பிரதமர் அலுவலகம்
மகாராஷ்டிராவில் 511 பிரமோத் மகாஜன் கிராமிய திறன் மேம்பாட்டு மையங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்
"இந்த மையங்கள் நமது இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கான காரணிகளாக செயல்படும்"
"திறமையான இந்திய இளைஞர்களுக்கான தேவை உலகளவில் அதிகரித்து வருகிறது"
"இந்தியா தனக்காக மட்டுமல்ல, உலகிற்கு திறமையான நிபுணர்களை உருவாக்கி வருகிறது"
திறன் மேம்பாட்டின் அவசியத்தை உணர்ந்த அரசு, தனது சுய நிதி ஒதுக்கீடு மற்றும் பல திட்டங்களுடன் தனி அமைச்சகத்தை உருவாக்கியது
மத்திய அரசின் திறன் மேம்பாட்டு திட்டங்களால் ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின குடும்பங்கள் அதிக அளவில் பயனடைந்து வருகின்றன.
"மகளிர் கல்வி மற்றும் பயிற்சிக்கு அரசு முக்கியத்துவம் அளிப்பதற்கு சாவித்ரி பாய்ஃபுலே உத்வேகம் அளித்துள்ளார்"
"பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் பாரம்பரிய கைவினைஞர்கள் மற்றும் கைவினைக் கலைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும்"
"தொழில்துறை 4.0 க்கு புதிய திறன்கள் தேவை"
"நாட்டின் பல்வேறு அரசுகள் தங்கள் திறன் மேம்பாட்டிற்கான எல்லையை மேலும் விரிவுபடுத்த வேண்டும்"
Posted On:
19 OCT 2023 5:46PM by PIB Chennai
மகாராஷ்டிராவில் 511 பிரமோத் மகாஜன் கிராமிய திறன் மேம்பாட்டு மையங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார். மகாராஷ்டிராவின் 34 கிராமப்புற மாவட்டங்களில் நிறுவப்பட்டுள்ள இந்த மையங்கள் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக பல்வேறு துறைகளில் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டங்களை நடத்தும்.
நவராத்திரியின் 5-வது நாள் ஸ்கந்த மாதாவை வணங்குவதாகக் கூறி பிரதமர் தனது உரையைத் தொடங்கினார். ஒவ்வொரு தாயும் தங்கள் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியும், வெற்றியும் கிடைக்க வேண்டும் என்று விரும்புவதாகக் குறிப்பிட்ட பிரதமர், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டின் மூலம் மட்டுமே இது சாத்தியமாகும் என்பதை சுட்டிக் காட்டினார். மகாராஷ்டிராவில் 511 பிரமோத் மகாஜன் கிராமிய திறன் மேம்பாட்டு மையங்கள் நிறுவப்பட்டிருப்பது குறித்து பேசிய பிரதமர், இது மில்லியன் கணக்கான இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்கான ஒரு பெரிய படியாகும் என்றும் இந்த நாளை மறக்க முடியாத ஒன்றாக மாற்றுகிறது என்றும் குறிப்பிட்டார்.
திறன் வாய்ந்த இந்திய இளைஞர்களின் தேவை உலகளவில் அதிகரித்து வருவதாக பிரதமர் கூறினார். பல நாடுகளின் மக்கள் தொகையில் வயது வரம்பு அதிகரித்து வருவதைக் குறிப்பிட்ட பிரதமர், சுமார் 40 லட்சம் திறமையான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க 16 நாடுகள் திட்டமிட்டுள்ளதாகக் கூறும் ஒரு ஆய்வைக் குறிப்பிட்டார். "இந்தியா தனக்காக மட்டுமல்லாமல், உலகிற்கும் திறமையான நிபுணர்களை தயார் செய்து வருகிறது" என்று பிரதமர் கூறினார். மகாராஷ்டிராவில் உள்ள திறன் மையங்கள் உள்ளூர் இளைஞர்களை உலகளாவிய வேலைகளுக்கு தயார்படுத்தும் என்றும், கட்டுமானம், நவீன வேளாண்மை, ஊடகம், பொழுதுபோக்கு, மின்னணுவியல் ஆகியவற்றில் அவர்களுக்கு திறன் அளிக்கும் என்றும் அவர் கூறினார். அடிப்படை வெளிநாட்டு மொழித் திறன்கள், மொழி விளக்கத்திற்கான செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்துதல் போன்ற மென்திறன்களில் பயிற்சி அளிக்க வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.
கடந்த அரசுகள் திறன் மேம்பாட்டில் தொலைநோக்குப் பார்வையும் தீவிரமும் கொண்டிருக்கவில்லை என்றும், இதன் விளைவாக இலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு திறன்களின் பற்றாக்குறை காரணமாக வேலை வாய்ப்புகள் குறைந்துவிட்டன என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். தற்போதைய அரசு திறன் மேம்பாட்டின் அவசியத்தை புரிந்துகொண்டு, தனக்கென ஒரு தனி அமைச்சகத்தை அதன் சுய வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடு மற்றும் பல திட்டங்களுடன் உருவாக்கியது என்பதை பிரதமர் சுட்டிக் காட்டினார். திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 1 கோடியே 30 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பல்வேறு துறைகளின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும், நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பிரதமரின் திறன் மேம்பாட்டு மையங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
சமூக நீதியை மேம்படுத்துவதில் திறன் மேம்பாட்டு முயற்சிகளின் பங்களிப்பை பிரதமர் சுட்டிக்காட்டினார். தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடி மக்களின் மேம்பாட்டிற்காக தொழில்மயமாக்கலில் கவனம் செலுத்திய பாபாசாகேப் அம்பேத்கரின் தத்துவத்தை பிரதமர் குறிப்பிட்டார். கடந்த காலங்களில் திறமையின்மை காரணமாக, இந்தப் பிரிவினர் தரமான வேலைகளைப் பெறுவதற்கான வாய்ப்பை இழந்தனர். அரசின் திறன் மேம்பாட்டு முயற்சிகளால் ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின குடும்பங்கள் அதிக பயன் பெறுகின்றன என்றார்.
பெண் கல்வி என்று வரும்போது சமூகத்தின் தடைகளை உடைப்பதில் சாவித்ரி பாய்ஃபுலேவின் பங்களிப்பை நினைவுகூர்ந்த பிரதமர், அறிவும் திறமையும் உள்ளவர்களால் மட்டுமே சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்று மீண்டும் வலியுறுத்தினார். பெண் கல்வி மற்றும் பயிற்சிக்கு அரசு முக்கியத்துவம் அளிப்பதன் பின்னணியில் சாவித்ரி பாய்ஃபுலே உத்வேகம் அளித்துள்ளார் என்று திரு. மோடி சுட்டிக்காட்டினார். மகளிருக்கு பயிற்சி அளிக்கும் சுய உதவிக் குழுக்கள் பற்றி குறிப்பிட்ட அவர், மகளிர் அதிகாரமளித்தல் திட்டத்தின் கீழ் 3 கோடிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார். வேளாண் நிலங்கள் மற்றும் பிற துறைகளில் ட்ரோன்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க பெண்களுக்கு பயிற்சியளிப்பதையும் அவர் குறிப்பிட்டார்.
கிராமங்களில் பாரம்பரியமாக முன்னெடுக்கப்பட்டு வரும் தொழில்கள் குறித்து பிரதமர் குறிப்பிட்டார். முடிதிருத்தும் தொழிலாளி, தச்சர், சலவைத் தொழிலாளி, பொற்கொல்லர் அல்லது இரும்புத் தொழிலாளி போன்ற தொழில்களுக்கு உதவுவதற்காக தொடங்கப்பட்ட பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் பற்றி அவர் பேசினார். இதன் கீழ், பயிற்சி, நவீன உபகரணங்கள் மற்றும் நிதி உதவிகள் வழங்கப்படுவதாக பிரதமர் தெரிவித்தார். இதற்காக அரசு 13,000 கோடி ரூபாய் செலவிடுகிறது, மகாராஷ்டிராவில், 500-க்கும் மேற்பட்ட திறன் மையங்கள் இதை மாநிலத்தில் முன்னெடுத்துச் செல்லும் என்றும் அவர் கூறினார்.
திறன் மேம்பாட்டிற்கான இந்த முயற்சிகளுக்கு மத்தியில், நாட்டை மேலும் வலுப்படுத்தும் வகையிலான திறன்களை மேம்படுத்த வேண்டிய துறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் கூறினார். இந்தியாவின் உற்பத்தித் துறையில் குறைபாடுகள் இல்லாத நல்ல தரமான தயாரிப்புகளின் தேவையை அவர் சுட்டிக்காட்டினார். மேலும் புதிய திறன்கள் தேவைப்படும் தொழில்துறை 4.0-யையும் குறிப்பிட்டார். சேவைத் துறை, அறிவுசார் பொருளாதாரம் மற்றும் நவீன தொழில்நுட்பம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு புதிய திறன்களை அரசுகள் வலியுறுத்த வேண்டும் என்று அவர் கூறினார். நாட்டை தற்சார்பை நோக்கி அழைத்துச் செல்லும் உற்பத்திக்கான தயாரிப்புகள் எவை என்பதைக் கண்டறியவும் பிரதமர் வலியுறுத்தினார். அத்தகைய தயாரிப்புகளை தயாரிக்கத் தேவையான திறன்களை நாம் ஊக்குவிக்க வேண்டும் என்று கூறினார்.
நாட்டின் வேளாண் துறைக்கு புதிய திறன்களின் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், பூமித் தாயைப் பாதுகாக்க இயற்கை வேளாண்மை முறையை வலியுறுத்தினார். சீரான நீர்ப்பாசனம், வேளாண் தயாரிப்பு செயலாக்கம், பொருட்கள் கட்டுமானம், வணிக அடையாளம் மற்றும் ஆன்லைன் உலகத்துடன் இணைக்க மக்களை திறன் படுத்துவதற்கான திறன்களின் தேவை குறித்து அவர் பேசினார். "நாட்டின் பல்வேறு அரசுகள் தங்கள் திறன் மேம்பாட்டிற்கான எல்லையை மேலும் விரிவுபடுத்த வேண்டும்" என்று பிரதமர் மோடி கூறினார்.
திறமைகள் மூலம், அவர்கள் தங்கள் குடும்பங்களுக்கும் நாட்டிற்கும் நிறைய பங்களிக்க முடியும் என்பதால் அவர்கள் சரியான பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்று பிரதமர் பயிற்சியாளர்களிடம் உறுதியளித்தார். பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க சிங்கப்பூரில் உள்ள திறன் மேம்பாட்டு மையத்திற்குச் சென்ற அனுபவத்தை பிரதமர் விவரித்தார். சிங்கப்பூர் பிரதமரின் பெருமிதத்தையும், இத்தகைய திறன் பயிற்சி நடவடிக்கைகள் எவ்வாறு சமூக அங்கீகாரத்தைப் பெற்றன என்பதையும் பிரதமர் நினைவு கூர்ந்தார். உழைப்பின் கண்ணியத்தை அங்கீகரிப்பதும், திறமையான வேலையின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதும் சமூகத்தின் கடமை என்று பிரதமர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர்கள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னணி வண்ணம்
கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதற்காக கிராமிய திறன் மேம்பாட்டு மையங்கள் பல்வேறு துறைகளில் அதற்கானப் பயிற்சிகளை நடத்தும். ஒவ்வொரு மையமும் குறைந்தது இரண்டு தொழிற்கல்வி படிப்புகளில் சுமார் 100 இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும். இப்பயிற்சியை தேசிய திறன் மேம்பாட்டு கவுன்சிலின் கீழ் உள்ள தொழில் கூட்டாளிகள் மற்றும் முகமைகள் வழங்கும். இந்த மையங்களை நிறுவுவதன் மூலம் இப்பகுதி மிகவும் திறமையான மனிதவளத்தை வளர்ப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைய உதவும்.
***
(Release ID:1969135)
ANU/AD/IR/KPG/KRS
(Release ID: 1969186)
Visitor Counter : 183
Read this release in:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada