சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
ஓடிடி ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கான புகைபிடித்தல் எச்சரிக்கைகளில் மத்திய அரசு சமரசம் செய்து கொண்டதாக கூறும் ஊடக செய்திகள் தவறானவை; மத்திய அரசு விளக்கம்
Posted On:
21 OCT 2023 4:40PM by PIB Chennai
அண்மையில் வெளியான பிரபல செய்தி வெளியீடு ஒன்றில் ஓடிடி (ஓவர்-தி-டாப்) ஸ்ட்ரீமிங் சேவைகளின் உள்ளடக்கத்தில் புகைபிடித்தல் எச்சரிக்கைகளைச் சேர்ப்பது குறித்து மத்திய அரசு "சங்கடமான சமரசத்தை" எட்டியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
அத்தகைய ஒப்பந்தத்தின் விளைவாக சில தளங்கள் குறைவான எச்சரிக்கைகளைத் தேர்ந்தெடுத்துள்ளன என்று அறிக்கை மேலும் கூறுகிறது. இந்த செய்தி தகவல் மற்றும் கூற்றுக்கள் தவறானவை, தவறாக வழிநடத்தப்பட்டவை மற்றும் தவறான உண்மைகளை அடிப்படையாகக் கொண்டவை.
பொது சுகாதாரத்தை முன்னுரிமைப் பிரச்சினையாகக் கருதி, இந்திய அரசு சிஓடிபி சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் தொடர்பான திரைப்பட விதிகளை ஓடிடி தளத்திற்கும் விரிவுபடுத்தியுள்ளது.
ஓடிடி விதிகள் 2023 செப்டம்பர் 1 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த விதிகளின் கீழ், இப்போது நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி + ஹாட்ஸ்டார், ஜியோ சினிமா, சோனி லிவ், ஏ.எல்.டி பாலாஜி, வூட் போன்ற அனைத்து ஓடிடி தளங்களும் புகையிலை எதிர்ப்பு சுகாதார புள்ளிகள், புகையிலை எதிர்ப்பு சுகாதார எச்சரிக்கையை ஒரு முக்கிய நிலையான செய்தியாகவும், புகையிலை பயன்பாட்டின் தீங்கு குறித்த ஆடியோ-விஷுவல் மறுப்பு ஆகியவற்றை விதிகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி காட்சிப்படுத்த வேண்டும்.
அரசின் இந்த நடவடிக்கையை பல்வேறு பொது சுகாதார அமைப்புகள் மற்றும் வல்லுநர்கள் பாராட்டி வருகின்றனர். ஓடிடியை புகையிலை கட்டுப்பாட்டு விதிகளின் கீழ் கொண்டு வந்ததன் மூலம், புகையிலை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் இந்தியா உலக அளவில் முன்னணியில் உள்ளது.
எனவே, இது தொடர்பாக வெளியான ஊடக அறிக்கை உண்மைக்கு மாறானது மற்றும் பொது சுகாதாரத்தை அதன் முன்னுரிமை கடமைகளில் ஒன்றாக மேம்படுத்துவதற்கான மத்திய அரசின் உறுதிப்பாட்டின் சரியான கருத்தை பிரதிபலிக்கவில்லை.
அனைத்து ஓடிடி தளங்களும் ஓடிடி விதிகள் 2023 இன் விதியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும், ஏனெனில் இது செப்டம்பர் 1, 2023 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த விதிகளில் எந்தவித சமரசமும் இல்லை, ஓடிடி விதிகள் 2023 க்கு இணங்காவிட்டால் அரசால் நடவடிக்கை எடுக்கப்படும்.
***
ANU/AD/PKV/DL
(Release ID: 1969759)
Visitor Counter : 128