றும் ஆப்பிள் ஐபோன் 15 ஆகியவை ஏற்கனவே இங்கு தயாரிக்கப்படுகின்றன என்று அவர் மேலும் கூறினார்.
மொபைல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் இந்த வெற்றியை மேலும் முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். தொழில்நுட்பச் சூழல் அமைப்பில் வன்பொருள் மற்றும் மென்பொருள் இரண்டின் வெற்றிக்கு, இந்தியாவில் ஒரு வலுவான குறைக்கடத்தி உற்பத்தித் துறையை உருவாக்குவது முக்கியம் என்று கூறிய அவர், குறைக்கடத்திகளின் வளர்ச்சிக்காக 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். தற்போது உலகெங்கிலும் உள்ள குறைக்கடத்தி நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுடன் இணைந்து குறைக்கடத்தி அசெம்பிளி மற்றும் சோதனை தொழிற்சாலைகளில் முதலீடு செய்கின்றன என்று அவர் தெரிவித்தார். இந்தியாவின் குறைக்கடத்தி இயக்கம் உள்நாட்டு தேவையை மட்டுமல்லாமல் உலகின் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கான தொலைநோக்கு பார்வையுடன் முன்னேறி வருகிறது என்று அவர் மேலும் கூறினார்.
ஒரு வளரும் நாட்டை வளர்ச்சியடையச் செய்யும் காரணிகளில் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில், இந்தியா எந்த வளர்ந்த நாட்டிற்கும் பின்தங்கிய நிலையில் இல்லை என்று கூறினார். பல்வேறு துறைகளை தொழில்நுட்பத்துடன் இணைப்பதற்கான முன்முயற்சிகளைப் பட்டியலிட்ட பிரதமர், சரக்குப் போக்குவரத்தில் பிரதமரின் விரைவு சக்தி, சுகாதாரத்தில் தேசிய சுகாதார இயக்கம் மற்றும் விவசாயத் துறையில் வேளாண் தொகுப்பு போன்ற தளங்களைக் குறிப்பிட்டார். அறிவியல் ஆராய்ச்சி, குவாண்டம் இயக்கம் மற்றும் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகியவற்றில் பெரும் முதலீடுகள், உள்நாட்டு வடிவமைப்புகள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டை ஊக்குவித்தல் ஆகியவற்றை அவர் குறிப்பிட்டார்.
இணையதள பாதுகாப்பு மற்றும் நெட்வொர்க் உள்கட்டமைப்பின் பாதுகாப்பு ஆகியவற்றின் முக்கிய அம்சம் குறித்து எடுத்துரைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜி 20 உச்சிமாநாட்டில் இணையதள பாதுகாப்பின் உலகளாவிய அச்சுறுத்தல்கள் குறித்த விவாதத்தை நினைவு கூர்ந்தார். இணையதளப் பாதுகாப்பில் முழு உற்பத்திச் சங்கிலியிலும் தற்சார்பு மிகவும் முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார். மதிப்பு சங்கிலியில் உள்ள அனைத்தும் வன்பொருள், மென்பொருள் அல்லது இணைப்பு எதுவாக இருந்தாலும் தேசிய அளவில் சொந்தமானதாக இருக்கும்போது பாதுகாப்பை பராமரிப்பது எளிது என்பதை சுட்டிக் காட்டினார். உலக ஜனநாயக சமூகங்களை பாதுகாப்பாக வைத்திருப்பது குறித்து இந்தியா மொபைல் மாநாட்டில் விவாதங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை திரு நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
கடந்த காலங்களில் புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதில் வாய்ப்புகளை இழந்ததாக பிரதமர் தெரிவித்தார். இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறை குறித்து குறிப்பிட்ட அவர், இதில் இந்தியா ஏற்கனவே தனது திறமையை வெளிப்படுத்தியது என்றார். 21 ஆம் நூற்றாண்டின் இந்த காலகட்டம் இந்தியாவின் சிந்தனைத் தலைமையின் காலம் என்று கூறிய திரு நரேந்திர மோடி, மற்றவர்கள் பின்பற்றக்கூடிய புதிய களங்களை உருவாக்குமாறு சிந்தனைத் தலைவர்களை வலியுறுத்தினார். இன்று டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறையில் உலகையே வழிநடத்தி வரும் யுபிஐ-யை அவர் உதாரணமாக எடுத்துரைத்தார். இந்தியாவில் இளைஞர்களின் சக்தியும், துடிப்பான ஜனநாயகத்தின் சக்தியும் உள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்திய மொபைல் மாநாட்டின் உறுப்பினர்கள், குறிப்பாக இளம் உறுப்பினர்கள் இந்த நோக்கத்துடன் முன்னேற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். வளர்ந்த இந்தியாவாக மாறுவதற்கான இலக்கை அடையும்போது, சிந்தனைத் தலைவர்களாக முன்னோக்கிச் செல்வதன் மூலம் அனைத்துத் துறைகளிலும் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டு வர முடியும் என்று கூறி பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், இணையமைச்சர் திரு தேவுசிங் சௌகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னணி
100 ‘5 ஜி ஆய்வகங்கள் முன்முயற்சி', இந்தியாவின் தனித்துவமான தேவைகள், உலகளாவிய தேவைகள் ஆகிய இரண்டையும் பூர்த்தி செய்யும் 5 ஜி பயன்பாடுகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம் 5ஜி தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய வாய்ப்புகளை அடைவதற்கான ஒரு முயற்சியாகும். இந்த தனித்துவமான முயற்சி கல்வி, வேளாண்மை, சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து போன்ற பல்வேறு சமூக பொருளாதாரத் துறைகளில் புதுமைகளை ஊக்குவிக்கும் மற்றும் 5ஜி தொழில்நுட்பத்தின் பயன்பாட்டில் நாட்டை முன்னணியில் கொண்டு செல்லும்.
நாட்டில் 6 ஜி-யில் கல்வி மற்றும் புத்தொழில் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கும் இந்த முன்முயற்சி ஒரு முக்கிய படியாகும். மிக முக்கியமாக, இந்த முன்முயற்சி தேசிய பாதுகாப்புக்கு முக்கியமான உள்நாட்டு தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான ஒரு படியாகும்.
இந்தியா மொபைல் மாநாடு ஆசியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு, ஊடக மற்றும் தொழில்நுட்ப அமைப்பாகும். இதன் மாநாடு 2023 அக்டோபர் 27 முதல் 29 வரை நடைபெறுகிறது. தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்தில் நாட்டின் சிறப்பான முன்னேற்றங்களை முன்னிலைப்படுத்தவும், குறிப்பிடத்தக்க அறிவிப்புகளைக் கொண்டு வரவும், புத்தொழில்கள் தங்கள் புதுமையான தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளைக் காட்சிப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்கவும் இந்த நிகழ்வு ஒரு தளமாக செயல்படும்.
'உலகளாவிய டிஜிட்டல் கண்டுபிடிப்பு' என்ற கருப்பொருளுடன், இந்திய மொபைல் மாநாடு 2023 முக்கிய அதிநவீன தொழில்நுட்பங்களின் மேம்பாட்டாளர், உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளராக நாட்டின் நிலையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மூன்று நாள் மாநாடு 5 ஜி, 6 ஜி, செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்களை முன்னிலைப்படுத்தும், குறைக்கடத்தி தொழில்துறை, பசுமை தொழில்நுட்பம், இணையதள பாதுகாப்பு போன்ற விவகாரங்கள் குறித்து விவாதிக்கும்.
இந்த ஆண்டு, இந்திய மொபைல் மாநாடு 'ஆஸ்பயர்' என்ற புத்தொழில் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இது புதிய தொழில்முனைவோர் முயற்சிகள் மற்றும் ஒத்துழைப்புகளை ஏற்படுத்தும் நோக்கத்துடன் புத்தொழில்கள், முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவப்பட்ட வணிகங்களுக்கு இடையிலான தொடர்புகளை வளர்க்கும்.
இம்மாநாட்டில் சுமார் 5000 தலைமைச் செயல் அதிகாரிகள் நிலையிலான பிரதிநிதிகள், 230 கண்காட்சியாளர்கள், 400 புத்தொழில் நிறுவனத்தினர், துறை சார்ந்தோர் உட்பட சுமார் 22 நாடுகளைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
-------
ANU/PKV/PLM/RS/KPG
(Release ID: 1971985)
Visitor Counter : 187
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam