ஜவுளித்துறை அமைச்சகம்

உலகளாவிய மெகா ஜவுளி கண்காட்சி நிகழ்வை நடத்த தொழில் அமைப்புகள் ஏற்பாடு - பாரத் டெக்ஸ் 2024- இந்தியாவில் ஜவுளி தொழிலின் எதிர்காலத்தை அறிமுகப்படுத்துகிறது

Posted On: 21 OCT 2023 2:11PM by PIB Chennai

உலகின் மிகப்பெரிய ஜவுளி கண்காட்சி நிகழ்வான பாரத் டெக்ஸ் 2024-ஐ ஏற்பாடு செய்த ஜவுளித் துறையின் தொழில்துறை அமைப்புகளின் முன்முயற்சிக்கு மத்திய ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் பாராட்டு தெரிவித்துள்ளார். தில்லி வாணிஜ்ய பவனில் இன்று நடைபெற்ற முன்னோட்ட நிகழ்ச்சிக்கு அவர் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய திரு கோயல், பாரத் டெக்ஸ் 2024 கண்காட்சி ஒரு நிகழ்வு மட்டுமல்ல, உலகளாவிய ஜவுளி சக்தியாக மாறுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாகும் என்று கூறினார். புதிய கண்டுபிடிப்புகள், ஒத்துழைப்பு மற்றும் மேக் இன் இந்தியா உணர்வை மையமாகக் கொண்ட இந்தக் கண்காட்சி இந்தியாவின் 5 எஃப் தொலைநோக்கு பார்வையின் உருவகமாகும்.  முழு உலகிற்கும் தயாரிப்புகளை இந்தியா உருவாக்குகிறது, இந்தியா இப்போது உலகளாவிய போட்டிக்கு அஞ்சவில்லை என்று அவர் கூறினார். உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட தங்கள் வணிக முத்திரைகளை  உருவாக்கவும், அதே நேரத்தில் இந்தியாவை  ஒரு முத்திரையாக  கட்டமைக்கவும் தொழில்துறையினரை அவர் வலியுறுத்தினார்.

பாரத் டெக்ஸ் 2024 எக்ஸ்போ, தொழில்துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்றும், உலகளாவிய ஜவுளித் துறையில் ஒரு முதிர்ந்த, போட்டி நிறைந்த உலகளாவிய ஆதார இடமாக இந்தியாவின் திறனை வெளிப்படுத்தும் என்றும் திரு கோயல் நம்பிக்கை தெரிவித்தார். கண்காட்சியை பார்வையாளர்களை ஈர்க்கக்கூடியதாக மாற்றுமாறு அவர் ஏற்பாட்டாளர்களைக் கேட்டுக்கொண்டார்.

ஜவுளித்துறை அமைச்சர் கண்காட்சி லோகோ, இணையதளம் மற்றும் வீடியோவையும் வெளியிட்டார். இந்தியாவின் உலகளாவிய பலங்கள், அதன் நிலைத்தன்மை முன்முயற்சிகள் மற்றும் மதிப்பு சங்கிலி முழுவதும் அதன் பலங்களை முன்னிலைப்படுத்த இந்த நிகழ்வைப் பயன்படுத்துமாறு தொழில்துறையை அவர் வலியுறுத்தினார்.

"பாரத் டெக்ஸ் 2024" 2024 பிப்ரவரி 26 முதல் 29 வரை புதுதில்லியில் நடைபெற உள்ளது. 40-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த கண்காட்சியாளர்கள் மற்றும் வாங்குபவர்களைக் கொண்ட இது உலக அளவில் மிகப்பெரிய ஜவுளி நிகழ்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாரத் டெக்ஸ் 2024 இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் ஜவுளி பாரம்பரியங்கள் முதல் சமீபத்திய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் வரை முழு ஜவுளி தொழில் மதிப்பு சங்கிலியின் விரிவான காட்சியாக இருக்கும். 40 நாடுகளைச் சேர்ந்த 1,000 க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் மற்றும் 30,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்களுடன், இந்த மெகா நிகழ்வில் அறிவுசார் அமர்வுகள், கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகள் ஆகியவை நடைபெறும்.

இந்நிகழ்ச்சியில் பேசிய ஜவுளி அமைச்சகத்தின் செயலாளர் திருமதி ரச்னா ஷா, ஜவுளித் தொழில் அதன் ஏற்றுமதியை அதிகரிக்க ஒரு பெரிய வாய்ப்பு உள்ளது, எனவே பாரத் டெக்ஸ் 2024 சரியான நேரத்தில் வருகிறது என்றார். இது வெறும் கண்காட்சியாக இல்லாமல், ஒரு அற்புதமான அனுபவமாக இருக்கும் என்று அவர் மேலும் கூறினார். இந்திய மற்றும் உலகளாவிய ஜவுளித் துறையைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களை ஒன்றிணைக்க இந்த கண்காட்சி ஒரு தனித்துவமான தளமாக இருக்கும் என்று அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தொழில் சங்கங்கள், ஜவுளித் துறைத் தலைவர்கள், அமைச்சகங்களைச் சேர்ந்த உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

பாரத் டெக்ஸ் 2024 எக்ஸ்போ பற்றிய கூடுதல் தகவல்களை www.bharat-tex.com என்ற தளத்தில் காணலாம்

***

ANU/PKV/DL



(Release ID: 1969695) Visitor Counter : 232