மத்திய அமைச்சரவை
azadi ka amrit mahotsav

லித்தியம், நியோபியம், அரிய புவி தனிமங்கள் (ஆர்.இ.இ) ஆகிய மூன்று முக்கிய கனிமங்களை சுரங்கம் தோண்டி எடுப்பதற்கான உரிமைத்தொகை விகிதங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

Posted On: 11 OCT 2023 3:21PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், லித்தியம், நியோபியம், அரிய புவி தனிமங்கள் (ஆர்.இ.இ) ஆகிய 3 முக்கிய  கனிமங்களைத் தோண்டி எடுப்பதற்கான உரிமைத்தொகை விகிதத்தை நிர்ணயிப்பதற்காக சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957-ன் இரண்டாவது அட்டவணையில் திருத்தம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.

சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம், 2023  அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது, இது 2023 ஆகஸ்ட் 17 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. லித்தியம், நியோபியம் உள்ளிட்ட 6 கனிமங்களை அணுக் கனிமங்கள் பட்டியலில் இருந்து நீக்கி, இந்தக் கனிமங்களுக்கான சலுகைகளைத் தனியாருக்கு ஏலம் மூலம் வழங்க இந்த சட்டத் திருத்தம் வழிவகுக்கிறது. மேலும், லித்தியம், நியோபியம், மற்றும் ஆர்.இ.இ (யுரேனியம் மற்றும் தோரியம் இல்லாதவை) உள்ளிட்ட 24 முக்கிய கனிமங்களின் (சட்டத்தின் முதல் அட்டவணையின் பகுதி டி இல் பட்டியலிடப்பட்டுள்ளன) சுரங்க குத்தகை மற்றும் கலப்பு உரிமத்தை மத்திய அரசு ஏலம் விட இந்தத் திருத்தம் வழிவகுத்துள்ளது.

உரிமைத்தொகை விகிதத்தை வரையறுக்க மத்திய அமைச்சரவையின் இன்றைய ஒப்புதல், லித்தியம், நியோபியம் மற்றும் ஆர்.இ.இ.களுக்கான தொகுதிகளை ஏலம் விட நாட்டிலேயே முதல் முறையாக மத்திய அரசுக்கு உதவும். கனிமங்கள் மீதான உரிமைத்தொகை விகிதம் என்பது பிளாக்குகளை ஏலத்தில் எடுப்பவர்களுக்கு ஒரு முக்கியமான நிதி அம்சமாகும். மேலும், இந்தக் கனிமங்களின் சராசரி விற்பனை விலையை (ஏஎஸ்பி) கணக்கிடுவதற்கான வழிமுறையும் சுரங்க அமைச்சகத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது, இது ஏல அளவுருக்களை தீர்மானிக்க உதவும்.

எம்.எம்.டி.ஆர் சட்டத்தின் இரண்டாவது அட்டவணை பல்வேறு கனிமங்களுக்கு உரிமைத்தொகை விகிதங்களை வழங்குகிறது. லித்தியம், நியோபியம் ஆர்.இ.இ ஆகியவற்றின் நியாயமான உரிமைத்தொகை விகிதத்தைப் பின்வருமாறு குறிப்பிட முடிவு செய்யப்பட்டுள்ளது:

  1. லித்தியம் அடிப்படை உலோகப் பரிமாற்ற விலையில் 3%,
  2. நியோபியம் - சராசரி விற்பனை விலையில் 3% (முதன்மை  மற்றும் இரண்டாம் நிலை மூலங்களுக்கு),
  3. ஆர்இஇ - அரிய புவி ஆக்சைடின் சராசரி விற்பனை விலையில்  1%

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், தேசியப் பாதுகாப்பிற்கும் முக்கிய கனிமங்கள் இன்றியமையாதவையாக மாறியுள்ளன. 2070 ஆம் ஆண்டிற்குள் எரிசக்தி மாற்றம் மற்றும் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டைக் கருத்தில் கொண்டு லித்தியம், ஆர்.இ.இ போன்ற முக்கிய கனிமங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. 

***

ANU/SMB/PKV/AG/KPG


(Release ID: 1966770) Visitor Counter : 243