பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குஜராத்தின் சோட்டா உதய்ப்பூரில் உள்ள போடேலியில் ரூ.5,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார்


'திறன்மேம்பாட்டுப் பள்ளித்திட்டத்தின் கீழ் ரூ.4500 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி அர்ப்பணித்தார்

'வித்யா சமிக்சா கேந்திரா 2.0' மற்றும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

"எங்களைப் பொறுத்தவரை, ஏழைகளுக்கான வீடு என்பது வெறும் எண் மட்டுமல்ல, கண்ணியத்தை நிலைநாட்டும் ஒரு வசிப்பிடம்"

"பழங்குடிப் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்கும் அதே நேரத்தில் திறமையை ஊக்குவிப்பதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்"

"சோட்டா உதய்பூர் உட்பட முழு பழங்குடிப் பகுதியின் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளிடம் உங்கள் மகன் உங்கள் உரிமைகளை உறுதி செய்வதற்காக வந்துள்ளான் என்று சொல்ல நான் வந்துள்ளேன்" என்று கூறினார்

Posted On: 27 SEP 2023 3:45PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி, குஜராத்தின் சோட்டா உதய்பூர், போடேலியில் ரூ.5200 கோடிக்கும் அதிகமான திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார். திறன்மேம்பாட்டுப் பள்ளித் திட்டத்தின் கீழ் ரூ.4500 கோடிக்கும் அதிகமான பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் அர்ப்பணிப்பு, 'வித்யா சமிக்சா கேந்திரா 2.0' மற்றும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் ஆகியவை இதில் அடங்கும்.

பின்னர் உரையாற்றிய பிரதமர், இப்பகுதியுடனான தனது நீண்டகால உறவை நினைவு கூர்ந்தார். இன்று தொடங்கப்பட்ட திட்டங்கள் அல்லது அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்கள் குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். அவர் ஒரு செயலாளராகவும் இருந்த நாட்களையும், அந்தப் பகுதியின் கிராமங்களில் அவர் இருந்த காலத்தையும் நினைவு கூர்ந்தார். பார்வையாளர்களில் தெரிந்த பல முகங்களைப் பார்த்து அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அந்தப் பகுதியில் உள்ள பழங்குடி சமூகத்தின் சூழ்நிலைகள் மற்றும் வாழ்க்கையை அவர் மிகவும் நெருக்கமாக அறிந்திருப்பதாக அவர் கூறினார். அவர் அதிகாரப்பூர்வ பொறுப்புகளை ஏற்றபோது இப்பகுதி மற்றும் பிற பழங்குடி பகுதிகளை மேம்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டைப் பற்றி பார்வையாளர்களிடம் கூறினார். தனது பதவிக்காலத்தில் தொடங்கப்பட்ட பல திட்டங்களின் நேர்மறையான தாக்கத்தைக் கண்டு அவர் திருப்தி தெரிவித்தார். முதல் முறையாக பள்ளியைப் பார்த்த அந்தக் குழந்தைகள் இப்போது ஆசிரியர்களாகவும், பொறியாளர்களாகவும் வாழ்க்கையில் சிறப்பாகச் செயல்படுவதைப் பார்த்த மகிழ்ச்சியைப் பற்றி அவர் பேசினார்.

பள்ளிகள், சாலைகள், வீட்டுவசதி மற்றும் தண்ணீர் கிடைப்பது குறித்துப் பேசிய பிரதமர், சமூகத்தின் ஏழை மற்றும் நலிந்தப் பிரிவினரின் கண்ணியமான வாழ்க்கையின் அடிப்படை இவை என்றும் கூறினார். நாட்டில் ஏழைகளுக்காக 4 கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார். "எங்களைப் பொறுத்தவரை, ஏழைகளுக்கான வீடு என்பது வெறும் எண் மட்டுமல்ல, கண்ணியத்தை ஏற்படுத்துவதாகும்", என்று அவர் கூறினார். இந்த வீடுகளின் வடிவமைப்பு குறித்த முடிவு பயனாளிகளிடமே விடப்பட்டுள்ளது என்று கூறிய அவர், பெரும்பாலான வீடுகள் வீட்டின் மகளிர் பெயரில் உள்ளன என்ற உண்மையையும் அவர் குறிப்பிட்டார். அதேபோல், ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. நீர்வள இயக்கத்தின் கீழ், 10 கோடி புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். மாநிலத்தில் பணியாற்றியபோது கிடைத்த அனுபவம் தேசிய அளவிலும் பயனுள்ளதாக உள்ளது என்று அவர் பார்வையாளர்களிடம் கூறினார். நீங்கள்தான் என்னுடைய ஆசிரியர் என்று தெரிவித்தார்.

கல்வித் துறை குறித்துப் பேசிய பிரதமர், இன்றைய திட்டங்கள் குஜராத்தை முதலிடத்திற்கு கொண்டு வருவதற்கான ஒரு பெரிய முன்னெடுப்பு என்று கூறிய பிரதமர், முதலமைச்சர் திரு பூபேந்தர் படேலின் ஒட்டுமொத்த குழுவையும் பாராட்டினார். "திறன்மேம்பாட்டுப்பள்ளித் திட்டம் மற்றும் வித்யா சமிக்சா 2.0 ஆகியவை பள்ளியில் கல்வியில் சாதகமான விளைவை ஏற்படுத்தும்" என்று பிரதமர் மோடி கூறினார். வித்யா சமிக்சா கேந்திரங்கள் குறித்து உலக வங்கியின் தலைவருடனான தனது உரையாடல்களை நினைவுகூர்ந்த திரு. மோடி, இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் வித்யா சமிக்சா கேந்திரங்களை நிறுவுமாறு தலைவர் தன்னை வலியுறுத்தியதாகவும், இந்த உன்னத நோக்கத்திற்கு ஆதரவளிக்க உலக வங்கி தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இதுபோன்ற முயற்சிகள் திறமையான மாணவர்களுக்கும், வளங்கள் இல்லாதவர்களுக்கும் பெரிதும் பயனளிக்கும் என்று அவர் சுட்டிக் காட்டினார். "பழங்குடிப் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்கும் அதே நேரத்தில் திறமையை ஊக்குவிப்பதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்" என்று கூறினார்.

கடந்த 20 ஆண்டுகளாக கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் அரசு கவனம் செலுத்துவதை பிரதமர் எடுத்துரைத்தார். கடந்த 20 ஆண்டுகளுக்கு  முன்னர், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் பிற கல்வி வசதிகள் இல்லாதது பெரும் எண்ணிக்கையிலான இடைநிற்றலுக்கு வழிவகுத்தது என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். தாம் குஜராத் முதலமைச்சராக பதவியேற்றபோது மாநிலத்தின் பழங்குடிப் பகுதிகளில் அறிவியல் பள்ளி இல்லாதது குறித்து வருத்தம் தெரிவித்தார். "அரசு இந்நிலைமையை முற்றிலுமாக மாற்றியுள்ளது" என்று திரு மோடி கூறினார், கடந்த 20 ஆண்டுகளில் 2 லட்சம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர் மற்றும் 1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட வகுப்பறைகள் கட்டப்பட்டன. பழங்குடிப் பகுதிகளில், கடந்த 20 ஆண்டுகளாக அறிவியல், வணிகம் மற்றும் கலை நிறுவனங்களின் வளர்ந்து வரும் வலையமைப்பைக் கண்டுள்ளது என்று பிரதமர் வலியுறுத்தினார். பழங்குடிப் பகுதிகளில் 25,000 வகுப்பறைகள் மற்றும் 5 புதிய மருத்துவக் கல்லூரிகளை அரசு கட்டியுள்ளது என்று தெரிவித்த அவர், கோவிந்த் குரு பல்கலைக்கழகம் மற்றும் பிர்சா முண்டா பல்கலைக்கழகத்தை எடுத்துக்காட்டாகக் கூறினார். இந்த பிராந்தியங்களில் பல திறன் மேம்பாட்டு நிறுவனங்களும் அமைக்கப்பட்டுள்ளன என்று அவர் எடுத்துரைத்தார்.

புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்துப் பேசிய பிரதமர், தாய்மொழியில் கல்வி கற்பது பழங்குடி மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி அவர்களுக்கு அதிகாரமளிக்கும் என்றார். 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் மற்றும் ஏகலவ்யா உறைவிடப் பள்ளிகள் பழங்குடிப் பகுதிகளில் வாழ்க்கையை மாற்றியமைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். எஸ்.சி., எஸ்.டி., கல்வி உதவித்தொகை மாணவர்களுக்கு உதவுகிறது என்றும், நாட்டின் புத்தொழில் சுற்றுச்சூழல் அமைப்பில் பழங்குடி இளைஞர்களை ஊக்குவிப்பதே இந்த முயற்சி என்று பிரதமர் கூறினார். தொலைதூரப் பள்ளிகளில் அடல் ஆய்வகங்கள் பழங்குடி மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை உருவாக்கி வருகின்றன என்று குறிப்பிட்டார்.

இன்றைய உலகில் திறன்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், திறன் மேம்பாட்டு நிறுவனங்கள் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதை குறிப்பிட்டார். கோடிக்கணக்கான முதல் முறை தொழில்முனைவோரை உருவாக்கும் முத்ரா திட்டத்தின் கீழ் பிணையில்லா கடன்கள் குறித்தும் பிரதமர் மோடி பேசினார். வந்தன் கேந்திராக்கள் மாநிலத்தில் உள்ள லட்சக்கணக்கான பழங்குடி மக்களுக்கு பயனளிக்கின்றன. அவை பழங்குடிகளின் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்களுக்கான சிறப்பு விற்பனை நிலையங்கள் அவர் குறிப்பிட்டார்.

செப்டம்பர் 17 அன்று தொடங்கப்பட்ட பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் பற்றி பிரதமர் தெரிவித்தார். நய், தர்ஜி, தோபி, கும்ஹார், லோஹர், சுனார், சுதார், மலகார், மோச்சி, ராஜமிஸ்திரி போன்றவர்களுக்கு குறைந்த வட்டியில் கடன், கருவிகள் மற்றும் பயிற்சி கிடைக்கும் என்ற அவர் தெரிவித்தார். இந்த திறன்கள் மற்றும் பாரம்பரியங்களை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கான முயற்சி இது என்று அவர் கூறினார். இந்த திட்டத்தின் கீழ் கடனுக்கு எந்த உத்தரவாதமும் தேவையில்லை, ஒரே ஒரு உத்தரவாதம் மட்டுமே உள்ளது. அது மோடி, என்று அவர் கூறினார்.

தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடிகள் மற்றும் ஒரு காலத்தில் மறுக்கப்பட்டவர்கள் இன்று அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் உதவியுடன் வளர்ச்சியின் உச்சிகளை எட்டியுள்ளனர் என்பதை பிரதமர் சுட்டிக் காட்டினார். சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு பழங்குடிகளின் பெருமைக்கு மரியாதை செலுத்தும் வாய்ப்பு கிடைத்தது குறித்து பேசிய திரு மோடி, பிர்சா முண்டா பிரபுவின் பிறந்த நாளைக் குறிப்பிட்டார். இது இப்போது பழங்குடியினர் கௌரவ தினமாகக்  கொண்டாடப்படுகிறது என்றும், பழங்குடி சமூகங்களுக்கான பட்ஜெட்டை கடந்த காலத்தை விட, தற்போதைய அரசு 5 மடங்கு அதிகரித்துள்ளது குறித்தும் அவர் தெரிவித்தார்.

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் இருந்து நிறைவேற்றப்பட்ட முதல் சட்டமான மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து பிரதமர் பேசினார். பழங்குடிகள் மற்றும் பெண்களின் உரிமைகள் ஏன் இவ்வளவு காலமாக மறுக்கப்படுகின்றன என்று அவர் கேள்வி எழுப்பினார். "சோட்டா உதய்பூர் உட்பட முழு பழங்குடிப் பகுதியின் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளிடம் உங்கள் இந்த மகன் உங்கள் உரிமைகளை உறுதிப்படுத்த வந்திருக்கிறார் என்று சொல்ல நான் வந்துள்ளேன்" என்று அவர் கூறினார்.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் அனைத்து பெண்களும் பங்கேற்பதற்கான வழிகள் இப்போது திறக்கப்பட்டுள்ளன என்று பிரதமர் சுட்டிக் காட்டினார். எஸ்.சி மற்றும் எஸ்.டி சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்பையும் அவர் குறிப்பிட்டார். புதிய சட்டத்தில் எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கும் இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவின் முதல் பழங்குடிப் பெண் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் இந்த சட்டத்தில் கையெழுத்திட்டதை எடுத்துரைத்தார்.

உரையின் நிறைவாக பேசிய பிரதமர், அமிர்தகாலத்தின் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார், ஏனெனில் அதன் தொடக்கம் அற்புதமானது என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் குஜராத் ஆளுநர் திரு. ஆச்சார்யா தேவ்ரத், குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல், நாடாளுமன்ற உறுப்பினர் திரு சி.ஆர்.பாட்டீல் மற்றும் குஜராத் அரசு அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

பின்னணி

திறன் மேம்பாட்டுப் பள்ளித் திட்டத்தின் கீழ் ரூ.4500 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல திட்டங்களுக்கு பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டியதால் குஜராத் முழுவதும் உள்ள பள்ளி உள்கட்டமைப்புக்கு மிகப்பெரிய ஊக்கம் கிடைத்தது. குஜராத்தில் உள்ள பள்ளிகளில் கட்டப்பட்ட ஆயிரக்கணக்கான புதிய வகுப்பறைகள், ஸ்மார்ட் வகுப்பறைகள், கணினி ஆய்வகங்கள், ஸ்டெம் (அறிவியல், தொழில்நுட்ப பொறியியல் மற்றும் கணிதம்) ஆய்வகங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். இந்த இயக்கத்தின் கீழ் குஜராத் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான வகுப்பறைகளை மேம்படுத்தவும் மேம்படுத்தவும் அவர் அடிக்கல் நாட்டினார்.

'வித்யா சமிக்சா கேந்திரா 2.0' திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். குஜராத்தில் பள்ளிகளை தொடர்ந்து கண்காணித்து மாணவர்களின் கற்றல் விளைவுகளை மேம்படுத்துவதை உறுதி செய்த 'வித்யா சமிக்சா கேந்திரா'வின் வெற்றியின் அடிப்படையில் இந்த திட்டம் கட்டமைக்கப்படும். 'வித்யா சமிக்சா கேந்திரா 2.0' குஜராத்தின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் வட்டாரங்களில் வித்யா சமிக்சா கேந்திராக்களை நிறுவ வழிவகுக்கும்.

இந்த நிகழ்ச்சியின் போது, வதோதரா மாவட்டத்தின் சினோர் தாலுகாவில் 'வதோதரா தபோய்-சினோர்-மல்சார்-ஆசா சாலையில்' நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட புதிய பாலம் உட்பட பல வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். சாப் தலாவ் மறு வளர்ச்சித் திட்டம், தாஹோட்டில் நீர் வழங்கல் திட்டம், வதோதராவில் பொருளாதார நலிந்த பிரிவினருக்காக புதிதாக கட்டப்பட்ட சுமார் 400 வீடுகள், குஜராத் முழுவதும் 7500 கிராமங்களில் கிராம வைஃபை திட்டம்; மற்றும் தாஹோத்தில் புதிதாக கட்டப்பட்ட ஜவஹர் நவோதயா பள்ளி.

சோட்டா உதய்பூரில் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். கோத்ராவில் உள்ள ஒரு மேம்பால பாலம், பஞ்சமஹால்; மற்றும் மத்திய அரசின் 'ஒளிபரப்பு உள்கட்டமைப்பு மற்றும் நெட்வொர்க் மேம்பாடு திட்டத்தின் கீழ் தாஹோட்டில் உள்ள பண்பலை வானொலி ஒலிபரப்பு நிலையம் கட்டப்படும்.

***

AP/ANU/IR/RS/KPG


(Release ID: 1961381) Visitor Counter : 119