பிரதமர் அலுவலகம்
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் ரூ.19,260 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் முடிவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
தில்லி-வதோதரா விரைவுச்சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 2.2 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளின் புதுமனை புகுவிழாவைத் தொடங்கிவைத்து பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
ஜல் ஜீவன் இயக்கத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் 9 சுகாதார மையங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
ஐ.ஐ.டி இந்தூரின் கல்விக் கட்டிடத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து இவ்வளாகத்தில் விடுதி மற்றும் பிற கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
இந்தூரில் பல்வகை ராணுவத் தளவாடப் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினார்
"குவாலியர் நிலம் ஒரு உத்வேகத்தை அளிக்கிறது"
"இரட்டை என்ஜின் என்றால் மத்திய பிரதேசத்தின் இரட்டை வளர்ச்சி"
"மத்திய பிரதேசத்தை இந்தியாவின் முதல் 3 மாநிலங்களுக்குள் கொண்டு செல்வதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது"
"பெண்களுக்கு அதிகாரமளித்தல் வாக்கு வங்கி என்பதை விட தேசிய மறுசீரமைப்பு மற்றும் தேசிய நலனுக்கான ஒ
Posted On:
02 OCT 2023 5:29PM by PIB Chennai
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் ரூ.19,260 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் முடிவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் . தில்லி-வதோதரா விரைவுச்சாலை அர்ப்பணிப்பு, பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 2.2 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளின் புதுமனை புகுவிழா, பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகள் அர்ப்பணிப்பு, ஜல் ஜீவன் இயக்கத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் 9 சுகாதார மையங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், ஐ.ஐ.டி இந்தூரின் கல்விக் கட்டிடத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தல், இவ்வளாகத்தில் விடுதி மற்றும் பிற கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், இந்தூரில் பல்வகை ராணுவத் தளவாடப் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டுதல் ஆகியவை இந்தத் திட்டங்களில் அடங்கும்.
இதற்கான கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், குவாலியர் நிலம் வீரம், சுயமரியாதை, பெருமை, இசை, சுவை, கடுகு ஆகியவற்றின் அடையாளமாகும் என்று குறிப்பிட்டார். நாட்டிற்கும், ஆயுதப்படைகளில் பணியாற்றுபவர்களுக்கும் இந்த நிலம் பல புரட்சியாளர்களை உருவாக்கியுள்ளது என்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். குவாலியர் நிலம் ஆளும் கட்சியின் கொள்கைகளையும் தலைமையையும் வடிவமைத்துள்ளது என்பதை வலியுறுத்திய அவர், ராஜமாதா விஜய ராஜே சிந்தியா, குஷாபாவ் தாக்ரே, அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோரின் எடுத்துக்காட்டுகளை முன்வைத்தார். "குவாலியர் நிலம் ஒரு உத்வேகத்தை அளிக்கிறது" என்று கூறிய பிரதமர், மண்ணின் மைந்தர்கள் நாட்டிற்காகத் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
இந்தத் தலைமுறை மக்களுக்கு சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், இந்தியாவை வளர்ச்சியுடனும், வளத்துடனும் மாற்றும் பொறுப்பு நிச்சயமாக நம்மிடம் உள்ளது என்று பிரதமர் கூறினார். அர்ப்பணிக்கப்பட்ட அல்லது அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்கள் பற்றி குறிப்பிட்ட பிரதமர், பல அரசுகளால் ஓர் ஆண்டில் இவற்றைக் கொண்டு வர முடியாததால் ஒரே நாளில் பல திட்டங்களை இந்த அரசு கொண்டு வருகிறது என்றார்.
தசரா, தீபாவளி மற்றும் தந்தேராஸுக்கு சற்று முன்னர், சுமார் 2 லட்சம் குடும்பங்கள் புதுமனை புகுவிழாவை நடத்தியிருப்பதாகவும் , போக்குவரத்துத் தொடர்புக்கான பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் பிரதமர் மோடி கூறினார். உஜ்ஜைனில் உள்ள விக்ரம் உத்யோக்புரி, பல்வகை ராணுவத்தளவாடப் பூங்கா ஆகியவை மத்திய பிரதேசத்தின் தொழில்துறை வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் என்று அவர் கூறினார். குவாலியர் ஐ.ஐ.டி.-யின் புதிய திட்டங்கள் பற்றியும் அவர் குறிப்பிட்டார். ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பின் கீழ் விதிஷா, பைதுல், கட்னி, புர்ஹான்பூர், நர்சிங்பூர், தாமோ, ஷாஜாபூர் ஆகிய இடங்களில் புதிய சுகாதார மையங்கள் அமைக்கப்படுவது குறித்து அவர் பேசினார்.
அனைத்து வளர்ச்சித் திட்டங்களுக்கும் இரட்டை எஞ்சின் அரசின் முயற்சிகளைப் பிரதமர் பாராட்டினார். தில்லியிலும் போபாலிலும் மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரே கொள்கைகளைக் கொண்ட அரசு இருக்கும்போது வளர்ச்சியின் வேகம் அதிகரிக்கிறது என்பதை அவர் சுட்டிக் காட்டினார். இதனால், மத்தியப் பிரதேச மக்கள் இரட்டை எஞ்சின் அரசை நம்புகிறார்கள் என்று பிரதமர் கூறினார். "இரட்டை எஞ்சின் என்றால் மத்தியப் பிரதேசத்தின் இரட்டை வளர்ச்சி" என்று திரு மோடி கூறினார்.
கடந்த சில ஆண்டுகளில், மத்தியப் பிரதேசத்தை பின்தங்கிய மாநிலம் என்பதிலிருந்து நாட்டின் முதல் 10 மாநிலங்களில் ஒன்றாக அரசு மாற்றியுள்ளது என்றும் "இங்கிருந்து" மத்தியப் பிரதேசத்தை இந்தியாவின் முதல் 3 மாநிலங்களுக்குள் கொண்டு செல்வதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது" என்றும் அவர் கூறினார். பொறுப்புள்ள குடிமகனாக அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், இதுவே மத்தியப் பிரதேசத்தை முதல் 3 மாநிலங்களின் இடத்திற்குக் கொண்டு செல்லும் என்றார்.
இந்தியாவில்தான் உலகம் தனது எதிர்காலத்தைப் பார்க்கிறது என்று பிரதமர் கூறினார். 10-வது இடத்தில் இருந்த இந்தியா வெறும் 9 ஆண்டுகளில் 5-வது பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளது. இந்தியாவின் காலத்தை நம்பாதவர்களை விமர்சித்த அவர், "அரசின் அடுத்த பதவிக்காலத்தில், இந்தியா உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களுக்குள் நுழையும் என்பது மோடியின் உத்தரவாதம்" என்று கூறினார்.
"ஏழைகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடி குடும்பங்களுக்கு சிறந்த வீடுகளை மோடி உறுதி செய்துள்ளார்" என்று பிரதமர் தெரிவித்தார். நாட்டில் இதுவரை 4 கோடி குடும்பங்களுக்கு சிறந்த வீடுகள் வழங்கப்பட்டுள்ளன என்றார். மத்தியப் பிரதேசத்தில், இதுவரை லட்சக்கணக்கான வீடுகள் ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றும், இன்றும் பல வீடுகள் திறக்கப்பட்டுள்ளன என்றும் பிரதமர் கூறினார். முந்தைய அரசை அம்பலப்படுத்திய பிரதமர், மோசடியான திட்டங்கள் மற்றும் ஏழைகளுக்கு வழங்கப்பட்ட மோசமான, தரமற்ற வீடுகள் குறித்து வருத்தம் தெரிவித்தார்.இதற்கு மாறாக, தற்போதைய அரசால் வழங்கப்பட்ட வீடுகள் பயனாளிகளின் தேவைகளுக்கு ஏற்ப நிர்மாணிக்கப்படுவதாகவும், தொழில்நுட்பத்தின் உதவியுடன் முன்னேற்றத்தை கண்காணித்த பின்னர் அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக பணம் செலுத்தப்படுவதாகவும் பிரதமர் கூறினார். வீடுகளில் கழிவறைகள், மின்சாரம், குழாய் நீர் இணைப்பு, உஜ்வாலா எரிவாயு இணைப்பு ஆகியவை உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். இன்றைய ஜல் ஜீவன் திட்டங்கள் குறித்துப் பேசிய பிரதமர், இந்த வீடுகளுக்குத் தண்ணீர் வழங்க இது உதவும் என்றார்.
இந்த வீடுகள், வீட்டில் உள்ள பெண்களின் பெயரில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார். இது கோடிக்கணக்கான சகோதரிகளை 'லட்சாதிபதி'யாக மாற்றியுள்ளது என்று பிரதமர் கூறினார். வீடுகளின் பெண் உரிமையாளர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.
"பெண்களுக்கு அதிகாரமளித்தல் வாக்கு வங்கி என்பதை விட தேசிய மறுசீரமைப்பு மற்றும் தேசிய நலனுக்கான ஒரு பணியாகும்" என்று பிரதமர் குறிப்பிட்டார். அண்மையில் நிறைவேற்றப்பட்ட 'மகளிர் இடஒதுக்கீடு மசோதா' பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், "மோடி உத்தரவாதம் என்பது அனைத்து உத்தரவாதங்களையும் நிறைவேற்றுவதற்கான உத்தரவாதத்தைக் குறிக்கிறது" என்றார். நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் மகளிர் சக்தியின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.
குவாலியர், சம்பல் ஆகியவை வாய்ப்புகளின் பூமியாக மாறி வருவதாகவும், இது முந்தைய அராஜகம், வளர்ச்சியின்மை, சமூக நீதி மீறல் ஆகியவற்றுக்குப் பிறகான அரசின் கடின உழைப்பின் விளைவாகும் என்றும் பிரதமர் கூறினார். எங்களால் பின்னோக்கிப் பார்க்க முடியாது என்றார்.
"நவீன உள்கட்டமைப்பு மற்றும் வலுவான சட்டம் ஒழுங்கு விவசாயிகளுக்கும் தொழில்துறைகளுக்கும் பயனளிக்கிறது" என்பதைப் பிரதமர் வலியுறுத்தினார், "அதே நேரத்தில் இரண்டு அமைப்புகளும் வளர்ச்சிக்கு எதிரான அரசின் முன் வீழ்ச்சியடைகின்றன." வளர்ச்சிக்கு எதிரான அரசு, குற்றங்கள் மற்றும் ஒருசாராரை திருப்திப்படுத்துவதற்கு வழிவகுக்கிறது. இதன் மூலம் குண்டர்கள், கிரிமினல்கள், கலவரக்காரர்கள் மற்றும் ஊழல்வாதிகளுக்கு சுதந்திரம் அளிக்கிறது, இது பெண்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிக்க வழிவகுக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். இதுபோன்ற, வளர்ச்சிக்கு எதிரான சக்திகளிடம் இருந்து மத்திய பிரதேச மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.
ஒடுக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அரசின் கொள்கை பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், "ஒவ்வொரு வர்க்கத்திற்கும் ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் வளர்ச்சியை வழங்க எங்கள் அரசு அர்ப்பணிப்புடன் உள்ளது. யாராலும் கவனிக்கப்படாதவர்களை மோடி கவனித்துக் கொள்கிறார், மோடி அவர்களை வணங்குகிறார். மாற்றுத் திறனாளிகளுக்கான நவீன உபகரணங்கள், பொதுவான சைகை மொழி மேம்பாடு போன்ற நடவடிக்கைகளை அவர் குறிப்பிட்டார். குவாலியரில் மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்கான புதிய விளையாட்டு மையம் இன்று திறக்கப்பட்டது. இதேபோல், பல தசாப்தங்களாகப் புறக்கணிக்கப்பட்ட சிறு விவசாயிகள் இப்போது கவனிக்கப்படுகிறார்கள். பிரதமர் கிசான் சம்மான் நிதி மூலம் நாட்டில் உள்ள ஒவ்வொரு சிறு விவசாயிகளின் கணக்குகளுக்கும் அரசு இதுவரை ரூ.28 ஆயிரத்தை அனுப்பியுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். நம் நாட்டில் 2.5 கோடி சிறு விவசாயிகள் சிறுதானியங்களைப் பயிரிடுகின்றனர். "முன்பெல்லாம் சிறு விவசாயிகள் சிறுதானியங்கள் பயிரிடுவதைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. இந்திய உணவுக்கு சிறுதானியத்தின் அடையாளத்தை வழங்கியது எங்கள் அரசுதான், அதை உலகெங்கிலும் உள்ள சந்தைகளுக்குக் கொண்டு செல்கிறது" என்று அவர் மேலும் கூறினார்.
குயவர், கொல்லர், பொற்கொல்லர், தையல் தொழிலாளி, சலவைத் தொழிலாளி, செருப்பு தைப்பவர், முடிதிருத்தும் தொழிலாளர் போன்றோர் பயனடையும் பிரதமர் விஸ்வகர்மா திட்டம் பற்றிப் பிரதமர் தொடர்ந்து பேசினார். சமூகத்தின் இந்தப் பிரிவினர் பின்தங்கியிருப்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், "அவர்களை முன்னோக்கிக் கொண்டு வர மோடி ஒரு பெரிய இயக்கத்தைத் தொடங்கியுள்ளார்" என்றார். அவர்களின் பயிற்சிக்கான செலவை அரசே ஏற்கும் என்றும், நவீன உபகரணங்களுக்கு ரூ.15,000 வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அவர்களுக்கு லட்சக்கணக்கில் மலிவான கடன்கள் வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். "விஸ்வகர்மாக்களின் கடனுக்கான உத்தரவாதத்தை மோடி அளித்துள்ளார்" என்று அவர் கூறினார்.
இரட்டை எஞ்சின் அரசின் எதிர்காலம் சார்ந்த அணுகுமுறையை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், மத்தியப் பிரதேசத்தை நாட்டின் சிறந்த மாநிலங்களுக்குக் கொண்டு வருவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், டாக்டர் வீரேந்திர குமார், ஜோதிராதித்ய சிந்தியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மத்தியப் பிரதேச அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னணி
நாடு முழுவதும் இணைப்பை அதிகரிப்பதற்கான மற்றொரு முயற்சியாக, சுமார் 11,895 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட தில்லி-வதோதரா விரைவுச்சாலையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். 1880 கோடி மதிப்பிலான 5 சாலை திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
ஒவ்வொருவருக்கும் சொந்த வீடு இருப்பதை உறுதி செய்வது பிரதமரின் தொடர்ச்சியான முயற்சியாகும். இந்தத் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 2.2 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளின் புதுமனைப் புகுவிழா பிரதமரால் தொடங்கப்பட்டது. பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் சுமார் ரூ.140 கோடி செலவில் கட்டப்பட்ட வீடுகளையும் அவர் அர்ப்பணித்தார்.
பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீரை வழங்குவது அரசின் முக்கிய கவனம் செலுத்தும் பகுதிகளில் ஒன்றாகும். இந்த நோக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், குவாலியர் மற்றும் ஷியோபூர் மாவட்டங்களில் ரூ.1530 கோடிக்கும் அதிக மதிப்புள்ள ஜல் ஜீவன் திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்தத் திட்டங்களால் இப்பகுதியில் உள்ள 720-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயனடையும்.
சுகாதார உள்கட்டமைப்பை மேலும் மேம்படுத்தும் ஒரு நடவடிக்கையாக, ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தின் கீழ் ஒன்பது சுகாதார மையங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார். ரூ.150 கோடிக்கு மேல் செலவில் அவை உருவாக்கப்படும்.
ஐ.ஐ.டி இந்தூரின் கல்விக் கட்டிடத்தை அர்ப்பணித்த பிரதமர், வளாகத்தில் விடுதி மற்றும் பிற கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், இந்தூரில் பல்வகை ராணுவத் தளவாடப் பூங்காவுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார். உஜ்ஜைனில் ஒருங்கிணைந்த தொழில் நகரியம், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பாட்டிலிங் ஆலை, குவாலியரில் அடல் பிஹாரி வாஜ்பாய் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் பயிற்சி மையம் ஆகியவற்றைத் தூண்டும் பல்வேறு திட்டங்களையும் அவர் அர்ப்பணித்தார்.
***
ANU/AD/SMB/DL
(Release ID: 1963432)
Visitor Counter : 134
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam