சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா அஸ்ஸாமில் பல்வேறு சுகாதார உள்கட்டமைப்பு திட்டங்களைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்


சுகாதார உள்கட்டமைப்புத் திட்டங்கள் வட்டார, மாவட்ட, பிராந்திய அளவில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டும்: திரு மன்சுக் மாண்டவியா

Posted On: 15 OCT 2023 6:35PM by PIB Chennai

தொற்று பாதிப்புகளை எதிர்கொள்வதில் மீட்சித் திறனை உறுதி செய்து, நாட்டின் தொலைதூரப் பகுதிகளிலும் சுகாதார சேவைகளைத் திறம்பட வழங்கும் வகையில் சுகாதார அமைப்புகளைத் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். 

பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கம் (பி.எம்-அபிம்), தேசிய சுகாதார இயக்கம் (என்.எச்.எம்) மற்றும் பதினைந்தாவது நிதி ஆணையத்தின் சுகாதார மானியத் திட்டங்களின் கீழ் அஸ்ஸாம் மாநிலத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு சுகாதார உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு இன்று (15-10-2023) அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய திரு மன்சுக் மாண்டவியா, ஆரோக்கியமான சமூகம் என்பது பிரதமர் திரு நரேந்திர மோடியின் கனவு என்று கூறினார்.  ஆரோக்கியமான சமூகம் ஒரு ஆரோக்கியமான தேசத்தை உருவாக்குகிறது என்றும் அது வளமான நாட்டிற்கு அடித்தளமிடுகிறது என்றும் அவர் தெரிவித்தார். எந்தவொரு சுகாதார அவசரநிலையையும் சமாளிக்க மன உறுதியுடன் சுகாதார அமைப்புகளை உருவாக்க இந்தியா முயற்சிக்கிறது என அவர் தெரிவித்தார்.

வலுவான சுகாதார உள்கட்டமைப்பின் மூலம் சுகாதார சேவைகளை மலிவானதாகவும் அனைவரும் எளிதில் அணுகக்கூடியதாகவும் மாற்ற வேண்டும் என்று அவர் கூறினார். இதற்கு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை சுட்டிக் காட்டிய சுகாதார உள்கட்டமைப்பு நமது நாட்டிற்குள் நுழையும் எந்தவொரு புதிய நோயையும் திறம்பட கண்காணித்துத் தடுக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றார். இதற்கு அந்த கட்டமைப்புகளை வட்டார, மாவட்ட, பிராந்திய மட்டங்களில் ஒருங்கிணைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

மற்ற நாடுகளிலிருந்து வேறுபட்டு, இந்தியா நான்கு அடுக்கு சுகாதார அமைப்புகளைக் கொண்டுள்ளது என அவர் தெரிவித்தார். இது அடிமட்டத்திலிருந்து ஆரம்ப, இரண்டாம் நிலை முதல் மூன்றாம் நிலை வரை செயல்படுகிறது எனவும் இதில் 1,66,000 சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்கள் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ளன என்றும் திரு மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

அஸ்ஸாம் மாநில சுகாதார அமைச்சர் திரு கேஷப் மஹந்தா உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.  மத்திய பெட்ரோலியம் மற்றும் தொழிலாளர் நலத் துறை இணையமைச்சர் திரு ராமேஷ்வர் தெலி காணொலி மூலம் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

***

ANU/AD/PLM/DL


(Release ID: 1967952)