பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

7-வது இந்திய மொபைல் மாநாடு 2023-ஐ பிரதமர் அக்டோபர் 27-ம் தேதி தொடங்கி வைக்கிறார்


நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு 100 '5 ஜி பயன்பாட்டு ஆய்வகங்களை’ பிரதமர் வழங்குகிறார்

100 ‘5ஜி ஆய்வகங்கள் முன்முயற்சி’ சமூகபொருளாதாரத் துறைகளில் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க 5 ஜி பயன்பாடுகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, நாட்டில் 6 ஜி- சுற்றுச்சூழல் அமைப்பைக் கட்டமைப்பதற்கான ஒரு முக்கிய படியாகும்.

இந்திய மொபைல் மாநாடு 2023 முக்கிய அதிநவீன தொழில்நுட்பங்களின் மேம்பாட்டாளர், உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளராக இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது

Posted On: 26 OCT 2023 2:25PM by PIB Chennai

புதுதில்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் 2023, அக்டோபர் 27 அன்று காலை 9:45 மணிக்கு 7 வது இந்திய மொபைல் மாநாடு 2023-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில், நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு 100 '5ஜி பயன்பாட்டு ஆய்வகங்களை பிரதமர் வழங்குகிறார். 100 '5 ஜி ஆய்வகங்கள்' முன்முயற்சியின் கீழ் இந்த ஆய்வகங்கள் உருவாக்கப்படுகின்றன.

100 ‘5 ஜி ஆய்வகங்கள் முன்முயற்சி', இந்தியாவின் தனித்துவமான தேவைகள், உலகளாவிய தேவைகள் ஆகிய இரண்டையும் பூர்த்தி செய்யும் 5 ஜி பயன்பாடுகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம் 5ஜி தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய வாய்ப்புகளை அடைவதற்கான ஒரு முயற்சியாகும். இந்த தனித்துவமான முயற்சி கல்வி, வேளாண்மை, சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து போன்ற பல்வேறு சமூக பொருளாதாரத் துறைகளில் புதுமைகளை ஊக்குவிக்கும் மற்றும் 5ஜி தொழில்நுட்பத்தின் பயன்பாட்டில் நாட்டை முன்னணியில் கொண்டு செல்லும்.

நாட்டில் 6 ஜி-யில் கல்வி மற்றும் புத்தொழில் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கும் இந்த முன்முயற்சி ஒரு முக்கிய படியாகும். மிக முக்கியமாக, இந்த முன்முயற்சி தேசிய பாதுகாப்புக்கு முக்கியமான உள்நாட்டு தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான ஒரு படியாகும்.

இந்தியா மொபைல் மாநாடு ஆசியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு, ஊடக மற்றும் தொழில்நுட்ப அமைப்பாகும். இது 2023 அக்டோபர் 27 முதல் 29 வரை நடைபெறும். தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்தில் நாட்டின் சிறப்பான முன்னேற்றங்களை முன்னிலைப்படுத்தவும், குறிப்பிடத்தக்க அறிவிப்புகளைக் கொண்டு வரவும், புத்தொழில்கள் தங்கள் புதுமையான தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளைக் காட்சிப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்கவும் இந்த நிகழ்வு ஒரு தளமாக செயல்படும்.

'உலகளாவிய டிஜிட்டல் கண்டுபிடிப்பு' என்ற கருப்பொருளுடன், இந்திய மொபைல் மாநாடு 2023 முக்கிய அதிநவீன தொழில்நுட்பங்களின் மேம்பாட்டாளர், உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளராக நாட்டின் நிலையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  மூன்று நாள் மாநாடு 5 ஜி, 6 ஜி, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) போன்ற தொழில்நுட்பங்களை முன்னிலைப்படுத்தும், செமிகண்டக்டர் தொழில்துறை, பசுமை தொழில்நுட்பம், இணையதள பாதுகாப்பு போன்ற விவகாரங்கள் குறித்து விவாதிக்கும்.

இந்த ஆண்டு, இந்திய மொபைல் மாநாடு 'ஆஸ்பயர்' என்ற புத்தொழில் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.   இது புதிய தொழில்முனைவோர் முயற்சிகள் மற்றும் ஒத்துழைப்புகளை ஏற்படுத்தும் நோக்கத்துடன் புத்தொழில்கள், முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவப்பட்ட வணிகங்களுக்கு இடையிலான தொடர்புகளை வளர்க்கும்.

இம்மாநாட்டில் சுமார் 5000 தலைமை நிர்வாக அதிகாரி நிலையிலான பிரதிநிதிகள், 230 கண்காட்சியாளர்கள், 400 புத்தொழில் நிறுவனங்கள், துறைச் சார்ந்தோர் உட்பட சுமார் 22 நாடுகளைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொள்வார்கள்.

***

ANU/SMB/IR/RS/KPG


(Release ID: 1971513) Visitor Counter : 188