இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

மும்பையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர்களுடன் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் சந்திப்பு

Posted On: 16 OCT 2023 3:10PM by PIB Chennai

மும்பையில் நடைபெறும் இந்திய ஒலிம்பிக் கமிட்டியின் (ஐ.ஓ.சி.) 141-வது கூட்டத்துக்கு முன்னதாக, பல்வேறு நாடுகளின் ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர்களுடன் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை  அமைச்சர்  திரு அனுராக் தாக்கூர், அக்டோபர் 13 மற்றும் 14-ம் தேதிகளில் ஆலோசனை நடத்தினார். மும்பையில் 2023 அக்டோபர் 15ம் தேதி  தொடங்கிய ஐஓசி அமர்வு 17ம் தேதி வரை நடைபெறுகிறது.

ஐஓசி கூட்டம் தொடங்குவதற்கு முன், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் சனிக்கிழமை (அக்டோபர் 14, 2023) சர்வதேச அளவிலான விளையாட்டுக் கூட்டமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் ஐ.ஓ.சி. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பயிற்சி முறைகள், உபகரணங்கள், டிஜிட்டல் முறை போன்றவற்றில்  ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து அவர்களுடன் அமைச்சர் பேச்சு நடத்தினார்.

சர்வதேசத் தடகள சம்மேளனத்தின் தலைவர் திரு லார்ட் செபாஸ்டியன் கோ, உலக ரோயிங் சம்மேளனத்தின் தலைவர் திரு ஜீன்-கிறிஸ்டோப் ரோலண்ட் ஆகியோரை மத்திய அமைச்சர் மும்பையில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். ஐஓசி தலைவர் திரு தாமஸ் பாச், ஐஓசி துணைத் தலைவர் திரு ஜுவான் அன்டோனியோ, சர்வதேச பாராலிம்பிக் குழுவின் தலைவர் திரு ஆண்ட்ரூ பார்சன், தேசிய ஒலிம்பிக் குழுக்களின் சங்கப் பொதுச் செயலாளர் திரு குணிலா லிண்ட்பெர்க், ஐஓசி உறுப்பினரும் எதிர்கால விளையாட்டு ஆணையத்தின் தலைவருமான திரு கோலிண்டா கிராபர்-கிடாரோவிக், சர்வதேச ஹாக்கி சம்மேளனத் தலைவர் திரு தயாப் இக்ரம், சர்வதேச சைக்கிள் ஓட்டுதல் சம்மேளனத்தின் தலைவர் திரு டேவிட் லாப்பெர்டியன்ட், உலக ஊக்கமருந்து தடுப்பு முகமையின் தலைவர் திரு வில்டோல்ட் பாங்கா ஆகியோரை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் சனிக்கிழமையன்று சந்தித்தார். மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் ஒலிம்பிக் மற்றும் தடகள வீரரும், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவருமான பி.டி.உஷாவும் இந்த இருதரப்பு சந்திப்புகளில் கலந்து கொண்டார்.

ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்திய மத்திய அமைச்சர், ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்த்தால், உலகெங்கிலும் உள்ள அரசுகள் இந்த விளையாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்யும் என்று கூறினார். எனவே, இதுபோன்ற முடிவு கிரிக்கெட்டிற்கான விளையாட்டு உள்கட்டமைப்பை உருவாக்க உதவும் என்று அவர் தெரிவித்தார். இந்தியாவை விளையாட்டுத் துறையில் வல்லரசாக மாற்ற வேண்டும் என்பது பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை என அவர் குறிப்பிட்டார். நாட்டில் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.3000 கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்று அவர் தெரிவித்தார்.

141-வது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) மாநாட்டைப் பிரதமர் திரு நரேந்திர மோடி மும்பையில் சனிக்கிழமை தொடங்கி வைத்தார். விளையாட்டு தொடர்பான பல்வேறு தரப்பினரிடையே கலந்துரையாடல் மற்றும் அறிவுப் பகிர்வுக்கான வாய்ப்பை இந்த அமர்வு வழங்குகிறது. 141 வது ஐஓசி அமர்வில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாச் மற்றும் பிற ஐஓசி உறுப்பினர்கள், முக்கிய இந்திய விளையாட்டு பிரமுகர்கள் மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு கூட்டமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

***

SMB/ANU/PLM/RS/KPG



(Release ID: 1968169) Visitor Counter : 108