பாதுகாப்பு அமைச்சகம்

இந்தியா, பங்களாதேஷ் ராணுவங்கள் கூட்டுப் பயிற்சியைத் தொடங்கின

Posted On: 03 OCT 2023 3:21PM by PIB Chennai

மேகாலயா மாநிலம் உம்ரோயில் இந்தியா- பங்களாதேஷ் இடையே 11-ம் ஆண்டு கூட்டு ராணுவப் பயிற்சியான சம்ப்ரிதி 2023 அக்டோபர் 03-ம் தேதி தொடங்கியது. சுழற்சி அடிப்படையில் இரண்டு நாடுகளும் ஏற்பாடு செய்யும் இந்தப் பயிற்சி, அடிப்படையில் வலுவான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு முயற்சிகளை குறிக்கிறது. 2009 ஆம் ஆண்டில் அசாமின் ஜோர்ஹாட்டில் தொடங்கப்பட்ட இந்த பயிற்சி 2022 –ம் ஆண்டு வரை பத்து வெற்றிகரமான பயிற்சிகளை மேற்கொண்டுள்ளது.

14 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ள சம்ப்ரிதி- XI, இரு தரப்பிலிருந்தும் சுமார் 350 வீரர்களை ஈடுபடுத்தும். இந்தப் பயிற்சி இரு ராணுவங்களுக்கும் இடையிலான பரஸ்பர செயல்பாட்டை மேம்படுத்துதல், பயிற்சி உத்திகளை பகிர்தல் மற்றும் சிறந்த நடைமுறைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டுகிறது.

52 பங்களாதேஷ் தரைப்படை பிரிகேட் பிரிவின் கமாண்டர் பிரிகேடியர் ஜெனரல் முகமது மஃபிசுல் இஸ்லாம் ரஷீத் தலைமையில் 170 வீரர்கள் பங்களாதேஷ் குழுவில் இடம் பெற்று உள்ளனர். இந்தியப் படைப் பிரிவில் முக்கியமாக ராஜ்புத் ரெஜிமெண்ட் பட்டாலியனைச் சேர்ந்த வீரர்கள் உள்ளனர். மலைப் படைப்பிரிவு கமாண்டர் பிரிகேடியர் எஸ்.கே.ஆனந்த் இந்தியப் படையை வழிநடத்துகிறார். இந்தப் பயிற்சியில் பீரங்கிகள், பொறியாளர்கள் மற்றும் இரு தரப்பிலிருந்தும் சேவைகள் போன்ற பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த வீரர்களும் பங்கேற்கின்றனர்.

ஒவ்வொரு பிரிவிலிருந்தும் 20 அதிகாரிகள் கட்டளைப் பயிற்சியில் பங்கேற்பார்கள். இதைத் தொடர்ந்து களப்பயிற்சி நடைபெறும். பணயக்கைதிகளை மீட்பது, கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்துவது போன்ற பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான தொடர்ச்சியான கூட்டு உத்திச்சார்ந்த  பயிற்சிகளை களப்பயிற்சி உள்ளடக்கும். அசாம் மாநிலம் தர்ரங்காவில் உள்ள துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையத்தில்  2023 அக்டோபர் 14, 15 ஆகிய தேதிகளில் நிறைவு பயிற்சி ஒத்திகை நடைபெற உள்ளது.


 

***

AD/ANU/IR/RS/KPG(Release ID: 1963778) Visitor Counter : 127