பிரதமர் அலுவலகம்
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
Posted On:
05 OCT 2023 1:03PM by PIB Chennai
ராஜஸ்தானின் வளர்ச்சிக்காக கடந்த 9 ஆண்டுகளில் எங்கள் தொடர்ச்சியான முயற்சிகள் தெளிவாக வெளிப்பட்டுள்ளன.
நண்பர்களே,
நமது நாட்டின் வீரம், செழிப்பு மற்றும் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் பண்டைய பாரதத்தின் பெருமையின் காட்சிகளைக் காணக்கூடிய மாநிலம் ராஜஸ்தான். சமீபத்தில், ஜோத்பூரில் நடந்த ஜி20 உச்சி மாநாடு உலகளாவிய விருந்தினர்களின் பாராட்டைப் பெற்றது. அவர்கள் நம் நாட்டின் குடிமக்களாக இருந்தாலும் சரி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளாக இருந்தாலும் சரி, அனைவரும் சூரியநகரமான ஜோத்பூருக்கு ஒரு முறையாவது செல்ல விரும்புகிறார்கள். மெஹ்ரான்கர் மற்றும் ஜஸ்வந்த் தாடாவின் மணற்பாங்கான நிலப்பரப்புகளை ஆராய்வதற்கான விருப்பமும், உள்ளூர் கைவினைப்பொருட்களுக்கான ஆர்வமும் வெளிப்படுகிறது.
எனவே, பாரதத்தின் பெருமைமிக்க கடந்த காலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ராஜஸ்தான், பாரதத்தின் எதிர்காலத்தையும் அடையாளப்படுத்துவது முக்கியம். மேவார் முதல் மார்வார் வரை ஒட்டுமொத்த ராஜஸ்தானும் வளர்ச்சியின் உச்சத்தைத் தொட்டு, நவீன உள்கட்டமைப்பை உருவாக்கும்போது மட்டுமே இது சாத்தியமாகும்.
பிகானேரில் இருந்து ஜெய்சல்மர் வரையிலான ஜோத்பூரை இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலை ராஜஸ்தானின் நவீன மற்றும் உயர் தொழில்நுட்ப உள்கட்டமைப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டு. இந்திய அரசு இன்று ராஜஸ்தானில் ஒவ்வொரு துறையிலும் ரயில் மற்றும் சாலை உட்பட அனைத்து திசைகளிலும் வேகமாக செயல்பட்டு வருகிறது.
ராஜஸ்தானில் ரயில்வே வளர்ச்சிக்கு இந்த ஆண்டில் மட்டும் சுமார் 9,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் முந்தைய அரசின் வருடாந்திர சராசரி பட்ஜெட்டை விட கிட்டத்தட்ட 14 மடங்கு அதிகமாகும். நான் அரசியல் ரீதியாக பேசவில்லை; நான் உண்மைத் தகவல்களைத் தருகிறேன், இல்லையெனில் ஊடகங்கள் "மோடியின் பெரிய தாக்குதல்" என்று எழுதுவார்கள். சுதந்திரத்திற்குப் பிறகு 2014 வரையிலான தசாப்தங்களில், ராஜஸ்தானில் சுமார் 600 கிலோமீட்டர் ரயில் பாதைகள் மட்டுமே மின்மயமாக்கப்பட்டன.
கடந்த 9 ஆண்டுகளில், 3,700 கிலோ மீட்டருக்கும் அதிகமான ரயில் பாதைகளுக்கு மின்மயமாக்கல் முடிக்கப்பட்டுள்ளது. டீசல் என்ஜின்களுக்கு பதிலாக மின்சார என்ஜின்கள் கொண்ட ரயில்கள் இனி இந்த தடங்களில் இயக்கப்படும். இது ராஜஸ்தானில் மாசுபாட்டைக் குறைப்பது மட்டுமல்லாமல், காற்றையும் சுத்தமாக வைத்திருக்கும்.
பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ், ராஜஸ்தானில் 80 க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களை நவீன வசதிகளுடன் மேம்படுத்தி வருகிறோம். வசதி படைத்தவர்கள் செல்லும் பல இடங்களில் அற்புதமான விமான நிலையங்களை உருவாக்கும் போக்கு இருந்தாலும், மோடியின் உலகம் வேறு. ஏழை அல்லது நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவர் செல்லும் ரயில் நிலையத்தை விமான நிலையத்தை விட சிறந்த வசதிகளைக் கொண்ட இடமாக மாற்றுவேன், இதில் நமது ஜோத்பூர் ரயில் நிலையமும் அடங்கும்.
சகோதர சகோதரிகளே,
இன்று, தொடங்கப்பட்ட சாலை மற்றும் ரயில் திட்டங்கள் இந்த வளர்ச்சி பிரச்சாரத்தை மேலும் துரிதப்படுத்தும். ரயில் பாதைகளை இரட்டிப்பாக்குவது பயண நேரத்தைக் குறைக்கும் மற்றும் வசதியை அதிகரிக்கும். ஜெய்சால்மர்-தில்லி எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் மார்வார்-காம்ப்ளி காட் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சில நாட்களுக்கு முன், வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து துவக்கி வைக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இன்று, மூன்று சாலை திட்டங்களுக்கும் இங்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ஜோத்பூர் மற்றும் உதய்பூர் விமான நிலையங்களில் புதிய பயணிகள் முனைய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. இந்த வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் இந்த பிராந்தியத்தின் உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்தும் மற்றும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும். ராஜஸ்தானில் சுற்றுலாத் துறைக்கு புத்துயிரூட்டவும் அவர்கள் பங்களிப்பார்கள்.
பொறுப்புத்துறப்பு: பிரதமர் இந்தியில் உரை நிகழ்த்தினார். இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு மட்டுமே.
***
(Release ID: 1964552)
ANU/PKV/BS/AG/KV
(Release ID: 1965182)
Visitor Counter : 115
Read this release in:
Malayalam
,
Kannada
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia