உள்துறை அமைச்சகம்

மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா, அக்டோபர் 21-ம் தேதி காவலர் நினைவு தினத்தையொட்டி, புதுதில்லியில் உள்ள தேசிய காவலர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்

Posted On: 20 OCT 2023 5:00PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, 21.10.2023 சனிக்கிழமையன்று தேசிய காவலர் நினைவு தினத்தையொட்டி புதுதில்லியில் உள்ள தேசிய காவலர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.

1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி லடாக்கின் ஹாட் ஸ்பிரிங்ஸ் என்ற இடத்தில் ஆயுதம் தாங்கிய சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 10 காவல்துறையினர் வீரமரணம் அடைந்தனர். அதை நினைவு கூரும் வகையில் பணியின் போது உயிரிழந்த அனைத்து காவல்துறையினரின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ம் தேதி காவலர் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. காவல்துறையினரின் தியாகங்கள், தேசிய பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் அவர்களின் பங்கு ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில், பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் உள்ள சாணக்கியபுரியில் அமைக்கப்பட்டுள்ள தேசிய காவலர் நினைவிடத்தை 2018-ம் ஆண்டு நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்த நினைவிடம் காவல்துறையினருக்கு தேசிய அடையாளம், பெருமை ஆகியவற்றை வழங்குகிறது. தங்கள் உயிரையும் பணயம் வைத்து தேசத்தைப் பாதுகாப்பதற்கான அவர்களின் உறுதிப்பாட்டை இது கெளரவிக்கிறது. இந்த காவலர் நினைவிடம் திங்கள்கிழமை தவிர அனைத்து நாட்களிலும் பொதுமக்களுக்கு திறந்திருக்கும்.

அக்டோபர் 21-ம் தேதி காவலர் நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்படும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் தேசிய காவலர் நினைவு தினத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முக்கிய விழாவில், பணியின் போது உயிர்த் தியாகம் செய்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. தில்லி காவல்துறையுடன் இணைந்து மத்திய ஆயுதக் காவல்படைகளின் கூட்டு அணிவகுப்பும் நடத்தப்படுகிறது. அதன் பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் உரையாற்றுகிறார்.

இந்த நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சி தூர்தர்ஷனில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

*******

 

ANU/AD/PLM/KPG



(Release ID: 1969511) Visitor Counter : 194